• 044-26428162
  • dbdeepagam@gmail.com
Logo

Sermons

இன்றைய இறைமொழி. வெள்ளி, 17 மே 2024. என்னைப் பின்தொடர்

Friday, May 17, 2024   Fr. Yesu Karunanidhi   Archdiocese of Madurai

Daily Gospel இன்றைய இறைமொழி Easter Season Eastertide

இன்றைய இறைமொழி
வெள்ளி, 17 மே 2024
பாஸ்கா காலம் 7-ஆம் வாரம் – வெள்ளி
திப 25:13-21. யோவா 21:15-19

 

என்னைப் பின்தொடர்

பாஸ்கா காலம் நிறைவுற இன்னும் ஓரிரு நாள்களே இருக்கின்ற வேளையில், யோவான் நற்செய்தியின் இறுதிப் பிரிவுகளிலிருந்து நாம் இன்றும் நாளையும் வாசிக்கின்றோம்.

 

இன்றைய நற்செய்தி வாசகத்தை மூன்று பிரிவுகளாகப் பிரிக்கலாம்: (அ) ‘என்னை நீ அன்பு செய்கிறாயா?’ என்று இயேசு பேதுருவிடம் மூன்று முறை கேட்டல். (ஆ) பேதுருவின் இறுதி நாள்கள் பற்றிய முன்னறிவிப்பு. (இ பேதுருவின் இரண்டாம் அழைப்பு.

 

(அ) ‘என்னை நீ அன்பு செய்கிறாயா?’ என்னும் இயேசுவின் கேள்வி

கலிலேயக் கடல் அருகே சீடர்கள் உணவருந்தி முடித்தவுடன், மற்றவர்கள் சற்று தூக்கக் கலக்கமாக அங்கே தூங்கிப் போக, பேதுருவை தனியாக அழைத்துச் செல்கின்ற இயேசு, ‘யோவானின் மகன் சீமோனே, நீ இவர்களை விட மிகுதியாக என்மீது அன்பு செலுத்துகிறாயா?’ என மூன்றுமுறை கேட்கின்றார். இந்த நிகழ்வு யோவான் நற்செய்தியில் மட்டுமே உள்ளது. இது ஏன் எழுதப்பட்டது? பேதுரு இயேசுவை மூன்று முறை மறுதலிக்கின்றார். இப்போது, அவர் திருஅவையின் தலைவராக இருப்பது தொடக்கத்திருஅவைக்கு நெருடலாக இருக்கும். ஆண்டவரை மூன்றுமுறை மறுதலித்த ஒருவர் எப்படி திருஅவையின் தலைவராக இருக்க முடியும்? என்ற கேள்வி தொடக்கத் திருஅவையில் எழுந்திருக்கலாம். இந்தக் கேள்விக்கு விடை தரும் விதமாக, மூன்று முறை இயேசுவை பேதுரு மற்ற எல்லாரையும் விட அதிகமாக அன்பு செய்வதாக பதிவு செய்கின்றார். ‘பேதுருவின் முதல் அழைப்பு நிகழ்வு இங்கே இன்னொரு வடிவத்தில் கொடுக்கப்பட்டுள்ளது’ என்பது சில ஆசிரியர்களின் புரிதல். இங்கே, ‘அன்பு’ என்ற சொல் கிரேக்கத்தில் இரண்டு வௌ;வேறு சொற்களாக வழங்கப்பட்டுள்ளது. முதல் மற்றும் இரண்டாம் கேள்வியில் இயேசு, ‘அகாப்பாவோ’ (‘தன்னலமற்ற அன்பு’) என்ற வினைச்சொல்லையும், மூன்றாம் கேள்வியில், ‘ஃபிலயோ’ (‘நட்பு அல்லது உறவுசார் அன்பு’) என்ற வினைச்சொல்லையும் பயன்படுத்துகின்றார். மூன்றாம் கேள்வியில், இயேசு, பேதுரு தனக்குக் காட்டும் இயல்பான நட்பு அல்லது அன்பு பற்றி விசாரிக்கின்றார். மூன்றாம் கேள்விக்கு விடை அளிக்கின்ற பேதுரு, ‘ஆண்டவரே! உமக்கு எல்லாம் தெரியுமே!’ என்று சரணடைகின்றார். இந்த நட்பில்தான் நான் உம்மை மறுதலித்தேனே என்று தன்னுடைய வலுவின்மையையும் ஏற்றுக்கொள்கிறார் பேதுரு. இயேசுவுக்கும் நமக்குமான உறவு பணி அல்லது அடிப்படையில் தொடங்கினாலும், இறுதியில் உறவுநிலையில் முடிகிறது.

 

(ஆ) ‘நீ கைகளை விரித்துக் கொடுப்பாய்’

இரண்டாவதாக, பேதுருவின் இறுதி நாள்கள் எப்படி இருக்கும் என்பதை இயேசு அவருக்கு முன்மொழிகின்றார்: ‘உனக்கு முதிர்ந்த வயது ஆகும்போது நீ கைகளை விரித்துக் கொடுப்பாய். வேறொருவர் உன்னைக் கட்டி, உனக்கு விருப்பம் இல்லாத இடத்திற்குக் கூட்டிச் செல்வார்.’ இது பேதுருவின் இறுதிநாள்கள் பற்றியது மட்டுமல்ல. மாறாக, நம் ஒவ்வொருவரின் இறுதிநாள்களும் பற்றியதும் கூட. கைகளை விரித்துக் கொடுக்க நிறைய துணிச்சல் வேண்டும். ‘என்னால் இது இயலாது’ என்று தன் வலுவின்மையை ஏற்றுக்கொள்ளும் ஒருவர்தான் கைகளை விரித்துக் கொடுக்க முடியும்.

 

(இ) ‘என்னைப் பின்தொடர்’

இறுதியாக, இயேசு, ‘என்னைப் பின்தொடர்’ என்று பேதுருவை அழைக்கின்றார். முதல் சீடர்களை ஒத்தமைவு நற்செய்திகளில் அழைத்த அதே வார்த்தையைக் கொண்டு இயேசு அழைக்கின்றார். இச்சொல்லாடலையே நம் இன்றைய பாடமாக எடுத்துக்கொள்வோம்.

 

பேதுருவுடைய வாழ்வின் இரண்டு திசைகளைச் சுட்டிக்காட்டுகிறார் இயேசு: ‘நீ விரும்பிய இடத்துக்குச் சென்றாய்,’ ‘இன்னொருவர் நீ விரும்பாத இடத்துக்கு உன்னை அழைத்துச் செல்வார்.’ ஒரு காலத்தில் பேதுரு தானே விரும்பித் தேர்ந்துகொள்கிற திசையில் வழிநடக்கிறார். இன்னொரு காலத்தில் மற்றவரால் வேறு திசையில் வழிநடத்தப்படுகிறார். இவ்விரண்டுக்கும் இடையே இன்னொரு திசை உண்டு, அதுதான் இயேசுவைப் பின்தொடர்தல். இத்திசையைத் தெரிந்துகொள்ளுமாறு பேதுருவுக்குக் கட்டளையிடுகிறார் இயேசு.

 

சீடத்துவம் என்பது திசை மாற்றம். நம் வாழ்வின் திசையை கடவுளை நோக்கி மாற்றிக்கொள்தல்.

 

முதல் வாசகத்தில், பவுலின் திசை மாற்றம் பற்றி வாசிக்கிறோம். அகிரிப்பா அரசன், பெர்னிக்கியு, பெஸ்து ஆகியோருக்கு இடையே பவுலைப் பற்றி நடக்கும் உரையாடலை வாசிக்கிறோம். தமஸ்கு நோக்கிய பவுலின் திசையை எருசலேம் நோக்கி, உரோமை நோக்கி என மாற்றுகிறார் இயேசு.

 

நிற்க.

‘நம் உலக அமைதிக்கான விருப்பமே எதிர்நோக்கின் முதல் அறிகுறியாகும். போர் என்னும் பெருந்துயரத்தில் மீண்டும் ஒருமுறை நம் உலகம் சிக்கி நிற்கிறது.’ திருத்தந்தை பிரான்சிஸ், யூபிலி அறிவிப்பு ஆணை, 9 மே 2024, எண். 8 (யூபிலி கி.பி. 2025, துணுக்கு 100)

 

அருள்திரு யேசு கருணாநிதி
மதுரை உயர்மறைமாவட்டம்
இரக்கத்தின் தூதுவர்

 


 

Share: