• 044-26428162
  • dbdeepagam@gmail.com
Logo

Director Speaks

நம்பிக்கை நம்மை நிறைக்கட்டும்

Monday, December 2, 2024

 

கிறிஸ்து பிறப்பு பெருவிழா கொண்டாட்டமானது, இருளை ஒளியால், அகற்றவும், சோர்ந்துபோன இதயங்களை நம்பிக்கைச் செய்தியால் புதுப்பிக்கவும் இப்பெருவிழா நம்மை அழைக்கின்றது. குறிப்பாக, “நம்பிக்கை நம்மை நிறைக்கட்டும்” என்கின்ற திருத்தந்தையின் அறைகூவல், வெறும் வார்த்தையல்ல, மாறாக “நம்பிக்கை பிறக்காதா” என்று ஏங்குகின்ற பல “நம்பிக்கையின் திருப்பயணிகளுக்கு” விடப்பட்ட ஒரு சிறந்த அழைப்பாகும்.

 

தொழுவில் நம்பிக்கை, கிறிஸ்து பிறப்பு விழா என்பது கடவுள் மனிதனாய் பிறந்து, மனித வரலாற்றில், மீட்பின் திட்டத்தில் தம் தந்தையின் திருவுளத்தை நிறைவு செய்துள்ளார். இத்திட்டம் ஆடம்பரமில்லாமல், எளிமையாய், அமைதியாய், பெத்லகேமில் மாட்டு தொழுவினில் குழந்தையாய், ஏழையாய், பிறந்து உலகமெங்கும் வாழும் “நம்பிக்கையின் திருப்பயணிகளுக்கு” நம்பிக்கையாய் பிறந்துள்ளார்.

 

இது ஒரு வரலாற்று நிகழ்வு மட்டுமல்ல, மாறாக இந்நிகழ்வு நம் வாழ்வில் நம்பிக்கையுடன் வாழ ஒவ்வொரு நாளும் நம்மை அழைக்கிறது. இந்த நம்பிக்கையை தினம் தினம் நாம் கண்டு பிடிக்கவும், அதை கொண்டாடவும், அதனால் நம்மில், பிரிவினை, மோதல், வெறுப்பு, பகைமை, சோர்வு, தீமை யாவும் ஒழித்து அன்புடனும், இரக்கத்துடனும், பரிவுடனும், மன்னிப்புடனும், ஒருவரையொருவர் ஏற்று வாழவும், திருத்தந்தை நம்மை அழைக்கின்றார். “உன்னதத்திலே கடவுளுக்கு மாட்சி உரித்தாகுக, உலகில் அவருக்கு உகந்தோருக்கு அமைதி உண்டாகுக” (லூக். 2: 14) என்ற வானத்தூதர்களின் கீதம் இதே நம்பிக்கையுடன் கொண்டாட நம்மை அழைக்கின்றது.

 

நம்பிக்கையின் திருப்பயணிகள்: நம்பிக்கையின் திருப்பயணிகள் என்பது இன்பத்திலும், துன்பத்திலும், உடல் நலத்திலும், நோயிலும், கடவுள் நம்மோடு இருக்கின்றார் என்ற நம்பிக்கையோடு வாழ்க்கைப் பயணத்தை முன்னெடுத்து செல்வது. கடவுள் நம்மோடிருந்து, நம்மோடு செயலாற்றும்போது நமக்கு என்ன கவலை? நாம் யாருக்கு அஞ்ச வேண்டும்? “அஞ்சாதீர்கள் இதோ, எல்லா மக்களுக்கும் பெரும் மகிழ்ச்சியூட்டும் நற்செய்தியை உங்களுக்கு அறிவிக்கிறேன்” (லூக். 2:10) என்ற வானத்தூதர்களின் அறிவிப்பு நமது நம்பிக்கையை பலப்படுத்தும். இடையர்கள் தங்களிடமிருந்ததை குழந்தைக்கு கொடுத்து வணங்கியதுபோல, நம்பிக்கையின் திருப்பணியாளர்களாகிய நாம், நம்பிக்கையோடு இல்லாதவரோடு பகிர்ந்து, பகிர்தலில் பெரும் மகிழ்ச்சி உண்டு என்பதை நம்பிக்கையோடு கொண்டாட நம்மை அழைக்கிறது.

 

கிறிஸ்து பிறப்பு விழா என்பது, நம் வாழ்வில் ஏற்படும் துன்பங்களிடையே, வருத்தங்களிடையே, தினம்தினம் நடக்கும் பல்வேறு குழப்பங்களிடையே நம்பிக்கையையும், எதிர்நோக்கையும் ஒவ்வொரு நாளும் புதுப்பிக்கின்ற சிறந்த விழாவாகும். கன்னிமரியாள், யோசேப்பு, இடையர்கள், மூன்று அரசர்கள் இவர்கள் யாவரும் பல துன்பங்களையும், தடைகளையும் சந்தித்து, குழந்தை இயேசுவை கண்டனர். நம்பினர். வணங்கினர். இதனால் குழந்தை இயேசுவை சந்தித்தப்பின் அவர்கள் மகிழ்வுடன் புதுவாழ்வை துவங்கினார்கள். நாமும் குழந்தை இயேசுவைச் சந்தித்து, நம்பி, வணங்கி புதிய இறையாட்சியை கட்டியெழுப்புவோம்.

 

“நம்பிக்கை நம்மை நிறைக்கட்டும்” என்ற திருத்தந்தையின் அழைப்பு நம்மை கிறிஸ்துவில் வேரூன்றி வாழவும், கிறிஸ்துவ வாழ்வில் புது வளர்ச்சிக் காணவும், பிறருக்கு நம்பிக்கையாய் நாம் வாழவும், நமது பங்கில், நமது இல்லங்களில், நம் தனிப்பட்ட வாழ்வில் அன்பு, உண்மை, நீதி, சமத்துவம் என்ற இறையாட்சியின் விழுமியங்களை உலகில் ஒளிர்விக்கவும் நம்மை அழைக்கின்றது. நம்பிக்கை என்ற கொடையை, நம்பிக்கையின் தூதுவர்களாய், நம்பிக்கையை வளர்க்கும் பணியில், “கடவுள் நம்மோடு இருக்கின்றார்” என்ற மகிழ்ச்சியை உலகிற்கு பறைசாற்றுவோம்.

 

என்றும் அன்புடன்,

அருட்பணி. ஜேசுதாஸ் ச.ச.

இயக்குநர் தீபகம்

 


Share: