தீபகத்திலிருந்து இறையாசீர்!
கிறிஸ்து பிறப்பு விழாவானது ஒவ்வொரு ஆண்டும் நம் இதயங்களை நம்பிக்கையால் நிரப்பும் திருநாளாகும். ஆனால், இன்றைய உலகில் நடக்கும் சோகமான நிகழ்வுகளுக்கிடையில், அன்புக்கு எதிரான வெறுப்பு, உண்மைக்கு எதிரான பொய்மை, சமாதானத்தை குலைக்கும் வன்முறை, சமத்துவத்தை பறிக்கும் அநீதி... இச்சூழலில் கிறிஸ்து பிறப்பு விழாவானது எவ்வளவு பொருத்தமானது என்ற கேள்வி நமக்கு எழலாம். மனிதமற்ற நடத்தைகள் அதிகரிக்கும் சூழலில் கிறிஸ்துமஸ் கொண்டாடுவது வெறும் வெளிப்புற விழாவா? அல்லது நம் கையிலே இருக்கும் மாற்றத்திற்கான ஒரு வாய்ப்பா?
நமது நம்பிக்கை: கிறிஸ்து பிறப்பு விழா என்பது ஒரு காலத்தின் கொண்டாட்டம் அல்ல; அது நாம் மீண்டும் பிறப்பதற்கான ஒரு அறிய வாய்ப்பு: இது ஒரு அன்பின் பிறப்பு, உண்மையின் பிறப்பு, நீதியின் பிறப்பு, சமாதானத்தின் பிறப்பு.
|
இருளை அகற்றும் ஒரு ஒளி: மனித நிலையைக் கண்டு இறங்கிய கடவுள் |
அன்புக்குரியவர்களே, கடவுள் மனிதராய்த் தோன்றியது, ஒளி இருளுக்குள் வந்த நேரம். அன்பு குறைந்த உலகில் அன்பாகவே பிறக்கத் திருவுளம் கொண்ட கடவுள் நம் கற்பனைக்கு அப்பாற்பட்ட பேரொளி. இன்று நம் சமூகத்தில் உள்ள பிளவுகள், கொடுமைகள், பாகுபாடுகள், அநீதி... இவை எல்லாம் இருளைச் சார்ந்தவை. ஆனால் அந்த இருளை அகற்ற ஒரு சிறிய ஒளியே போதும் அவ்வொளியே நம் கிறிஸ்து, கிறிஸ்துவே நம் ஒளி.
கிறிஸ்து பிறப்பு விழா நமக்கு நினைவூட்டுவது: ஒளி எப்போதும் இருளை வெல்லும். அன்பு எப்போதும் வெறுப்பை வெல்லும். உண்மை எப்போதும் பொய்யை வெல்லும்.
|
திருத்தந்தையின் வழியில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் |
திருத்தந்தை பிரான்சிஸ் நமக்குக் கூறும் மிகப் பெரிய சவால்:
"கிறிஸ்துவைப்போல இருங்கள், மனிதரை முதலில் பாருங்கள், அவரின் கண்ணீரை கவனியுங்கள், அவரின் பசியை உணருங்கள், அவரின் காயத்தைக் குணப்படுத்துங்கள்." திருத்தந்தையின் பாதையில் நமக்கு ஒரு தெளிவான அழைப்பு உள்ளது... தாழ்மையுடன், எளிமையுடன், தன்னலமின்றி செயல்படுதல்.
இந்த உலகம் பல விதமான காயங்களால் நிறைந்துக் கொண்டிருக்கிறது:
• தாய், தந்தை இல்லா குழந்தைகள்,
• பாதுகாப்பை தேடும் பெண்கள்,
• பசியுடன் உறங்கும் குடும்பங்கள்,
• வேலையில்லாத, வேலையிழந்த இளைஞர்கள்,
• தனிமையில் வாடும் முதியவர்கள்,
• ஒடுக்கப்பட்டோரின் குரல்,
|
கிறிஸ்துமஸ் செயலுக்கான அழைப்பு, மாற்றத்திற்கான அழைப்பு |
கிறிஸ்து பிறப்பு கொண்டாட்டத்தில் தீபகம் ஒவ்வொருவரிடமும் ஒரு சிறிய, ஆனால் வலிமையான அழைப்பை விடுக்கிறது:
(1) ஒரு குடும்பத்தைச் சந்திக்கலாம் - அவர்களின் தேவைகளை பூர்த்தி செய்யலாம். இச் சிறிய அன்பளிப்பே அவர்களுக்குப் பெரும் நம்பிக்கையாக மாறும்.
(2) ஒரு தனிமனிதருக்கு நேரம் ஒதுக்கலாம் - நம் அருகில் இருக்கும் பலர் பேசாத காயங்களைக் கொண்டுள்ளனர். அவர்களுடன் சில நிமிடங்கள் பேசுவதே ஒரு சிறிய அன்பளிப்பு. கிறிஸ்து பிறப்பு விழாவின் ஒரு உண்மை செய்தி.
(3) ஒரு தவறை மன்னிக்கலாம் - மன்னிப்பு என்பது நாம் கொடுக்கும் மிகப் பெரிய பரிசு.
(4) குடும்பத்தில் சமாதானத்தை உருவாக்கலாம் - கிறிஸ்துமஸ் மரத்தை அலங்கரிப்பதைப் போல, நம் குடும்ப உறவுகளையும் செம்மைப்படுத்தலாம்
(5) ஒருவருக்கு ஒருவர் நம் புன்னகையையே பரிசாக அளிக்கலாம் புன்னகை கிறிஸ்துவின் பரிசு; அது நம்மிடமிருந்து மற்றவருக்கான சிறந்த "ஒளி."
|
'மற்றொருவருக்காக பிறப்பது' |
கிறிஸ்து பிறப்பு கொண்டாட்டத்தின் உண்மை அழகு என்னவென்றால் இயேசு பிறந்தது அவருக்காக அல்ல, நமக்காக. அதுபோல இந்த கிறிஸ்து பிறப்பு கொண்டாட்டத்தில் இயேசு நிக்கோதேமுவுக்கு கூறியது போன்று நாம் மீண்டும் பிறக்க வேண்டும்...
• ஒரு ஏழையின் நம்பிக்கையாக, பிறக்க வேண்டும்
• ஒரு நோயாளியின் ஆறுதலாக, பிறக்க வேண்டும்
• ஒரு பெண்ணின் பாதுகாப்பாக, பிறக்க வேண்டும்
• ஒரு இளைஞனின் எதிர்காலமாக, பிறக்க வேண்டும்
• ஒரு குடும்பத்தின் சமாதானமாக, பிறக்க வேண்டும்
• ஒரு குழந்தையின் புன்னகையாக. பிறக்க வேண்டும்
• ஒடுக்கப்பட்டோரின் விடுதலையாக, பிறக்க வேண்டும்
கிறிஸ்து பிறப்பு கொண்டாட்டம் என்பது நமது வாழ்வை மற்றவர்களுக்கு அர்ப்பணிப்பதில் தொடங்குகிறது.
அன்பு நண்பர்களே, தீபகம் இந்த ஆண்டும் கிறிஸ்துவின் ஒளியாக சிறப்பாக செயல்பட்டு கொண்டிருக்கிறது...
குழந்தைகள், இளைஞர்கள், குடும்பங்கள், ஆசிரியர்கள் வாழ்வில் நம்பிக்கையை ஊட்டி, அன்பின் ஒளியை பகிர்ந்து, நம் மனங்களை மாற்றி, கிறிஸ்துவின் நற்செய்தியை வாழ்வாக மாற்றுகிறது.
இந்த கிறிஸ்து பிறப்பு கொண்டாட்டத்தில் நம்மை நோக்கி இயேசு நமக்குச் சொல்வதை போல: "நாமே இவ்வுலகின் ஒளி!" அந்த ஒளியாக நம் குடும்பத்தில், நம் பங்கில், நம் சமுதாயத்தில் நாம் வாழ்வோம்.
என்றும் அன்புடன்
அருட்பணி. ஜேசுதாஸ் ச.ச
இயக்குநர் தீபகம்