• 044-26428162
  • dbdeepagam@gmail.com
Logo

Sermons

இன்றைய இறைமொழி. ஞாயிறு, 12 மே 2024. கடவுளின் தொடர் உடனிருத்தல்

Sunday, May 12, 2024   Fr. Yesu Karunanidhi   Archdiocese of Madurai

Daily Gospel இன்றைய இறைமொழி Easter Season Eastertide

இன்றைய இறைமொழி
ஞாயிறு, 12 மே 2024
ஆண்டவரின் விண்ணேற்றப் பெருவிழா
திப 1:1-11. எபே 4:1-13. மாற் 16:15-20

 

கடவுளின் தொடர் உடனிருத்தல்

எப்படி விண்ணேற்றம்? என்று கேட்பதை விடுத்து, ஏன் விண்ணேற்றம்? என்று கேட்டால் விண்ணேற்றப் பெருவிழாவின் பொருள் தெரிந்துவிடும்.

 

விண்ணேற்றம் இயேசுவின் வாழ்வில் மூன்று நிலைகளில் அர்த்தம் பெறுகின்றது:

 

1. தன் மண்ணக பணிவாழ்வு முடிந்து, இன்று தன் தந்தையின் இல்லம் திரும்புகின்றார் (காண். பிலி 2:3-6). மனுவுருவாதல் என்னும் வட்டம் விண்ணேற்றத்தில் நிறைவுபெறுகிறது.

 

2. தன் சீடர்களிடம் தன் பணியை ஒப்புவிக்கின்றார். தன் இறையரசுப் பணியைத் தொடர்ந்தாற்ற அவர்களுக்குக் கட்டளையிடுகின்றார். விண்ணேற்றம் ஒரு பிரியாவிடை நிகழ்வு. விவிலியத்தில் உள்ள பிரியாவிடை நிகழ்வுகளில் மூன்று மட்டுமே மிக நீளமானவை: இஸ்ரயேலின் குலமுதல்வர் யாக்கோபு (தொநூ 49-50), திருச்சட்டம் வழங்கிய மோசே (இச 33-34), புதிய இஸ்ரயேலின் நம்பிக்கை மற்றும் திருச்சட்டத்தின் நிறைவாம் இயேசு (திப 1:1-11). இந்த மூன்று பிரியாவிடைகளும் நான்கு கூறுகளைக் கொண்டுள்ளன: அ) ஆசியுரை, ஆ) பிரிவு, இ) பார்த்தவர்களின் பதில் மற்றும் ஈ) கீழ்ப்படிதல் அறிக்கை. இயேசு கைகளை உயர்த்தி ஆசீர் அளிக்கும் நிகழ்வும் முதல் ஏற்பாட்டு நிகழ்வுகளின் பிரதிபலிப்பாகவே அமைகின்றது (லேவி 9:22, சீஞா 50:20-21). ஆசியளித்தல் தரும் மகிழ்ச்சி லூக்கா நற்செய்தியின் முதல் மற்றும் இறுதி நிகழ்வுகளில் மிகவும் முக்கியமானதாக இருக்கின்றது (1:56, 2:20,43,45, 24:9,33, 8:13, 15:7,10). இயேசுவின் சீடர்கள் மகிழ்ச்சியோடு ஆலயம் திரும்பி இறைவனைப் புகழ்கின்றனர்.

 

3. துணையாளராம் தூய ஆவியானவரை அவர்கள்மேல் அனுப்புவதாக வாக்குறுதி தருகின்றார் (திப 1:4-5).

 

இயேசுவின் உயிர்ப்பைப் போலவே, அவரின் விண்ணேற்றமும் ஒரு நம்பிக்கையின் மறைபொருளே. ‘நம்பிக்கை’ என்ற இந்த ஒற்றைச் சொல்லை நீக்கிவிட்டால், இந்த நிகழ்விற்கும் நமக்கும் தொடர்பே இல்லை. ‘விண்ணேற்றம் என்னும் நம்பிக்கையை’ நாம் எப்படி வாழ்வாக்குவது? விண்ணேற்றம் தரும் வாழ்வியல் பாடங்கள் எவை?
விண்ணேற்றம் திருத்தூதர்களுக்குச் சொன்ன செய்தி என்ன?

 

இன்றைய முதல் வாசகத்தில், லூக்கா பதிவு செய்வது போல, அவர்கள் எருசலேமை விட்டு நீங்குதல் கூடாது. மேலும், அவர்கள் கடவுளது வல்லமை பெற்று எருசலேமிலும் யூதேயா, சமாரியா முழுவதிலும் சாட்சியாக இருப்பார்கள். இயேசு பணியை நிறுத்திய இடத்திலிருந்து திருத்தூதர்கள் தங்கள் பணியைத் தொடங்க வேண்டும். இன்றைய நற்செய்தி வாசகத்தில் மாற்கு நற்செய்தியாளரும் அப்படியே பதிவிடுகிறார்: ‘இயேசு விண்ணேற்றம் அடைந்த பின்னர் அவர்கள் புறப்பட்டுச் சென்று எங்கும் நற்செய்தியைப் பறைசாற்றினர்.’

 

விண்ணேற்றம் நமக்குச் சொல்லும் செய்தி என்ன?

 

(அ) இயேசுவின் உடனிருப்பு. ‘கடவுள் நம்மோடு’ என்று இறங்கி வந்தவர், ‘கடவுள் நமக்காக’ என்று ஏறிச்செல்கின்றார். அவர் நம்மை விட்டு நீங்கிவிடவில்லை. இதையே இன்றைய இரண்டாம் வாசகத்தில், புனித பவுல், ‘எங்கும் நிறைந்திருக்கும்படி எல்லா வானுலகங்களுக்கும் மேலாக ஏறிச் சென்ற அவரே சிலரைத் திருத்தூதராகவும், சிலரை இறைவாக்கினராகவும், சிலரை நற்செய்தியாளர்களாகவும், ஆயர்களாகவும், போதகர்களாகவும் ஏற்படுத்தினார்’ என எழுதுகிறார். ஆக, ஆண்டவர் எப்போதும் எங்கும் நிறைந்திருக்கிறார். அவர் தன் உடனிருப்பை பல்வேறு நபர்கள் வழியாகவும், திருஅவையில் உள்ள தன் இருத்தலின் வழியாகவும் வெளிப்படுத்திக்கொண்டே இருக்கின்றார்.

 

(ஆ) இயேசுவின் செயல்பாடு. நற்செய்தி வாசகத்தில், ‘ஆண்டவரும் உடனிருந்து செயல்பட்டு, நிகழ்ந்த அரும் அடையாளங்களால் அவர்களுடைய வார்த்தையை உறுதிப்படுத்தினார்’ என மாற்கு பதிவு செய்கின்றார். ‘உடனிருப்பு’ என்பது இருத்தல் என்றால், ‘செயல்படுதல்’ என்பது இயக்கம். ஆண்டவர் செயல்படுகின்றார். எப்படி? நம் செயல்கள் வழியாக. நம் செயல்கள் அவருடைய செயல்களாக இருந்தால் அவர் அவற்றை உறுதிப்படுத்துகின்றார். அவற்றுக்குச் சான்றாக நிற்கின்றார். எளியோரைத் தூக்கி விடுவதில், உள்ளம் உடைந்தோரைக் குணமாக்குவதில், ஒருவர் மற்றவரைப் புரிந்துகொள்வதில், வாழ்வின் சின்னஞ்சிறிய நிகழ்வுகளில் அவர் நம்மோடு செயல்படுகின்றார்.

 

உடனிருப்பு மட்டும் இருந்து செயல்படுதல் இல்லை என்றால், அடுத்தவர் நமக்குச் சுமையாகி விடுவார். செயல்படுதல் மட்டும் இருந்து உடனிருப்பு இல்லை என்றால், அடுத்தவர் நம் எண்ணத்தை விட்டு எளிதாக மறைந்துவிடுவார். இரண்டும் இணையும்போது, அங்கே வல்ல செயல் (அரும் அடையாளம்) நடக்கிறது: பேய்கள் ஓட்டப்படுகின்றன. புதிய மொழிகள் பேசப்படுகின்றன. பாம்புகள் கைகளால் பிடிக்கப்படுகின்றன. கொல்லும் நஞ்சு தீங்கிழைப்பதில்லை. நலமற்றவர்கள் மேல் கைகள் வைக்கப்பட்டவுடன் அவர்கள் நலம் பெறுகின்றனர்.

 

ஆக, ‘உடனிருப்பும்’ ‘செயல்படுதலும்’ ஆண்டவர் நமக்குத் தருகின்ற செய்தி. மறைதல் என்றால் இறைமை. இதையே பவுலும், ‘நாங்கள் காண்பவற்றை அல்ல, நாங்கள் காணாதவற்றை நோக்கியே வாழ்கிறோம். காண்பவை நிலையற்றவை. காணாதவை என்றும் நிலைத்திருப்பவை’ (காண். 2 கொரி 4:18) என எழுதுகின்றார். காணக்கூடிய நிலையில் இருந்த இயேசு திருத்தூதர்களின் பார்வையிலிருந்து மறைகின்றார். நிலையற்ற தன்மையிலிருந்து நிரந்தரத்திற்கு இயேசு கடந்து செல்கின்றார்.

 

காண முடியாத நிலைக்குக் கடந்து செல்லும் அனைவரும் நிரந்தரத்திற்குக் கடந்து செல்கின்றனர். இனி இவர்கள் காலத்திற்கும் இடத்திற்கும் அப்பாற்பட்டவர்கள். எனவே, இவர்களால் எந்தக் காலத்திற்குள்ளும் எந்த இடத்திற்குள்ளும் இனி நுழைய முடியும்.

 

ஆகையால்தான், உயரே ஏறுகின்ற ஆண்டவர் குறித்து, ‘அல்லேலூயா’ பாடி அக்களிக்கின்றார் திருப்பாடல் ஆசிரியர் (காண். 47).

 

இறுதியாக, ‘எங்கள் கண்கள் முன்பாக இயேசு எடுத்துக்கொள்ளப்பட்டார்’ எனக் கூறும் முதல் வாசகம், அதே கண்களை நாம் இந்த உலகத்தின்மேல் பதிக்கவும், ‘கிறிஸ்துவிடம் காணப்பட்ட நிறைவைப் பெறும் அளவுக்கு நாம் முதிர்ச்சியடைவோம்’ என்று சொல்லும் இரண்டாம் வாசகம், விண்ணேற்றம் என்பது நாம் அடையும் நிறைவு என்றும், இன்றே நம் எண்ணங்களும் செயல்களும் முதிர்ச்சி பெற்று மேன்மையுடன் இருக்க வேண்டும் எனவும் ஊக்கம் தருகிறது.

 

ஆண்டவரின் உடனிருப்பும், செயலாற்றுதலும் இன்றும் என்றும் நம்மோடு!

 

அருள்திரு யேசு கருணாநிதி
மதுரை உயர்மறைமாவட்டம்
இரக்கத்தின் தூதுவர்

 


 

Share: