தீபகத்திலிருந்து இறையாசீர்
இயேசுவே ஒளியான அன்பு!
பிப்ரவரி மாதம் நமக்கு பல விழாக்களை கொண்டாடுவதற்கான ஒரு சிறந்த காலமாக அமைந்துள்ளது. "நம்பிக்கை", "எதிர்நோக்கு", மற்றும் "அன்பு" ஆகிய இம்மூன்றையும் சிறப்பாக கொண்டாட இம்மாதம் நம்மை அழைக்கிறது.
1. ஆண்டவரை காணிக்கையாக அர்ப்பணித்தல் விழா (பிப். 2)
2. லூர்து அன்னை திருவிழா (பிப். 11)
3. காதலர்களின் தினம். (பிப்.14) (Valentine's Day).
கத்தோலிக்க கிறிஸ்தவர்களாகிய நமக்கு இம்மூன்று கொண்டாட்டங்களும் நம்மை ஆன்மீகத்தில் வளரவும், கிறிஸ்தவ வாழ்வில் வேரூன்றவும் நம்மை அழைக்கிறது.
நமது ஆண்டவரை காணிக்கையாக ஒப்புக் கொடுக்கும் விழா. இயேசு கிறிஸ்து நமக்கும். உலகிற்கும் ஒளியானவர் என்பதை நினைவுப்படுத்துகிறது. அன்னை மரியாளும் யோசேப்பும் குழந்தை இயேசுவைக் கோவிலில் கொண்டு வரும்போது, சிமியோனும் அன்னாளும் கடவுளின் திட்டத்தையும் அவரது வாக்குறுதியையும் கண்டு "இவரே ஒளி.... இவரே மாட்சிமை..." என அறிக்கையிட்டனர். இளைஞர்கள் ஒவ்வொருவரும் இவ்விழாவில் கிறிஸ்துவே நம் ஒளி, கிறிஸ்துவே நம் மாட்சிமை" என்பதையும், கிறிஸ்து நம்மை வழிநடத்தும் ஒளியெனவும், நம் இருளகற்றும் ஒளியெனவும், கிறிஸ்துவே உண்மை" எனவும், கிறிஸ்துவே நம் 'இலக்கு" எனவும் கொண்டாட நம்மை அழைக்கிறது. கிறிஸ்தவர்களாகிய நாம். இளைஞர்களுக்கு. உலகிற்கு ஒளியாக உண்மையாக வாழ்கிறோமா? என்று சிந்தித்துப் பார்ப்போம்.
பிப்ரவரி 11ம் தேதி புனித லூர்து அன்னை பெருவிழாவைக் கொண்டாடும் இவ்விழாவில், நமது லூர்து அன்னை நம் வாழ்வில் ஏற்படும் துன்பங்களை, சவால்களை சந்திக்க புனித பெர்னதெத்துக்கு கொடுத்த அந்த மூன்று வழிகளையே நமக்கும் நினைவுப்படுத்துகிறது: செபவாழ்வு, தவவாழ்வு, எதிர்நோக்கான வாழ்வு, நமது லூர்து அன்னை எப்போதும் நம்மோடு இருக்கிறார். நாம் எப்போதும் அவரின் அரவணைப்பில் இருக்கின்றோம். நாம் ஒருபோதும் தனிமையில் இல்லை. குறிப்பாக துன்பங்களிலும், வேதனைகளிலும், சவால்களிலும் அவர் நம்மோடு இருக்கிறார். இளைஞர்கள் இந்த அன்னையிடம் தங்களை அர்ப்பணித்து அவரின் பரிந்துரையால் நலமடைந்து அவரின் வழிகாட்டுதலில் நடந்து, அவரின் உடனிருப்பை நம்பி வாழ அழைக்கப்படுகின்றார்கள்.
பிப்ரவரி மாதம் காதலர்களின் தினம் (பிப்.14) (Valentine's Day) என்ற நாளை கொண்டாடுகிற இந்நாளில் அன்பு என்ற சொல், அன்பு என்கிற புண்ணியம் தவறாக பயன்படுத்துவதையும் நாம் காண்கிறோம். குறிப்பாக இளைஞர்கள் அன்பை இவ்வுலகைச் சார்ந்த விருப்பு, வெறுப்புகளுக்கு ஒப்பிட்டு சுயநலத்துடன் தவறாக புரிந்துக்கொள்கின்றனர். ஆனால் 'அன்பு என்பது, நட்பு என்பது" தியாகமானது. பிறருக்காக தன் உயிரையும் கொடுக்க கூடியது. 'தம் நண்பர்களுக்காக உயிரைக் கொடுப்பதைவிட சிறந்த அன்பு யாரிடமும் இல்லை" (யோவா.15:13), இளைஞருக்கு இயேசு கிறிஸ்து அன்புக்கு, நட்புக்கு உதாரணமாக வாழ்ந்து, நமக்கு பாடம் கற்றுத் தந்துள்ளார். 'அன்பு பொறுமையுள்ளது: நன்மை செய்யும்: பொறாமைப்படாது: தற்புகழ்ச்சி கொள்ளாது: இறுமாப்பு அடையாது. அன்பு இழிவானதைச் செய்யாது: தன்னலம் நாடாது: எரிச்சலுக்கு இடம் கொடாது: தீங்கு நினையாது. அன்பு தீவினையில் மகிழ்வுறாது: மாறாக உண்மையில் அது மகிழும். அன்பு அனைத்தையும் பொறுத்துக் கொள்ளும்; அனைத்தையும் நம்பும்; அனைத்தையும் எதிர்நோக்கி இருக்கும்; அனைத்திலும் மனஉறுதியாய் இருக்கும். (1கொரி.13: 4-7). உண்மையான அன்பு. தியாகத்தில், உண்மையிலும், பரிவிரக்கத்தில் நமக்கு அடுத்திருப்பவரை மதிப்பதிலும், அடங்கியிருக்கிறது என்பதை புரிந்து வாழ்கிறோமா?
பிப்ரவரி மாதத்தில் நாம் இயேசு கிறிஸ்துவை ஒளியாக ஏற்றுக்கொண்டு உண்மையான வழியில் நடந்து, உடல் உள்ள நலன் பெற்று தியாகமான, தூய்மையான அன்பை கொண்டாடி இவ்வுலகை மாற்ற நமக்கு கிடைத்த சிறந்த வாய்ப்பை சாட்சியாக வாழ்ந்துக் காட்டலாம். இளைஞர்கள் ஒளியின் சாட்சியாக, உண்மையின் சாட்சியாக, அன்பின் சாட்சியாக, எதிர்நோக்கின் சாட்சியாக வாழ நமது லூர்து அன்னை வழி காட்டுவாராக.
என்றும் அன்புடன்,
அருட்பணி. ஜேசுதாஸ் ச.ச
இயக்குநர் தீபகம்