• +91 9385201453
  • dbdeepagam@gmail.com
Logo

Sermons

நம்பிக்கைக்குரிய அறிவாளி. இன்றைய இறைமொழி. வியாழன், 27 ஆகஸ்ட் 2026.

Thursday, August 27, 2026   Rev. Fr. Yesu Karunanidhi   Archdiocese of Madurai

இன்றைய இறைமொழி
வியாழன், 27 ஆகஸ்ட் 2026
பொதுக்காலம் 21-ஆம் வாரம்
புனித மோனிக்கா, நினைவு

1 கொரி 1:1-9. மத் 24:42-51

 

நம்பிக்கைக்குரிய அறிவாளி

 

இன்றைய நற்செய்தி இரு பகுதிகளாக அமைந்துள்ளது. முதல் பகுதியில், விழிப்பாயிருக்கும் உரிமையாளர் பற்றிப் பேசுகின்றார் இயேசு. விழிப்பாயிருக்கின்ற உரிமையாளர் தன் உடைமைகள் களவு போகாதவாறு காத்துக்கொள்கின்றார். இரண்டாவது பகுதியில், இரு வகை மேற்பார்வையாளர்களை முன்வைக்கின்றார் இயேசு. நம்பிக்கைக்குரிய மற்றும் அறிவாளியான பணியாளர் வேலையாள்களுக்குரிய உணவை நேரத்துக்குத் தருவதுடன் தலைவர் வரும்போது தன் பணியைச் செய்துகொண்டு இருக்கின்றார். பொல்லாத பணியாளரோ வேலைக்காரரை அடிக்கவும், மற்றவர்களுடன் சேர்ந்து குடிக்கவும் செய்கின்றார். மேலும், தலைவரின் வருகைக்கு ஆயத்தம் இல்லாதவராகவும் இருக்கின்றார்.

 

மேற்காணும் இரண்டு பணியாளர்களில் முன்னவர் நம்பிக்கைக்குரிய அறிவாளியாகவும், பின்னவர் பொல்லாதவராகவும் இருக்கின்றார்.

 

நம்பிக்கைக்குரிய அறிவாளி தான் செய்ய வேண்டிய வேலைகளைச் செய்கின்றார்.

 

பொல்லாதவரோ தனக்குத் தானே ஓர் எண்ணத்தை வகுத்துக்கொண்டு, அந்த எண்ணத்தின்படி தன் தலைவர் செயலாற்றுவதாக நினைக்கின்றார். இந்த வகையில் அவர் தனக்கு எதிராகவும் மற்றவர்களுக்கு எதிராகவும் தீமை செய்யத் தொடங்குகின்றார்.

 

இந்தப் பொறுப்பாளர் இரண்டு குணங்களைப் பெற்றிருக்க வேண்டும் என்கிறார் இயேசு: ‘நம்பிக்கைக்கு உரியவர்,’ ‘அறிவாளி.’ நம்பிக்கை உரியவராய் இருத்தல் என்பது மேல்நோக்கிச் செல்லக் கூடியது. அறிவாளியாய் இருத்தல் என்பது எனக்குச் சமமாக அல்லது கீழ்நோக்கி இருத்தல் வேண்டும். இது மாறினால்தான் நிர்வாகப் பிரச்சினை வரும். எடுத்துக்காட்டாக, ஒரு பள்ளியில் வேலை பார்க்கும் ஆசிரியர் தன்னுடைய தலைமை ஆசிரியரிடம் அறிவாளியாய் இருக்க நினைத்தால் அது அவருடைய வேலைக்கு ஆபத்தாய் முடியும். அதுபோல, ஆசிரியர் தனக்குக் கீழிருக்கும் அலுவலகப் பணியாளர்களுக்கும் மாணவர்களுக்கும் நம்பிக்கைக்கு உரியவராய் நடக்க ஆரம்பித்தால் மேலிருப்பவர்களின் அதிருப்தியைச் சம்பாதிக்க நேரிடும். ஆக, ‘வீட்டுப் பொறுப்பாளர்’ இந்த இரண்டு பண்புகளையும் சரியான திசையில் கொண்டிருக்க வேண்டும். இரண்டுமே மதிப்பீடுகள்தாம். ஆனால், அவற்றின் திசைகளே அவற்றை பயனுள்ளவை ஆக்குகின்றன.

 

இந்தப் பொறுப்பாளர் மூன்று குணங்களைப் பெற்றிருத்தல் கூடாது: ஒன்று, தனக்குத்தானே சாக்குப் போக்கு சொல்லக் கூடாது, இரண்டு, தனக்குக் கீழிருக்கும் பணியாளர்களை அடித்தல் கூடாது, மற்றும் மூன்று, மயக்கமுற உண்ணவும் குடிக்கவும் கூடாது. ஆக, இவருடைய மனம், கரம், ஆன்மா அனைத்தும் தூய்மையாக இருக்க வேண்டும்.

 

மேலும், பொறுப்பாளர் நிலை என்பது இவர் தெரிந்தெடுத்த நிலை அல்ல. மாறாக, இவர்மேல் சுமத்தப்பட்ட ஒன்று. இவர் தன் தலைவரின் விருப்பத்திற்குக் கீழ் தன்னுடைய விருப்பத்தை வைத்துவிட்டார். ஆக, பொறுப்புணர்வு இன்னும் அதிகம் தேவை. இதுவே, இவரிடம் அதிகம் ஒப்படைக்கப்பட்ட நிலை.

 

இன்றைய முதல் வாசகத்தில் (1 கொரி 1:1-9), ‘கிறிஸ்துவுடன் இணைக்கப்பெற்று நீங்கள் எல்லா வகையிலும் செல்வர் ஆனீர்கள்’ என்று தன் இறைமக்களைப் பார்த்து மொழிகின்றார் பவுல். கிறிஸ்துவின் உடனிருப்பு அவர்களின் கைகளை நிரப்புகின்றது.

 

இன்று புனித மோனிக்காவை நினைவுகூர்கிறோம். ‘உன் கண்ணீரின் மகன் உன்னிடம் திரும்புவான்’ என்று புனித அகஸ்தினாரைப் பற்றி இவரிடம் சொல்கிறார் புனித அம்புரோஸ். தன் நம்பிக்கையிலும் இறைவேண்டலிலும் இறுதி வரை உறுதியாக இருந்த புனித மோனிக்கா நல்ல பொறுப்பாளருக்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு.

 

அருள்திரு யேசு கருணாநிதி
மதுரை உயர்மறைமாவட்டம்

 

இது ஒரு யெஸ்னி ப்ரேய்ஸ் முயற்சி

Source: Rev. Fr. Yesu Karunanidhi

 


 

Share: