முன்னர் நான் அவரைப் பழித்துரைத்தேன்; ஆயினும் அவர் எனக்கு இரங்கினார்.
திருத்தூதர் பவுல் திமொத்தேயுவுக்கு எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 1: 1-2, 12-14
விசுவாச அடிப்படையில் என் உண்மையான பிள்ளை திமொத்தேயுவுக்கு நம் மீட்பராம் கடவுளும், நம்மை எதிர்நோக்குடன் வாழச் செய்யும் கிறிஸ்து இயேசுவும் இட்ட கட்டளையின்படி, கிறிஸ்து இயேசுவின் திருத்தூதனான பவுல் எழுதுவது: தந்தையாம் கடவுளிடமிருந்தும், நம் ஆண்டவராம் இயேசு கிறிஸ்துவிடமிருந்தும் அருளும் இரக்கமும் அமைதியும் உரித்தாகுக!
எனக்கு வலுவூட்டும் நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவுக்கு நன்றி செலுத்துகின்றேன். ஏனெனில் நான் நம்பிக்கைக்குரியவன் என்று கருதி அவர் என்னைத் தம் திருத்தொண்டில் அமர்த்தினார். முன்னர் நான் அவரைப் பழித்துரைத்தேன்; துன்புறுத்தினேன்; இழிவுபடுத்தினேன். ஆயினும் நம்பிக்கை கொண்டிராத நிலையில் நான் அவ்வாறு நடந்ததால், அவர் எனக்கு இரங்கினார். இயேசு கிறிஸ்துவோடு இணைந்த நிலையில் ஏற்படும் நம்பிக்கையோடும் அன்போடும் நம் ஆண்டவரின் அருள் அளவின்றிப் பெருகியது.
ஆண்டவரின் அருள்வாக்கு.
திபா 16: 1-2,5. 7-8. 11 (பல்லவி: 5a)
பல்லவி: ஆண்டவர்தாமே என் உரிமைச் சொத்து.
இறைவா, என்னைக் காத்தருளும்; உம்மிடம் நான் அடைக்கலம் புகுந்துள்ளேன்.
நான் ஆண்டவரிடம் ‘நீரே என் தலைவர்; உம்மையன்றி வேறு செல்வம் எனக்கு இல்லை’ என்று சொன்னேன்.
ஆண்டவர்தாமே என் உரிமைச் சொத்து; அவரே என் கிண்ணம்; எனக்குரிய பங்கைக் காப்பவரும் அவரே. - பல்லவி
எனக்கு அறிவுரை வழங்கும் ஆண்டவரைப் போற்றுகின்றேன்; இரவில்கூட என் மனச்சான்று என்னை எச்சரிக்கின்றது.
ஆண்டவரை எப்போதும் என் கண்முன் வைத்துள்ளேன்; அவர் என் வலப் பக்கம் உள்ளார்; எனவே, நான் அசைவுறேன். - பல்லவி
வாழ்வின் வழியை நான் அறியச் செய்வீர்; உமது முன்னிலையில் எனக்கு நிறைவான மகிழ்ச்சி உண்டு; உமது வலப் பக்கத்தில் எப்போதும் பேரின்பம் உண்டு. - பல்லவி
யோவா 17: 17b, 17a
அல்லேலூயா, அல்லேலூயா! உமது வார்த்தையே உண்மை. உண்மையினால் அவர்களை உமக்கு அர்ப்பணமாக்கியருளும். அல்லேலூயா.
பார்வையற்ற ஒருவர் பார்வையற்ற வேறொருவருக்கு வழிகாட்ட இயலுமா?
✠ லூக்கா எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 6: 39-42
அக்காலத்தில், இயேசு அவர்களுக்கு உவமையாகக் கூறியது: “பார்வையற்ற ஒருவர் பார்வையற்ற வேறொருவருக்கு வழிகாட்ட இயலுமா? இருவரும் குழியில் விழுவரல்லவா? சீடர் குருவை விட மேலானவர் அல்ல. ஆனால் தேர்ச்சி பெற்ற எவரும் தம் குருவைப் போல் இருப்பர்.
நீங்கள் உங்கள் கண்ணில் இருக்கும் மரக் கட்டையைப் பார்க்காமல் உங்கள் சகோதரர் அல்லது சகோதரியின் கண்ணில் இருக்கும் துரும்பைக் கூர்ந்து கவனிப்பதேன்? உங்கள் கண்ணில் இருக்கும் மரக் கட்டையையே நீங்கள் பார்க்காமல் இருந்துகொண்டு உங்கள் சகோதரர் அல்லது சகோதரியிடம், ‘உம் கண்ணில் இருக்கும் துரும்பை எடுக்கட்டுமா?’ என்று எப்படிக் கேட்க முடியும்?
வெளிவேடக்காரரே, முதலில் உங்கள் கண்ணில் இருக்கும் மரக்கட்டையை எடுத்து எறியுங்கள். அதன்பின் உங்கள் சகோதரர் அல்லது சகோதரியின் கண்ணில் இருக்கும் துரும்பை எடுக்க உங்களுக்குத் தெளிவாய்க் கண் தெரியும்.”
ஆண்டவரின் அருள்வாக்கு.
Share: