தீபகத்திலிருந்து இறையாசீர்!
கடவுளின் தாய் அன்னை மரியாள் நம் நாட்டிற்கான நம்பிக்கை: புதிய ஆண்டில் அடியெடுத்து வைக்கும் இவ்வேளையில், ஜனவரி 1-ஆம் தேதி கத்தோலிக்க திருஅவையில் ஒரு முக்கிய திருநாளாக கொண்டாடப்படுகிறது. கடவுளின் தாய் அன்னை மரியாளின் பெருவிழா, மனிதகுலத்திற்கான தாய்மையின் அன்பையும், நம்பிக்கையையும் நமக்கு நினைவூட்டும் இத்தினம். நம்முடைய இதயங்களை நம்பிக்கையால் நிரப்பி அமைதியும், அன்பும் நிறைந்த வாழ்விற்கு அர்ப்பணிக்க அழைக்கிறது. 2025 ஆம் ஆண்டுக்கான ஜூபிலி வருடத்திற்காக திருத்தந்தை புனிதப் பிரான்சிஸ் வழங்கிய அழைப்பை முன்வைத்து, நாம் இந்த ஆண்டில் நம்பிக்கையுடன் நம்முடைய பயணத்தைத் தொடர வேண்டும்.
நம்பிக்கையின் வழிகாட்டி நம் அன்னை மரியாள்: கடவுளின் தாய் அன்னை மரியாள், அனைவருக்கும் நம்பிக்கையின் ஒளிவிளக்கு. கடவுளுடைய வாக்குறுதிகளில் திடமான நம்பிக்கையுடன், மீட்பின் வரலாற்றில் அவரின் கீழ்ப்படிதல், தாழ்ச்சி மற்றும் கடவுளின்மேல் வைத்த நம்பிக்கை. நாமும் அவரைப்போன்று வாழ்வின் குழப்பங்கள் மற்றும் சவால்களுக்கிடையில் நம்பிக்கையுடன் வாழ வழிவகுக்கிறது. 58வது உலக அமைதித் தினத்திற்கான செய்தியில் திருத்தந்தை புனிதப் பிரான்சிஸ். மன்னிப்பு மற்றும் நம்பிக்கை, அமைதியான உலகத்தை உருவாக்குவதற்கு மிக முக்கியம் என்பதை நமக்கு நினைவூட்டுகிறார். கடவுளின் தாய் அன்னை மரியாள் தன் வாழ்வின் சவால்களை நம்பிக்கையுடன் ஏற்றுக் கொண்டது போல, நாமும் ஒருவரையொருவர் அன்புச்செய்து மன்னித்து, நம்பிக்கையுடன் வாழ அழைக்கப்படுகிறோம். நம் தாய் நாட்டில், சமூக சமநிலையின்மை மற்றும் பொருளாதார சவால்கள் தொடர்ந்து நிலவுகின்ற நிலையிலும், அன்னை மரியாளின் முன்னுதாரணம் நம்மை இறைவனின் அன்பின் கருவிகளாக மாற்றும். அன்பும் கருணையும் நிறைந்த சிறிய செயல்களே, மனித வாழ்வை மாற்றக்கூடிய ஆற்றல் கொண்டவை என்பதை திருத்தந்தை நமக்கு கற்பிக்கிறார்.
நம்பிக்கையின் ஜூபிலி: நம்பிக்கை ஏமாற்றுவதில்லை (Spes non Confundit) என்ற மையக்கருத்துடன், 2025 ஆம் ஆண்டின் ஜூபிலி வருடம், இளைய தலைமுறையினரை மையமாகக் கொண்டு கொண்டாடப்படுகிறது. நம் நாட்டில் அறிவு, ஆற்றல், மற்றும் திறமையால் நிறைந்த இளைஞர்களுக்கு இது முக்கிய கொண்டாட்டமாகும். நமது மறைக்கல்வித் திட்டங்களில், இளைஞர்களின் திறமைகளை ஊக்குவித்து, அவர்களை கிறிஸ்துவின் நம்பிக்கையின் தூதுவர்களாக வளரச் செய்ய வேண்டும்.
கிறிஸ்தவ நம்பிக்கை அமைதியான உலகத்தை உருவாக்குதல்: திருத்தந்தை பிரான்சிஸ் கிறிஸ்தவர்களை உயிர்த்தெழுதலின் சாட்சிகளாகவும் அமைதியை கட்டியெழுப்பும் சிற்பிகளாகவும் இருக்கிறோம் என்று அழைக்கிறார். நம் நாட்டில். நமது பங்குகள் மற்றும் கல்வி மையங்களில் பல்வேறு சமூகங்களுக்கு சேவை செய்யும் இந்நேரத்தில், இந்த செய்தி. ஒற்றுமையையும் புரிந்துணர்வையும் உருவாக்க நம்மை அழைக்கிறது. ஜூபிலி வருடத்திற்கு தயாராகும் இவ்வேளையில், நமது சொற்கள் மற்றும் செயல்களால் அமைதியின் செய்தியைப் பரப்ப நம்மை நாம் தயார் செய்துக்கொள்ள வேண்டும். சிறிய செயல்கள். ஒரு சிரிப்பு. ஒரு நல்வார்த்தை. ஒரு உதவும் கை. இவையனைத்தும் நம்பிக்கையின் விதைகளாக மாற முடியும் என்று திருத்தந்தை புனிதப் பிரான்சிஸ் இளையோரின் உலகத் தின செய்தியில் நினைவூட்டுகிறார். நமது வீடுகளில், பள்ளிகளில், மற்றும் பங்குகளில் இந்த விதைகளை விதைத்து, அதை வளர்த்து அது சுவைமிகுந்த கனித்தரும் மரங்களாக மாறும் என்று நம்புவோம்.
ஒரு செயல் அழைப்பு: கடவுளின் தாய் அன்னை மரியாளின் பெருவிழாவை நாம் கொண்டாடும் இந்நாளில், அவரை நம் வழிகாட்டிய ஏற்றுக்கொள்வோம். அவர் வாழ்ந்த வழியில் நம்பிக்கை மற்றும் அன்பு, ஆகியப் பண்புகளை நம் வாழ்க்கையில் வாழ்ந்துக் காட்டுவோம். 2025ஆம் ஆண்டு விழாக்களின் ஆண்டாக மட்டுமல்லாமல், நம் நாட்டிற்கும், சமூகத்திற்கும் உலகத்திற்கும் நம்பிக்கையும் அன்பும் தரும் ஆண்டாக மாறச் செய்வோம். இந்த புத்தாண்டில், நம்பிக்கையின் குரலாகவும், மன்னிப்பின் கைகளாகவும், அன்பின் இதயமாகவும் நம்முடைய குடும்பங்கள், பங்குகள் மற்றும் சமூகங்களில் செயல்படுவோம். அன்னை மரியாளின் துணையோடு. கிறிஸ்துவின் ஒளியில் நடந்து நம்பிக்கையின் தூதுவர்களாக இறையாட்சியை உலகமெங்கும் கட்டியெழுப்புவோம்.
என்றும் அன்புடன்,
அருட்பணி. ஜேசுதாஸ் ச.ச.
இயக்குநர் -தீபகம்