• 044-26428162
  • dbdeepagam@gmail.com
Logo

Sermons

இன்றைய இறைமொழி. ஞாயிறு, 19 மே 2024. உமது ஆவியை அனுப்பியருளும்!

Sunday, May 19, 2024   Fr. Yesu Karunanidhi   Archdiocese of Madurai

Daily Gospel இன்றைய இறைமொழி Easter Season Eastertide

இன்றைய இறைமொழி
ஞாயிறு, 19 மே 2024
தூய ஆவி ஞாயிறு பெருவிழா
திப 2:1-11. கலா 5:16-25. யோவா 15:26-27. 16:12-15

 

உமது ஆவியை அனுப்பியருளும்!

புத்த மடாலயம் ஒன்றைச் சந்திக்க பெரியவர் ஒருவர் வந்தார். வந்தவருக்கு ஆச்சர்யம். மடலாயத்தில் இரண்டு இளவல்கள் தியானம் செய்துகொண்டிருந்தார்கள். பெரியவருக்கு ஆச்சர்யம். இளவல்களில் ஒருவரிடம், ‘என்ன செய்கிறீர்கள்?’ எனக் கேட்டார். ‘தியானம் செய்கிறேன்’ என்றார் இளவல். ‘இந்த வயதில் என்ன தியானம் செய்கிறீர்கள்?’ கேட்டார் பெயர். ‘என் மூச்சை (சுவாசத்தை) கவனிக்கிறேன். சுவாசம் ஒன்றுதான் உண்மை. நம் பிறப்பு முதல் இறப்பு வரை நம்முடன் இருப்பது சுவாசம் தான். சுவாசம் நின்றவுடன் வாழ்க்கை முடிந்துவிடுகிறது. நம் தனிமையில், தூக்கத்தில், நடையில், அழுகையில், சிரிப்பில் அனைத்திலும் உடனிருப்பது சுவாசம்தான். நாம் கோபம் கொண்டால் சூடாவது சுவாசம். நாம் பரபரப்பாக இருந்தால் பதற்றம் அடைவது சுவாசம். அமைதியாக இருந்தால் இலுகுவாக இருப்பது சுவாசம். சுவாசக் காற்று உள்ளே செல்வதையும், சுவாசித்த காற்று வெளியே வருவதையும் உணர்தலே தியானம்’ என்று சொல்லிவிட்டுத் தன் தியானத்தைத் தொடர்ந்தார் இளவல்.

 

படைப்பின் தொடக்கத்தில், முதல் கதையாடலின்படி, ‘நீர்த்திரளின்மேல் கடவுளின் ஆவி அசைந்தாடிக்கொண்டிருந்தது’ (தொநூ 1:1). இரண்டாம் கதையாடலில், ஆண்டவராகிய கடவுள் ஆதாமை மண்ணிலிருந்து உருவாக்குகிற கடவுள், தம் மூச்சுக் காற்றை ஊதியவுடன் மனிதன் உயிருள்ளவன் ஆகின்றான் (காண். தொநூ 2:7). ஒட்டுமொத்த உலகப் படைப்பும் மானிடரின் படைப்பும் கடவுளின் உயிர் மூச்சால் சாத்தியமாகின்றன. கடவுளின் இந்த உயிர் மூச்சே இன்று நாம் கொண்டாடுகிற தூய ஆவியார்.

 

இன்று நம் திருஅவையின் பிறந்தநாள். வாரங்கள் எனப்படும் யூதர்களின் திருவிழாவின் நிறைவுநாளான பெந்தகோஸ்தே திருநாளில் கொடுங்காற்று வீசுவது போன்று ஓர் இரைச்சல் உருவாகி, நெருப்புப் போன்ற பிளவுற்ற நாவுகள் அன்னை கன்னி மரியா மேலும் திருத்தூதர்கள்மேலும் இறங்கியது இன்று. பூட்டிய அறைக்குள் உயிரற்றவர்கள்போலக் கிடந்தவர்களுக்கு புதிய மூச்சுக் காற்றாக வந்து சேர்கிறார் தூய ஆவியார். புதிய பிறப்பு அடைந்தவர்களாக அவர்கள் புதிய வாழ்க்கையைத் தொடங்குகின்றனர். இந்த நிகழ்வை நம் கண்முன் கொண்டு வருகிறது இன்றைய முதல் வாசகம்.

 

திருத்தூதர்கள்மேல் தூய ஆவியார் பொழியப்படும் நிகழ்வைப் பதிவு செய்கிற லூக்கா, தூய ஆவியாரின் காணக்கூடிய வடிவமாக ‘நெருப்பு போன்ற நாவுகள்’ என்னும் சொல்லாடலையும், கேட்கக்கூடிய வடிவமாக ‘காற்று போன்ற இரைச்சல்’ என்னும் சொல்லாடலையும் பயன்படுத்துகிறார். தூய ஆவியார் திருத்தூதர்கள்மேலும் அதே வேளையில் எருசலேம் நகரத்தவர்மேலும் தாக்கத்தை ஏற்படுத்துகிறார். திருத்தூதர்கள் வௌ;வேறு மொழிகளில் பேசத் தொடங்குகிறார்கள். நகரத்தவர் அனைவரும் தத்தம் சொந்த மொழிகளில் அவற்றைக் கேட்கத் தொடங்குகிறார்கள்.

 

ஆக, தூய ஆவியாரின் வருகை ஏற்படுத்துகிற முதல் மாற்றம் பேச்சும் அதைப் புரிந்துகொள்ளுதலுமே!

 

‘தூய ஆவியின் துணையால் வாழ்கிறோம். எனவே, அந்த ஆவி காட்டும் நெறியிலேயே நடக்க முயல்வோம்’ என்று இன்றைய இரண்டாம் வாசகத்தில் எழுதுகிறார் பவுல். ‘ஊனியல்பு’ மற்றும் ‘ஆவிக்குரிய இயல்பு’ என்னும் இரு இயல்புகள் பற்றி எடுத்துரைக்கின்ற பவுல், ஆவிக்குரிய இயல்போடு வாழுமாறு கலாத்தியத் திருஅவைக்கு அறிவுறுத்துகின்றார்.

 

ஆவிக்குரிய இயல்போடு வாழ்வது என்றால் என்ன?

 

இதைப் புரிந்துகொள்ள நாம் முதல் ஏற்பாட்டுக் கதை மாந்தர் சிம்சோன் (சாம்சன்) வாழ்க்கையை எடுத்துக்கொள்வோம். சிம்சோனின் பிறப்பு முதல் அவருடைய இறப்பு வரை ஆவியாரின் உடனிருப்பை அவருடைய வாழ்க்கையில் நாம் பார்க்கின்றோம். அவருடைய பிறப்பை விவிலிய ஆசிரியர் இப்படிப் பதிவு செய்கின்றார்:

 

‘அப்பெண் (மனோவாகின் மனைவி) ஒரு மகனைப் பெற்றெடுத்து அவனுக்குச் சிம்சோன் எனப் பெயரிட்டார். பையன் வளர்ந்து பெரியவன் ஆனான். ஆண்டவர் அவனுக்கு ஆசி வழங்கினார். சோராவுக்கும் எசுத்தாவேலுக்கும் இடையே அவன் இருக்கும்போது ஆண்டவரின் ஆவி அவனைத் தூண்டத் தொடங்கினார்’ (காண். நீத 13:24-25).

 

இங்கே, ‘தூண்டத் தொடங்குதல்’ என்று மொழிபெயர்க்கப்பட்டுள்ள எபிரேய வார்த்தையின் பொருள், ‘இங்கேயும் அங்கேயும் நகர்த்துதல், அல்லது அலைக்கழித்தல், அல்லது இழுத்தடித்தல்’ என்பதாகும். ஆக, ஆவியார் அல்லது ஆவி அவரை ஒரே இடத்தில் தங்க வைக்காமல் இங்கும் அங்கும் அலைக்கழிக்கிறார்.

 

இதுதான் தூய ஆவியாரின் முதல் பணி. அவரைப் பெற்றுக்கொண்ட எவரும் ஒரே இடத்தில் இருப்பதில்லை. உடனடியாக இயக்கத்திற்கு உட்படுவர்.

 

அன்னை கன்னி மரியாவின் வாழ்க்கையிலும் இதைப் பார்க்கலாம். ‘தூய ஆவி உம்மீது வரும். உன்னத கடவுளின் வல்லமை உம்மேல் நிழலிடும்’ (காண். லூக் 1:35) என்று வானதூதர் கபிரியேல் மரியாவுக்கு மங்கள வார்த்தை சொன்ன அடுத்த நிமிடம், மரியா புறப்பட்டு யூதேய மலைநாட்டிலுள்ள ஓர் ஊருக்கு விரைந்து செல்கின்றார் (காண். லூக் 1:39).

 

இதுதான் ஆவியாரின் இயக்கம். இந்த இயக்கத்தையே நாம் திருத்தூதர் பணிகள் நூலிலும் வாசிக்கின்றோம். பேதுரு உடனடியாக நற்செய்தி அறிவிக்கத் தொடங்குகின்றார். திருத்தூதர்கள் பல்வேறு இடங்களுக்குப் பயணமாகிறார்கள்.

 

‘தூய ஆவியின் தூண்டுதலுக்கேற்ப வாழுங்கள். அப்போது ஊனியல்பின் இச்சைகளை நிறைவேற்ற மாட்டீர்கள்’ எனச் சொல்கின்ற பவுல், அவை இரண்டும் ஒன்றுக்கு ஒன்று முரண்பட்டவை என்று சுட்டிக்காட்டி, ஒன்றைத் தெரிந்துகொள்ளவும் மற்றதை விட்டுவிடவும் அழைக்கின்றார்.

 

ஒன்றைப் பற்றிக்கொண்டு மற்றதை விடுதல் நம் வாழ்வில் மிக மிக அவசியம்.

 

கலாத்திய நகரத் திருஅவையினர் ஒரே நேரத்தில் பரத்தைமை, கெட்ட நடத்தை, காம வெறி, சிலை வழிபாடு, பில்லி சூனியம், பகைமை, சண்டை சச்சரவு, பொறாமை, சீற்றம், கட்சி மனப்பான்மை, பிரிவினை, பிளவு, அழுக்காறு, குடிவெறி, களியாட்டம் ஆகியவற்றையும், அன்பு, மகிழ்ச்சி, அமைதி, பொறுமை, பரிவு, நன்னயம், நம்பிக்கை, கனிவு, தன்னடக்கம் ஆகியவற்றையும் பற்றிக்கொள்ள விரும்பினர். ஆனால், இவை இரண்டும் ஒன்றுக்கொன்று முரணானவை என்பதை மறந்துவிட்டனர். காமவெறியும் களியாட்டமும் கொள்பவர் எப்படி அடுத்தவரை அன்பு செய்வார்? பொறாமை கொள்பவர் எப்படி மற்றவர் மேல் கனிவு காட்டுவார்? தன்னடக்கம் இல்லாதவர் தன்னையே பெரியவராகக் கருதி மற்றவர்களுக்கு அடையே பிரிவை வளர்ப்பார் அல்லவா?

 

ஆக, ஆண்டவருடைய ஆவியார் நம் வாழ்வின் இயக்கமாகவும், இயல்பாகவும் இருக்கிறார். நாம்தான் பல நேரங்களில் அவரை மறந்துவிடுகின்றோம். படைப்பின் இரண்டாம் கதையாடலின் பின்புலத்தில் பார்க்கும்போது, களிமண் போல நாம் ஊனியல்பையும், நம்மேல் ஊதப்பட்ட மூச்சுக்காற்று போல தூய ஆவியின் இயல்பையும் கொண்டிருக்கிறோம். மனித இயல்பைத் தாண்டி கடவுளின் இயல்பில் வாழ்வதற்கு நாம் முயற்சி செய்ய வேண்டும்.

 

ஆவியாரைத் தேடி நாம் அருங்கொடை இல்லங்களுக்கு அலையத் தேவையில்லை. அவர் நம்முடன் நம் சுவாசமாக இருக்கின்றார். அதனால்தான், பவுல், ‘தூய ஆவியின் துணையால் நாம் வாழ்கிறோம். எனவே அந்த ஆவி காட்டும் நெறியிலேயே நடக்க முயல்வோம்’ என்கிறார்.

 

எபேசு நகர நம்பிக்கையாளர்களைச் சந்திக்கிற பவுலும் அப்பொல்லோவும் அவர்களிடம், ‘தூய ஆவியாரை நீங்கள் பெற்றுக்கொண்டீர்களா?’ என்று கேட்டபோது, அவர்கள், ‘அப்படி எதுவும் இருப்பதாக நாங்கள் கேள்விப்பட்டதில்லையே!’ என மறுமொழி பகர்கிறார்கள் (காண். திப 19:1-2). மூவொரு கடவுளில் நாம் அதிகமாக மறந்துவிடுகிற நபர்தான் தூய ஆவியார்.

 

(அ) தூய ஆவியாரே நம் அக ஒலி, உள்ளுணர்வு

‘நீங்கள் வலப்புறமோ, இடப்புறமோ எப்பக்கம் சென்றாலும் ‘இதுதான் வழி, இதில் நடந்துசெல்லுங்கள்!’ என்னும் வார்த்தை பின்னிருந்து உங்கள் செவிகளில் ஒலிக்கும்’ (எசா 30:21) என்று ஆண்டவராகிய கடவுள் இஸ்ரயேல் மக்களுக்கு அறிவிக்கிறார். தூய ஆவியார்தாமே நம் உள்ளத்தில் ஒலிக்கும் குரலாக, நம் உள்ளுணர்வாக இருக்கிறார். நாம் நம் பாதைகளைத் தெரிவு செய்ய நம் உள்ளிருந்து குரல் கொடுக்கிறார் ஆவியார்.

 

(ஆ) தூய ஆவியாரே துணையாளர்

தூய ஆவியாரே நம்மை உண்மையை நோக்கி வழிநடத்துவார் என்கிறார் இயேசு இன்றைய நற்செய்தி வாசகத்தில். நாம் இயேசுவுக்குச் சான்று பகருமாறு நம்மைத் தூண்டி எழுப்புகிறவர் இவரே. நம் வாழ்க்கைப் பயணத்தில் நாம் தனியாக இருக்கிறோம் என்ற உணர்வு நமக்குச் சோர்வையும் கலக்கத்தையும் தருகிறது. நம் நீண்ட பயணத்தின் துணையாளராக வருகிற ஆவியார் நமக்கு ஆற்றலும் வலிமையும் தருகிறார்.

 

(இ) தூய ஆவியாரே வாழ்வு

ஊனியல்புக்கு நாம் அடிமையாக மாறும்போது இறக்கத் தொடங்குகிறோம். ஆவியாரின் இயல்பை நாடும்போது வாழத் தொடங்குகிறோம். ஊனியல்பைப் தெரிந்துகொள்வது எளிதாக இருக்கிறது. ஆனால், ஆவிக்குரியதைத் தெரிந்துகொள்வது சரியாக இருக்கிறது. எளிமையாக இருப்பவற்றை விடுத்து, சரியாக இருப்பவற்றைப் பற்றிக்கொள்வோம்.

 

திருப்பாடல் (பதிலுரைப்பாடல்) ஆசிரியர் போல,

 

‘ஆண்டவரே, உம் ஆவியை அனுப்பி, மண்ணகத்தின் முகத்தைப் புதுப்பிக்கின்றீர்.
என் உயிரே! ஆண்டவரைப் போற்றிடு!
… … …

நீர் அவற்றின் மூச்சை நிறுத்திவிட்டால், அவை மாண்டு மறுபடியும் புழுதிக்கே திரும்பும்.
உமது ஆவியை நீர் அனுப்ப, அவை படைக்கப்படுகின்றன!’ (திபா 104).

 

இன்று பெந்தகோஸ்தே பெருவிழாவில் இறங்கி வருகின்ற தூய ஆவியார், நம் முகத்தையும் அகத்தையும் புதுப்பிப்பாராக! நம் மூச்சுக்காற்றாகத் திகழும் தூய ஆவியாரைத் துணையாளராகக் கொள்வோம். நமக்கு வேண்டியதை அவரிடம் கேட்போம். இந்தப் பிரபஞ்சத்தோடு நம்மை இணைக்கிற மூச்சாக இருக்கிற தூய ஆவியார்தாமே அனைத்தையும் நமக்குப் பெற்றுக்கொடுக்கிறார்.

 

அருள்திரு யேசு கருணாநிதி
மதுரை உயர்மறைமாவட்டம்
இரக்கத்தின் தூதுவர்

 


 

Share: