• +91 9385201453
  • dbdeepagam@gmail.com
Logo

Sermons

ஆண்டவர் கேட்பதும் மனிதர் கேட்பதும். இன்றைய இறைமொழி. திங்கள், 20 ஜூலை 2026.

Monday, July 20, 2026   Rev. Fr. Yesu Karunanidhi   Archdiocese of Madurai

இன்றைய இறைமொழி
திங்கள், 20 ஜூலை 2026
பொதுக்காலம் 15-ஆம் வாரம்
மீக் 6:1-4, 6-8. மத் 12:38-42

 

ஆண்டவர் கேட்பதும் மனிதர் கேட்பதும்

 

மனித உறவுநிலைகள் பெரும்பாலும் விருப்பம் அல்லது எதிர்பார்ப்பை முன்வைத்தே அமைகின்றன. கணவன் மனைவியிடம், மனைவி கணவனிடம், பெற்றோர் பிள்ளைகளிடம், பிள்ளைகள் பெற்றோர்களிடம், தலைவர் பணியாளரிடம், பணியாளர் தலைவரிடம், நண்பர்கள் மற்றவர்களிடம் என நாம் நிறைய விருப்பங்கள் அல்லது எதிர்பார்ப்புகளை முன்மொழிகிறோம். நம் விருப்பங்களும் எதிர்பார்ப்புகளும் நிறைவேறாமல்போனால் உறவு தடையை அல்லது விரிசலைச் சந்திக்கிறது.

 

கடவுளுக்கும் நமக்குமான உறவில், கடவுள் மனிதரிடம் கேட்பது, விரும்புவது, எதிர்பார்ப்பது என்ன? இந்தக் கேள்விக்கு விடையாக அமைகிறது இன்றைய முதல் வாசகம். கடவுளுக்கு விருப்பமானவை பலிகள் என்று மனிதர்கள் நினைத்துக்கொண்டிருக்க, கடவுள் அவர்களுடைய புரிதலை மாற்றுகிறார்:

 

‘நேர்மையைக் கடைப்பிடித்தலையும், இரக்கம் கொள்வதில் நாட்டத்தையும், உன் கடவுளுக்கு முன்பாக தாழ்ச்சியோடு நடந்துகொள்வதையும் தவிர, வேறு எதை ஆண்டவர் உன்னிடம் கேட்கிறார்’ என்று மீக்கா இறைவாக்குரைக்கிறார்.

 

நேர்மை, இரக்கம், தாழ்ச்சி ஆகிய பண்புகளுடன் கூடிய வாழ்க்கையை இறைவன் நம்மில் எதிர்பார்க்கிறார். நாமோ பல நேரங்களில் சரியானவற்றைப் பின்பற்றுவதற்குப் பதிலாக, எளிதானவற்றையே – பலி செலுத்துதல் – பின்பற்ற விரும்புகிறோம்.

 

நற்செய்தி வாசகத்தில், இயேசுவிடம் மனிதர்கள் ஒன்றைக் கேட்கிறார்கள்.

 

இயேசுவோடு வாழ்ந்து, அவருடைய போதனையைக் கேட்டு, அவருடைய வல்ல செயல்களைக் கண்ட அவருடைய சமகாலத்து மக்கள், அவர்மேல் நம்பிக்கை கொள்வதற்கு இடறல்படுகிறார்கள். ‘நீர் அடையாளம் ஒன்று காட்ட விரும்புகிறோம்!’ என்கிறார்கள்.

 

தம்மையே யோனா, சாலமோன் ஆகியோரைவிடப் பெரியவர் என முன்மொழிகிறார் இயேசு.

 

கடவுளின் கேட்டல் அவருடைய நம்பகத்தன்மையிலிருந்து புறப்படுகிறது.

 

மனிதக் கேட்டல் அவர்களுடைய நம்பிக்கையின்மையிலிருந்து புறப்படுகிறது.

 

அருள்திரு யேசு கருணாநிதி
மதுரை உயர்மறைமாவட்டம்

 

இது ஒரு ‘யெஸ்னி ப்ரேய்ஸ்’ முயற்சி

Source: Rev. Fr. Yesu Karunanidhi

 


 

Share: