• +91 9385201453
  • dbdeepagam@gmail.com
Logo

Sermons

தோற்ற மாயை! இன்றைய இறைமொழி. புதன், 26 ஆகஸ்ட் 2026.

Wednesday, August 26, 2026   Rev. Fr. Yesu Karunanidhi   Archdiocese of Madurai

இன்றைய இறைமொழி
புதன், 26 ஆகஸ்ட் 2026
பொதுக்காலம் 21-ஆம் வாரம்
2 தெச 3:6-10, 16-18. மத் 23:27-32

 

தோற்ற மாயை!

 

இயேசு தம்முடைய சமகாலத்துப் பரிசேயர்கள், மறைநூல் அறிஞர்களைக் கடிந்துகொள்ளும் நிகழ்வு இன்றைய நற்செய்தி வாசகத்திலும் தொடர்கிறது.

 

அவர்களின் தோற்ற மாயை குறித்து எச்சரிக்கிறார் இயேசு.

 

‘வெள்ளையடிக்கப்பட்ட கல்லறைகள்’ என்னும் சொல்லாடல் இரண்டு நிலைகளில் இங்கே பயன்படுத்தப்பட்டுள்ளது.

 

முதலில், பரிசேயர்கள், மறைநூல் அறிஞர்களின் தோற்ற மாயை. இயேசுவின் சமகாலத்தில் கல்லறைகள் இரண்டு வகைகளில் இருந்தன. முதல் வகை, மலைகளின் குகைகளில் குடைந்து உருவாக்கப்பட்டவை. இரண்டாம் வகை, நிலத்தைத் தோண்டி இறந்தவர்களை அடக்கம் செய்து அதற்கு மேல் அவர்களுக்கு நினைவிடம் எழுப்புவது. இந்த இரண்டாம் வகைக் கல்லறைகளையே இயேசு இங்கே குறிப்பிடுகிறார். வெளிப்புறத்தில் பளிங்குக் கற்களாலும், வண்ணங்களாலும் அலங்கரிக்கப்படுகிற கல்லறைகள் சில நேரங்களில் தோண்டப்பட்டு அதிலேயே இறந்த குடும்ப உறுப்பினர்கள் அல்லது உறவினர்கள் அடக்கம் செய்யப்படுவதுண்டு. அப்படித் தோண்டப்படுகிற கல்லறைகளில் எலும்பும் அழுகிய உடல்களும் இருக்கும். இதையே உருவகமாகத் தொடுக்கிற இயேசு, பரிசேயர்கள், மறைநூல் அறிஞர்கள் வெளிப்புறத்தில் தங்கள் சமய உடைகள் அணிந்து ஏற்படுத்தும் தோற்றம் மாயையானது. ஏனெனில், அவர்களுக்கு உள்ளே அழுக்கு – வன்முறையும் வன்மமும் – நிறைந்திருக்கிறது. இயேசுவின்மேல் அவர்கள் கொண்டுள்ள வன்மமும் இயேசுவின்மேல் அவர்கள் விரைவில் தொடுக்கவிருந்த வன்முறையும் இங்கே அழுக்கு என புரிந்துகொள்ளப்படலாம்.

 

இரண்டாவதாக, இறந்த இறைவாக்கினர்களுக்குக் கல்லறை கட்டுதல். இறைவாக்கினர்களின் கல்லறைகளை வழிபடுகிற வழக்கம் யூதர்கள் நடுவே இருந்தது. இன்றும் இருக்கிறது. இறைவாக்கினர்கள் அறிவித்த செய்திக்குச் செவிகொடுக்காமல் அவர்களைக் கொலை செய்துவிட்டு, அவர்களுடைய கல்லறைகளை வழிபடுவதில் பயன் என்ன? எனக் கேட்கிறார் இயேசு. இதுவும் ஒருவகையில் தோற்ற மாயையே! மறைமுகமாக, தாமும் அவர்களால் விரைவில் கொல்லப்படுவதை முன்னுரைக்கிறார் இயேசு.

 

முதல் வாசகத்தில், தெசலோனிக்கத் திருஅவையில் சோம்பித் திரிந்த நம்பிக்கையாளர்களுக்கு அறிவுரை வழங்குகிறார் பவுல். உலகம் விரைவில் அழியப் போகிறது என்னும் கருத்தைக் கொண்டிருந்த தெசலோனிக்க நகர மக்கள், எதுவும் செய்யாமல் சோம்பித் திரிந்தார்கள். அதுதான் எல்லாமே அழியப் போகிறதே, அப்படியிருக்க, என்ன செய்து என்ன பயன்? என்பது அவர்களுடைய கருத்தாக இருந்தது. தம்முடைய உழைப்பின் முன்மாதிரியைத் தருகிறார் பவுல். உலகம் முடிவு, இறந்தோர் உயிர்ப்பு என்பவை எதிர்நோக்காக நம் உள்ளத்தில் இருந்தாலும், இன்றைய நம் வாழ்வுக்கான உழைப்பை நாம் கொடுக்க வேண்டும் என்பது பவுலுடைய கருத்து.

 

இன்றைய வாசகங்கள் நமக்குத் தரும் பாடங்கள் எவை?

 

(அ) தோற்ற மாயை தவிர்ப்பது. நம் வெளிப்புறத் தோற்றத்துக்கும் நம் உள்புற இயல்புக்கும் உள்ள தூரம் குறைய வேண்டும். நம் உள்ளார்ந்த இயல்பு புதுப்பிக்கப்படும்போது நாம் வெளிப்புறத்திலும் அழகு பெறுகிறோம்.

 

(ஆ) உழைப்பு பற்றிய நம் புரிதல் என்ன? உழைப்பு நமக்கு தன்னிறைவைத் தருகிறது. மற்றவர்களுக்கு நாம் சுமையாக மாறிவிடாதபடி நம்மைத் தடுக்கிறது.

 

அருள்திரு யேசு கருணாநிதி
மதுரை உயர்மறைமாவட்டம்

 

இது ஒரு யெஸ்னி ப்ரேய்ஸ் முயற்சி

Source: Rev. Fr. Yesu Karunanidhi

 


 

Share: