திருத்தந்தை பிரான்சிஸ் புனித தோமையாரை நமது இரட்டை சகோதரர் என்று அழைக்கின்றார். இரட்டை பிறவி சகோதரர்கள் / சகோதரிகளின் குணநலன்கள், பழக்க வழக்கங்கள் ஒத்திருக்கும். நமக்கும் புனித தோமாவுக்கும் இரட்டையர்கள்போல பல ஒற்றுமைகள் இருக்கின்றன.
புனித தோமா ‘சந்தேக தோமா’ என்று அழைக்கப்படுகின்றார். ஆனாலும், அவரை ‘புனித தோமா” என்றே அழைக்கின்றோம். சந்தேகத்தில் திருஅவையின் வரலாற்றில் ஒரு முக்கியமனான இடத்தைப் பிடித்தவர். தோமா மட்டும் சந்தேகப்படவில்லை, மற்ற திருத்தூதர்கள் அனைவரும் சந்தேகப்பட்டவர்கள்தான். புனித மாற்கு, திருத்தூதர்களின் நம்பிக்கையில்லாத் தன்மையையும், கடின உள்ளத்தையும், இயேசு கடிந்து கொள்கிறார் என குறிப்பிடுகிறார் (மாற்கு 16:14). புனித தோமாவின் "சந்தேகம்" - நம்பிக்கை இன்மை - நமக்கு ஒரு சில பாடங்களை கற்றுத் தருகிறது.
முதலாவதாக, இயேசு தமது இறுதி உணவின்போது தமது பாடுகளைப்பற்றியும் இறப்பைப்பற்றியும் குறிப்பிடும் போது ‘நான் போகும் இடத்திற்கு உங்களுக்கு வழி தெரியும் என்று கூறும்போது தோமா, “ஆண்டவரே! நீர் எங்கு போகிறீர் என்றே தெரியாதபோது எப்படி எங்களுக்கு வழி தெரியும்?” என்று துணிவுடன் கேள்வி கேட்டார். நாம் கேள்விக் கேட்க துணியவேண்டும். இறைவனிடம் நாம் கேள்வி கேட்கலாம், சரியான புரிதல் பெறலாம். ஆயிரம் கேள்விகள் ஒரு சந்தேகத்தை ஈடு செய்ய முடியாது.
இரண்டாவதாக, புனித தோமா நம்பிக்கை கொள்வதால் நடக்கவிருக்கும் விளைவுகளைப்பற்றி நமக்கு கற்பிக்கின்றார். அதாவது நம்பிக்கை என்பது வாழ்வதற்கானது, செயலுக்கானது, தோமா நம்பிக்கை கொள்வதால் நாம் வாழும் நம்பிக்கை, செயல்பாடுகள் நம்மை ஒரு சாட்சியாக வாழ வழிவகுக்கும். ஒரு மறைசாட்சியாக மரிப்பதற்கும் நம்மை இட்டுச்செல்லும். இலாசர் இறப்பிற்கு, இயேசு பெத்தானியாவிற்கு செல்ல திட்டமிட்டபோது, சிலர் அவரை அங்கு செல்லவிடாமல் தடுத்தார்கள். அவர் அங்கு சென்றால் அவர் சாவதற்கு உள்ளாவார் என்று இயேசுவை தடுத்தனர், எச்சரித்தனர். ஆனால் தோமா, “நாமும் அவரோடு செல்வோம், மரிப்போம்” என்று அவரது விசுவாசத்தை செயல்படுத்தி நமக்கு வெளிப்படுத்தினார். இயேசுவுக்காக தாம் இறக்கவும் தயார் என்ற நம்பிக்கையை அறிக்கையிடுகின்றார்.
இறுதியாக, புனித தோமா உயிர்த்த ஆண்டவரை அவரின் காயங்களால் ஏற்பட்ட தழும்புகளில் தன் விரலையிட்டு விசுவசித்தவர். அதனால் அவர் ‘என் ஆண்டவரே என் கடவுளே” என்ற விசுவாச அறிக்கையை உலகிற்கு அறிவித்தார். “என் ஆண்டவரே! என் கடவுளே” என்ற விசுவாச அறிக்கை ‘கடவுள்” எனக்கு சொந்தமானவர் என்றும், நான் கடவுளுக்கு மட்டும் சொந்தமானவன் என்றும் இதன் வழியாக நாம் விசுவசிக்கின்றோம். “கடவுள் நம்மோடு”, “கடவுள் நம்மிடையே வந்தார்”, “கடவுள் எனக்காக பிறந்தார்”, “கடவுள் எனக்காக வாழ்ந்தார்”, “கடவுள் எனக்காக பாடுபட்டார்”, “கடவுள் எனக்காக இறந்தார்”, “எனக்காக உயிர்த்தார்”… இதுவே நம் நம்பிக்கை.
புனித தோமாவின் விழாவில் நாமும் இயேசுவோடு செல்லவும், இறக்கவும், அவரின் காயங்களால் நாம் குணமடையவும், சாட்சி சொல்லவும், இயேசுவை அறிவிக்கவும், அவரின் உதவியை நாடி செபிப்போம்.
அனைவருக்கும் புனித தோமாவின் விழா வாழ்த்துக்களையும் செபங்களையும் தெவித்துக் கொள்கிறேன்.
என்றும் அன்புடன்
அருட்பணி. ஜேசுதாஸ் ச.ச.
இயக்குனர் - தீபகம்