தீபகத்திலிருந்து இறையாசீர்!
அன்பான தீபகத்தின் செபத்திருப் பயணிகளே!
திருத்தந்தை பிரான்சிஸ் வரும் 2024ம் ஆண்டை ‘செபத்தின் ஆண்டாக கத்தோலிக்க திருஅவைக்கு அறிமுகப்படுத்தியிருக்கின்றார். இந்த புதிய ஆண்டை இறைமக்கள், தனிநபராகவும், குடும்பங்களாவும், நண்பர்களாகவும், இவ்வித நிலைகளெல்லாம் செபம் செய்து செபத்தின் வல்லமையையும், நன்மையையும் நமது வாழ்வில் பெற்று உலகிற்கு அறிவிக்க நம்மை அழைக்கின்றார்.
இவ்வாண்டை செபத்திற்காக அற்பணிக்க அழைக்கும் நம் திருத்தந்தை இதற்கான ஒரு திட்டத்தையும் அறிமுகப்படுத்தியுள்ளார். குறிப்பாக ஆயர்கள், குருக்கள், துறவியரை சிறப்புத்திட்டங்களை உருவாக்கவும், அறிவிக்கவும், செயல்படுத்தவும் அழைக்கின்றார். குறிப்பாக மறைக்கல்வி மற்றும் மறைப்பரப்பு பணிகுழுக்களை “செபத்திருப்பயணம், மன்றாட்டுத் திருப்பயணம்” இத்திருப்பயணத்தை மறைமாவட்ட அளவிலும், கல்வி நிலையங்களிலும், மற்றும் பங்குகளிலும் திட்டமிட்டு செயல்படுத்தவும் நம்மை அழைக்கின்றார்.
நமது தீபகம் மறைப்பரப்பு நிலையம் நமது சலேசிய மாநிலத்தின் ஆறு பிரிவுகளில் இத்தகைய செபவாழ்வை மையப்படுத்தி மக்களை, இளைஞர்களை, குழந்தைகளை செபிக்கவும், கொண்டாடவும், ஒருங்கிணைந்து செயல்பட்டு வருகிறது. வேலூர் மண்டலம், திருப்பத்தூர் மண்டலம் இத்தகைய செபவாழ்வின் கொண்டாட்டங்களை மிகவும் சிறப்பாக செய்துள்ளது. வருகின்ற ஆண்டில் புதுச்சேரியில் இந்த செபத்தின் கொண்டாட்டம் பிப்ரவரி 4ம் தேதியும், தவக்காலத்தின் புனித சவேரியார் பிராட்வே பங்கிலும், உயிர்ப்பின் கொண்டாட்டம் புனித லூர்து அன்னை திருத்தலம், பெரம்பூரிலும் நடைபெற உள்ளது.
இறைமக்களாகிய நாம் திருத்தந்தையோடு தம் செபத் திருப்பயணத்தில் இணைந்து, நமது வாழ்வை செம்மையாக்கி வாழ்ந்து, தொடக்கத் திருஅவைப்போல செபமே வாழ்வு என வாழ அன்போடு உங்களை அழைக்கின்றேன். புனித தொன் போஸ்கோ எப்போது செபித்தார் என்ற கேள்வி எழுந்தபோது தொன்போஸ்கோ எப்போது செபிக்கவில்லை என கேள்வி எழுப்பி தொன் போஸ்கோ செபமே வாழ்வு, வாழ்வே செபம் என வாழ்ந்துக் காட்டினார்.
கடவுளின் தாய் மரியாள் தன் வாழ்நாளெல்லாம் இறைவார்த்தையை மனதில் நிறுத்தி, சிந்தித்து, செபித்து வாழ்ந்தார் என நாம் அவருடைய வாழ்க்கையில் அறியலாம். புனித தொன் போஸ்கோவைப் பின்பற்றி அன்னை மரியாளின் அருட்துணையோடு நமது வாழ்வை செபமாக்கி எப்போதும், என்ன செய்தாலும் செபத்துடன் கூடிய திருப்பாடல்களையும் செபங்களையும் பக்தியுடன் செய்து வாழ்ந்து இறையருளைப் பெற்று பிறரையும் இறைவனிடம் அழைத்துச் செல்ல இவ்வாண்டு நமக்கு உதவட்டும்.
அனைவருக்கும் தீபகத்தின் செபங்களும், ஆசீரும், இவ்வாண்டு முழுவதும் உங்களை வழிநடத்தட்டும். அனைவருக்கும் 2024ம் ஆண்டிற்கான புத்தாண்டு ஆசீர்.
என்றும் அன்புடன்
அருட்பணி. ஜேசுதாஸ் ச.ச.
இயக்குநர் - தீபகம்