• 044-26428162
  • dbdeepagam@gmail.com
Logo

Director Speaks

புனிதர்களாக, எதிர்நோக்கு திருப்பயணிகளாக, இறையரசைக் கட்டியெழுப்புவோம்!

Friday, November 1, 2024

 

தீபகத்திலிருந்து இறையாசீர்!
 

அன்பான தீபகச் சுடர் வாசகர்களே,


புனிதர்களாக,எதிர்நோக்கு திருப்பயணிகளாக, இறையரசைக் கட்டியெழுப்புவோம்!
 

எதிர்நோக்கின் திருப்பயணிகளாகிய நம்மை திருஅவை இந்த நவம்பர் மாதத்தில் நிறைவாழ்வு, இறப்பு, மற்றும் இறையரசைப் பற்றி சிந்திக்க அழைக்கிறது. எல்லா புனிதர்களின் பெருவிழா, இறந்த ஆன்மாக்களின் நினைவு விழா, கிறிஸ்து அரசர் பெருவிழா ஆகிய இம்மூன்று விழாக்களும் ஒன்றோடொன்று தொடர்புக்கொண்டு நமது எதிர்நோக்கின் திருப்பயணத்தின் முடிவில் இறையரசில் பங்குபெற வழி செய்கிறது. எனவே, புனிதம், நினைவு, இறையரசு ஆகியவற்றை தியானித்து இவை யாவும் நம் வாழ்வில் தினமும் நமது வாழ்வாலும், நம்பிக்கையாலும், நடைபெறும் நிகழ்வுகள் என கொண்டாடுவோம்.

 

அனைத்து புனிதர்களின் பெருவிழா: நவம்பர் 01ம் தேதி திருஅவை நம் எல்லா புனிதர்களையும் அவர்களின் எடுத்துக்காட்டான புனிதமான கிறிஸ்த வாழ்வில் அவர்கள் சந்தித்த சவால்கள், துன்பங்கள், நெருக்கடிகள், மற்றும் அவற்றினிடையே கடவுள் துணையால் புனிதமான வாழ்க்கை வாழ, கிறிஸ்தவர்கள் இக்காலத்திலும் வாழ முடியும் என்பதை உறுதிப்படுத்துகிறது. 'நான் கிறிஸ்துவைப் போல் நடப்பதுபோன்று நீங்களும் என்னைப்போல் நடங்கள்" என்ற பவுலடியாரின் வார்த்தைக்கேற்ப புனித பிரான்சிஸ் அசிசியார், புனித தொன்போஸ்கோ, புனித அன்னை தெரேசா போன்று நாமும் ஒருவரையொருவர் அன்பு செய்து, உதவி செய்தும் புனிதர்களாக வாழ நம்மை அழைக்கின்றது.

 

இறந்த ஆன்மாக்களின் நினைவு: நவம்பர் 02ம் தேதி நம்மோடு வாழ்ந்து நமக்குமுன் சென்ற நம்பிக்கையாளர்கள் அனைவரையும் நினைவுக் கூர்ந்து அவர்கள் இறைவனின் இரக்கத்தினால் அவர்களுக்குரிய உரிமைப்பேரான இறையாட்சியில் பங்குபெற நாம் செபிக்க வேண்டுமென திருஅவை நம்மை அழைக்கிறது. நமது குடும்பத்தில் மரித்த பெற்றோர், உற்றார், உறவினர், நண்பர்கள்,  சகோதர சகோதரிகள் அவர்களுக்காக திருப்பலி ஒப்புக்கொடுத்து, அவர்களின் கல்லறைகளை சந்தித்து, அவர்கள் நமக்கு விட்டுச் சென்ற கிறிஸ்துவ மதிப்பீடுகளை வாழ்ந்து இறையரசில் ஒருநாள் நாமும் அவர்களைச் சந்திப்போம் என நம்பிக்கையுடன் வாழ்வோம்.

 

கிறிஸ்து அரசர் பெருவிழா: நவம்பர் மாத இறுதி ஞாயிற்றுக்கிழமையில், கிறிஸ்து நமக்கெல்லாம் அரசர் என்ற பெருவிழாவைத் திருஅவை கொண்டாடுகிறது. இந்த விழா கிறிஸ்து இவ்வுலகை, சாவை வென்றார். இறுதியில் அவரது ஆட்சி நிலைபெறும் அந்த ஆட்சிக்கு முடிவு இராது என்றும் நாம் அனைவரும் இறையாட்சிக்கு உட்பட்டவர்கள் என்றும் அன்பு, உண்மை. நீதி, சமத்துவம் என்ற இறையாட்சி விழுமியங்களில் வாழ நம்மை அழைக்கிறது. 'எனது அரசு இவ்வுலகைச் சார்ந்தது அன்று" (யோவான் 18:36)ல் கூறுவது போன்று நாமும் இந்த ஆட்சிக்கு அழைக்கப்பட்டவர்கள் என்பதை நினைவுக் கூர்ந்து சமாதானத் தூதுவர்களாக வாழ்வோம்.

 

அனைத்து புனிதர்களின் விழா, நாம் புனிதர்களாக வாழ அழைக்கப்பட்டுள்ளோம் என்பதையும், இறந்த ஆன்மாக்கள் விழா. நாம் நன்றியுடனும், நம்பிக்கையுடனும் வாழ வேண்டுமென்றும், நாம் எதிர்நோக்கின் பயணிகள் என்பதையும், கிறிஸ்து அரசர் பெருவிழா நாம் இவ்வுலகை சார்ந்தவர்கள் அல்ல. மாறாக நாம் இவ்வுலக துன்பங்களையெல்லாம் ஒருநாள் வென்றிடுவோடும் என்பதையும் ஆணித்தரமாக நமது இல்லங்களிலும், பங்குகளிலும், பணித்தளங்களிலும் எடுத்துரைக்க நம்மை அழைக்கிறது.

 

இறுதியாக நாம் அனைவரும் எதிர்நோக்கின் திருப்பயணிகள். எனவே எல்லாப் புனிதர்களோடும். இறந்த நம்பிக்கையாளர்களோடும், நாமும் ஒருநாள் கிறிஸ்துவின் இறையாட்சியில் பங்குபெற, இறையாட்சியைக் கட்டியெழுப்ப உறுதிக்கொள்வோம். 'வாருங்கள் என் தந்தையின் ஆசிப் பெற்றவர்களே, உலகம் தோன்றியது முதலாக, உங்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்ட உரிமைப் பேரான ஆட்சியை பெற்றுக் கொள்ளுங்கள்” (மத். 25:34) என்ற இயேசுவின் அழைப்பிற்கேற்ப இந்த நவம்பர் மாதத்தை புனிதர்களோடும். எதிர்நோக்கோடும் கொண்டாடுவோம்.

 

என்றும் அன்புடன்

அருட்பணி. ஜேசுதாஸ் ச.ச 
இயக்குனர் - தீபகம்

 


Share: