• +91 9385201453
  • dbdeepagam@gmail.com
Logo

Sermons

வாழ்வின் எச்சரிக்கைகள். இன்றைய இறைமொழி. புதன், 26 நவம்பர் ’25.

Wednesday, November 26, 2025   Fr. Yesu Karunanidhi   Archdiocese of Madurai

நெபுகத்னேசர் மனஉறுதி வாழ்வின் எச்சரிக்கைகள் சீடத்துவ துன்பங்கள்

இன்றைய இறைமொழி
புதன், 26 நவம்பர் ’25
ஆண்டின் பொதுக்காலம் 34-ஆம் வாரம், புதன்
தானியேல் 5:1-6, 13-14, 16-17, 23-28. லூக்கா 21:12-19

 

வாழ்வின் எச்சரிக்கைகள்

 

இளைஞன் ஒருவன் தன் விலைமிகு ஃபெராரி கார் ஒன்றை ஓட்டிக்கொண்டு மலைப்பக்கம் சென்றான். திடீரென, ‘ஏய் … மாடு!’ என்று சத்தம் கேட்டது. திரும்பிப் பார்த்தான். இளவல் ஒருத்தி, அவன் காரை நோக்கிக் கையை நீட்டி, ‘ஏய் … மாடு!’ என்று கத்திக் கொண்டிருந்தாள். ‘நானா … நானா .. மாடு … நீதான் மாடு!’ என்று கண்ணாடியை இறக்கிக் கொண்டு கத்த முனைந்தவன் சில நொடிகளுக்குள் எதிரில் நின்ற மாடு ஒன்றின்மேல் மோதி தன் வாகனத்தைப் பாழாக்கிக் கொண்டான். நின்றவள், ‘ஏய் … மாடு இருக்கிறது! கவனமாகப் போ!’ என எச்சரித்தாள். ஆனால், சென்றவனோ, அவள் தன்னைத்தான், ‘மாடு’ எனக் கடிவதாக நினைத்துக்கொண்டான்.

 

வாழ்வின் எச்சரிக்கைகள் நம்மைச் சுற்றி வலம் வந்துகொண்டே இருக்கின்றன. எச்சரிக்கைகளை ஏற்றுக்கொள்பவர்கள் தங்களையே தயார்படுத்தி வருகின்ற ஆபத்திலிருந்து தப்பித்துக்கொள்கின்றனர். எச்சரிக்கைகளை கண்டுகொள்ளாதவர்கள் அல்லது நிராகரிப்பவர்கள் தங்களையே பாழ்படுத்திக்கொள்கின்றனர்.

 

இன்றைய முதல் மற்றும் இரண்டாம் வாசகங்கள் எச்சரிக்கைகளைத் தாங்கி நிற்கின்றன.

 

முதல் வாசகத்தில், பாபிலோனிய அரசர் நெபுகத்னேசர் தன் மனைவியருடன் இணைந்து விருந்து கொண்டாடுகின்றார். விருந்து கொண்டாடுவது தவறா? இல்லை. ஆனால், விருந்தில் அவர்கள் பயன்படுத்தும் பாத்திரம் அனைத்தும் ஆண்டவருடைய ஆலயத்தின் பாத்திரங்கள். நினைத்துப் பார்க்கவே மனம் வேதனைகொள்கிறது. ‘தெய்வத்தின் மார்பில் சூடிய மாலை தெருவினிலே விழலாமா! தெருவினிலே விழுந்தாலும் வேறொர் கை தொடலாமா!’ என்பது போல, நெபுகத்னேசர் மற்றும் விருந்தினர்களின் கைகளில் ஆலயத்தின் பாத்திரங்கள் மதுப் பாத்திரங்களாக மாறி நிற்க, அங்கே தோன்றுகின்ற ஒரு மனிதனுடைய கைவிரல்கள், அரண்மனையின் உட்சுவரில் விளக்குத் தூணுக்கு எதிரே – அதாவது, அனைவருக்கும் தெரியும் வண்ணம் – எழுதத் தொடங்குகின்றன. ‘சுவரில் தோன்றிய எழுத்துகள்’ என்று ஆங்கிலத்தில் சொலவடை (‘இடியம்’) உருவாகக் காரணமான நிகழ்வு இதுவே.

 

‘நீர் தராசில் நிறுக்கப்பட்டீர். எடையில் மிகவும் குறைந்துள்ளீர்’ என்று ஆண்டவராகிய கடவுள் அவரை எச்சரிக்கின்றார். அதாவது, ‘நான் நினைத்தது போல நீ இல்லை. என்னை ஏமாற்றிவிட்டாய். நான் ஏமாந்து போனேன்’ என்று கடவுள் வருந்துகின்றார். நெபுகத்னேசர் அரசருக்கு வழங்கப்படும் எச்சரிக்கை அவர் செய்த தவறுக்காக அவருக்குக் கிடைக்கும் தண்டனையாக இருக்கிறது.

 

நற்செய்தி வாசகத்தில், இயேசு நேர்முகமான எச்சரிக்கை அளிக்கின்றார். அதாவது, தன்னைப் பின்பற்றும் சீடர்கள் பெறுகின்ற துன்பங்களை முன்னறிவித்து, அவர்கள் விழிப்போடு நடந்துகொள்ள அறிவுறுத்துகின்றார். இந்த எச்சரிக்கை அவர்களுடைய தவறுக்காகக் கிடைக்கும் தண்டனை பற்றியது அல்ல. மாறாக, அவர்கள் மேற்கொண்ட தெரிவுக்காக அவர்கள் எதிர்கொள்ள வேண்டிய துன்பம் பற்றிய எச்சரிக்கை.

 

முதல் வாசகத்தின் எச்சரிக்கை, வருகின்ற ஆபத்தைக் குறித்தாக இருக்கிறது.

 

நற்செய்தி வாசகத்தின் எச்சரிக்கை, ‘உங்கள் தலைமுடி ஒன்றுகூட விழவே விழாது. நீங்கள் மனஉறுதியோடு இருந்து உங்கள் வாழ்வைக் காத்துக்கொள்ளுங்கள்’ என்ற ஆறுதலைத் தாங்கி நிற்கிறது.

 

வாழ்வின் எச்சரிக்கைகள் நாம் எதிர்பாராமல் நமக்கு வருகின்றன. உடனடியான செயல்பாட்டை அவை நம்மிடமிருந்து எதிர்பார்க்கின்றன. உடனடியாகச் செயல்படுபவர்கள் ஆபத்திலிருந்து தப்பித்துக்கொள்கின்றனர்.

 

இன்று நாம் கற்க வேண்டிய பாடங்கள் மூன்று:

 

(அ) இன்று என்னிடம் வரும் வாழ்வின் எச்சரிக்கைகளுக்கு எனது பதிலிறுப்பு எவ்வாறாக உள்ளது?

 

(ஆ) நான் தராசில் நிறுத்தப்பட்டால், எடை குறைவேனா? எடை குறைகின்ற என் வாழ்வின் பகுதிகள் எவை?

 

(இ) எச்சரிக்கைகளைக் கடந்து செல்ல மனஉறுதி தேவை. மனஉறுதியைக் குலைக்கக் கூடிய என் அக, மற்றும் புறக் காரணிகள் எவை?

 

அருள்திரு யேசு கருணாநிதி
மதுரை உயர்மறைமாவட்டம்
இரக்கத்தின் தூதர்

 


 

Share: