• 044-26428162
  • dbdeepagam@gmail.com
Logo

Sermons

இன்றைய இறைமொழி. திங்கள், 13 மே 2024. கண்களைக் கடந்த காட்சி

Monday, May 13, 2024   Fr. Yesu Karunanidhi   Archdiocese of Madurai

Daily Gospel இன்றைய இறைமொழி Easter Season Eastertide

இன்றைய இறைமொழி
திங்கள், 13 மே 2024
பாஸ்கா காலம் 7-ஆம் வாரம் – திங்கள்
திப 19:1-8. யோவா 16:29-33
தூய பாத்திமா அன்னை, விருப்ப நினைவு

 

கண்களைக் கடந்த காட்சி

 

இன்று நாம் அன்னை கன்னி மரியாவை, ‘புனித பாத்திமா அன்னை’ என்று நினைவுகூர்ந்து கொண்டாடி மகிழ்கிறோம். ‘பாத்திமா’ என்ற பெயர் திருக்குரானிலும் வருகின்றது. திருக்குரானில், ‘பாத்திமா’ என்பவர் முகமது நபிகள் அவர்களுடைய மகள். திருக்குரான் நான்கு பெண்களை நிறைவானவர்கள் என அழைக்கிறது. அவர்களில் ஒருவர் பாத்திமா. மற்றவர்கள், மரியா, காதிஜா, மற்றும் ஐய்ஷா.

 

‘பாத்திமா அன்னை’ என்னும் பெயர் போர்த்துகல் நாட்டில் உள்ள பாத்திமா என்னும் நகரின் பெயர். அன்னை கன்னி மரியாவின் தலைப்புகள் அவர் காட்சியளித்த இடங்களின் பெயர்களோடு இணைந்தும் வழங்கப்படுகின்றன – லூர்து அன்னை, வேளாங்கண்ணி அன்னை.

 

1917-ஆம் ஆண்டு 13 மே முதல் 13 அக்டோபர் வரை ஆறு முறை அன்னை கன்னி மரியா பாத்திமாவில் லூசியா, பிரான்சிஸ்கோ, மற்றும் ஜெசிந்தா என்னும் மூன்று இளவல்களுக்குக் காட்சி தந்துள்ளார்.

 

‘கதிரவனை விட அதிகமாக ஒளிவீசிய பெண் ஒருவர் உலக அமைதிக்காக செபமாலை செபிக்குமாறு கேட்டுக்கொண்டார்’ – இதுவே இளவல்கள் தங்களுக்குக் காட்சியில் சொல்லப்பட்டது என வெளிப்படுத்தினார்கள்.

 

13 அக்டோபர் 1917 அன்று நடந்த கதிரவன் அற்புதம் (சுழன்று சென்ற கதிரவன்) முக்கிய நிகழ்வாகப் பேசப்படுகிறது.

 

இளவல் லூசியா சில வருடங்கள் கழித்து ‘பாத்திமாவின் மூன்று இரகசியங்கள்’ பற்றிப் பேசத் தொடங்கினார். முதல் இரகசியம் நரகம் பற்றியதாகவும், இரண்டாம் இரகசியம் அமல உற்பவ அன்னைக்கு அர்ப்பணித்தல் பற்றியதாகவும், மூன்றாம் இரகசியம் இஷ்யாவை அர்ப்பணம் செய்தல் பற்றியதாகவும் இருக்கிறது. மூன்றாவது இரகசியத்தில் திருத்தந்தை ஒருவரின் இறப்பு பற்றி இருந்ததால் இன்னும் அது முழுமையாக வெளியிடப்படவில்லை என்பதும் சிலரின் கருத்து.

 

1984-ஆம் ஆண்டு திருத்தந்தை புனித இரண்டாம் யோவான் பவுல் அனைத்துலகையும் அன்னை கன்னி மரியாவுக்கு அர்ப்பணம் செய்தார். இதற்கு முன்னதாக திருத்தந்தையர் 12-ஆம் பயஸ் மற்றும் 6-ஆம் பவுல் ஆகியோர் அன்னை கன்னி மரியாவுக்கு உலகை அர்ப்பணம் செய்தனர்.

 

அன்னை கன்னி மரியா, பாத்திமா அன்னையாக நமக்குத் தரும் செய்திகள் மூன்று: (அ) செபமாலை செபியுங்கள். அதாவது, செபம் மாலை போல முடிவின்றித் தொடரட்டும். (ஆ) அமைதி ஒன்றே நம் இலக்கு. அமைதி நம் அகத்தே உள்ளது. (இ) எல்லாம் ஒருநாள் மறைந்துவிடும். ஒளிகொடுக்கும் சூரியனும்!

 

கண்கள் காணும் காட்சியைக் கடந்து நம்பிக்கைக் கண்களால் உலகைக் காண அழைக்கிறார் தூய பாத்திமா அன்னை.

 

இன்றைய முதல் வாசகத்தில் (நாளுக்குரியது) பவுல், அப்பொல்லா, மற்றும் சீடர்கள் எபேசு நகரில் ஆற்றிய பணியை எடுத்துரைக்கிறார் லூக்கா. ‘நீங்கள் நம்பிக்கை கொண்டபோது தூய ஆவியால் ஆட்கொள்ளப்பட்டீர்களா?’ என்று திருத்தூதர்கள் கேட்க, மக்களோ, ‘தூய ஆவி என்னும் ஒன்று உண்டு என்றுகூட நாங்கள் கேள்விப்பட்டதில்லையே’ எனப் பதில் கூறுகிறார்கள். எந்தவித கோபமோ, வருத்தமோ இல்லாமல் தூய ஆவியைப் பற்றி அவர் பேசுகிறார். பேச்சின் நிறைவில் அனைவரும் தூய ஆவியாரைப் பெற்றுக்கொள்கிறார்கள். அவர்கள் பெற்ற திருமுழுக்கு யோவானின் திருமுழுக்கிலிருந்து அவர்கள் பெறாத நெருப்பின் திருமுழுக்கிற்கு அழைத்துச் செல்கிறார்கள் திருத்தூதர்கள்.

 

நற்செய்தி வாசகத்தில், தம் பிரியாவிடைப் பேருரையின் ஒரு பகுதியாக, சீடர்கள் விரைவில் அனுபவிக்கிற துன்பங்களை முன்னுரைக்கிற இயேசு, துன்பங்களின் நடுவில் வெற்றி உண்டு என்று வாக்குறுதி தருகிறார்.

 

கண்ணுக்குத் தெரிகிற தண்ணீர்த் திருமுழுக்கிலிருந்து கண்ணுக்குப் புலப்படாத தூய ஆவியாரை நோக்கி அழைத்துச் செல்கிறார்கள் பவுலும் அப்பொல்லோவும்!

 

கண்ணுக்குத் தெரிகிற துன்பத்திலிருந்து கண்ணுக்குப் புலப்படாத வெற்றியை நோக்கித் தம் சீடர்களை நகர்த்துகிறார் இயேசு.

 

பாத்திமா அன்னையின் காட்சிகளும், கண்களுக்குப் புலப்படாத கடவுளின் மறைபொருள் நோக்கி நம்மை அழைத்துச் செல்கின்றன.

நிற்க.

 

‘நாங்கள் காண்பவற்றை அல்ல, நாங்கள் காணதாவற்றை நோக்கியே வாழ்கிறோம். காண்பவை நிலையற்றவை. காணாதவை என்றென்றும் நிலைத்திருப்பவை’ (2 கொரி 4:18). (யூபிலி கி.பி. 2025, துணுக்கு 96)

 

அருள்திரு யேசு கருணாநிதி
மதுரை உயர்மறைமாவட்டம்
இரக்கத்தின் தூதுவர்

 


 

Share: