• 044-26428162
  • dbdeepagam@gmail.com
Logo

Sermons

இன்றைய இறைமொழி. திங்கள், 20 மே 2024. அவரே தாய்!

Monday, May 20, 2024   Fr. Yesu Karunanidhi   Archdiocese of Madurai

Daily Gospel இன்றைய இறைமொழி Ordinary Time

இன்றைய இறைமொழி
திங்கள், 20 மே 2024
பொதுக்காலம் 7-ஆம் வாரம் – திங்கள்
புனித கன்னி மரியா திருஅவையின் தாய், நினைவு
தொநூ 3:9-15, 20. யோவா 19:25-27

 

அவரே தாய்!

 

பெந்தகோஸ்தே பெருவிழா ஞாயிற்றைத் தொடர்ந்து வருகிற திங்கள் கிழமையை திருவழிபாட்டில், ‘கன்னி மரியா திருஅவையின் தாய்’ என நினைவுகூர வேண்டும் என்று திருத்தந்தை பிரான்சிஸ் 2018-ஆம் ஆண்டு அழைப்பு விடுத்தார். ஏற்கெனவே மரியாவுக்குக் கொடுக்கப்பட்டிருந்த இத்தலைப்பையும், நினைவையும் அட்டவணைக்குள் கொண்டு வந்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

 

நான்காம் நூற்றாண்டில் புனித கன்னி மரியா திருஅவையின் தாய் என்னும் தலைப்பை முதன்முதலாகப் பயன்படுத்தினார் புனித அம்புரோஸ். இதே தலைப்பை 18-ஆம் நூற்றாண்டில் திருத்தந்தை 14-ஆம் பெனடிக்ட், திருத்தந்தை 13-ஆம் லியோ ஆகியோர் நினைவுகூர்ந்தார்கள். 1964-ஆம் ஆண்டில், இரண்டாம் வத்திக்கான் சங்கத்தின் மூன்றாவது அமர்வின் இறுதியில், ‘மரியா திருஅவையின் தாய்’ என அழைக்கிறார்.

 

இன்று இரண்டு முதல் வாசகங்கள் கொடுக்கப்பட்டுள்ளன: தொநூ 3:9-15,20, மற்றும் திப 1:12-14. இவற்றில் ஏதாவது ஒன்றை இன்றைய திருப்பலியின் வாசகமாக எடுத்துக்கொள்ளலாம். தொநூ வாசகத்தில், ‘மனிதன் தன் மனைவிக்கு ஏவாள் என்று பெயரிட்டான். ஏனெனில் உயிருள்ளோர் எல்லாருக்கும் அவளே தாய்’ என்று கொடுக்கப்பட்டுள்ளது. திப வாசகத்தில், ‘இயேசுவின் தாய் மரியாவோடு இணைந்து ஒரே மனத்தோடு இறைவனிடம் வேண்டிக்கொண்டிருந்தார்கள்’ என்று கொடுக்கப்பட்டுள்ளது.

 

இரண்டு வாசகங்களுமே அன்னை கன்னி மரியாவை மறைமுகமாகவும், நேரிடையாகவும், ‘திருஅவையின் தாய்’ என அழைக்கின்றன.

 

‘ஒரு மரம், ஓர் ஆண், ஒரு பெண்.’

 

மரத்திற்குப் பின்னால் ஒளிந்துகொண்டிருந்த நம் முதற்பெற்றோரை எதிர்கொள்கிற ஆண்டவராகிய கடவுள் அவர்களைக் கடிந்துகொள்கிறார். ஆண்டவர் பெண்ணுக்கு வழங்கும் சாபத்தோடு இணைந்து மீட்பு வாக்குறுதியும் இருக்கிறது: ‘அவள் வித்து உன் தலையைக் காயப்படுத்தும்.’ முதற்பெற்றோர் ஏதேன் தோட்டத்தை விட்டு வெளியேற்றப்பட்டவுடன், ஆண் பெண்ணுக்கு ‘ஏவாள்’ என்னும் புதிய பெயர் தருகிறார். ‘ஏவாள்’ என்றால் ‘உயிருள்ளோர் எல்லாருக்கும் தாய்!’

 

சிலுவையில் தொங்கிக்கொண்டிருக்கிற இயேசு தமக்கு முன்பாக நிற்கிற தம் அன்புச் சீடரிடம், ‘இதோ, உம் தாய்!’ என்று தம் தாயை ஒப்படைக்கிறார். இந்த நொடி முதல், கன்னி மரியா அனைத்துச் சீடர்களின் தாயாக மாறுகிறார்.

 

இயேசுவின் விண்ணே;றத்திற்குப் பின்னர் நடந்த நிகழ்வுகளைப் பதிவு செய்கின்ற லூக்கா இயேசுவின் தாய் பற்றிக் குறிப்பிடுவதில் அக்கறை காட்டுகின்றார். தொடக்கத் திருஅவை தொடங்கி, இன்று வரை நம்மிடையே எழும் கேள்வி அன்னை கன்னி மரியா பற்றியதுதான். சிலுவையின் அடியில் இயேசுவின் தாய் நின்றதாக (நற்செய்தி வாசகம்) யோவான் தன் நற்செய்தியில் பதிவு செய்கின்றார். மாற்கு நற்செய்தியாளரின் பதிவின்படி இயேசு அடக்கம் செய்யப்பட்ட நிகழ்வில் சில பெண்கள் இருக்கின்றனர். அவர்களின் அன்னை கன்னி மரியாவும் இருந்திருப்பார். ஆனால், இயேசுவின் உயிர்ப்பு மற்றும் விண்ணேற்ற நிகழ்வுகளில் அன்னை கன்னி மரியா பற்றிய குறிப்பு எதுவும் இல்லை. விண்ணேற்றத்திற்குப் பின்னர் மரியா திருத்தூதர்களோடு இணைந்து இறைவேண்டல் செய்கின்றார்.

 

‘இயேசுவே திருஅவை’ என்பதை அன்னை கன்னி மரியா அறிந்திருந்தார்.

 

திப 9-இல் தமஸ்கு நகர் நோக்கி வாளேந்திச் செல்கின்ற சவுலை (பவுலை) தடுத்தாட்கொள்கின்ற ஆண்டவர், ‘நீ துன்புறுத்தும் இயேசு நான்தான்!’ என்கிறார். அதாவது, அங்கே இயேசு தன்னைத் திருஅவையோடு ஒன்றித்துக்கொள்கின்றார். ஆக, திருஅவைதான் இயேசு, இயேசுதான் திருஅவை.

 

இந்த நிகழ்வின் முன்னோடியாக இருக்கிறது மரியா திருத்தூதர்களோடு இணைகின்ற நிகழ்வு.

 

சிலுவையின் அடியில், இயேசு, ‘இதோ! உம் மகன்!’ என்று யோவானை அர்ப்பணித்த அந்த நொடியில், அனைத்துத் திருத்தூதர்களையும், அனைத்து நம்பிக்கையாளர்களையும், ஒட்டுமொத்தத் திருஅவையையும் தன் பிள்ளையாக ஏற்றுக்கொள்கின்றார் அன்னை கன்னி மரியா. இவ்வாறாக, இயேசுவின் தாய் என்று இருந்தவர், திருஅவையின் தாயாக மாறுகின்றார்.

 

மரியா ஏன் திருஅவையைத் தன் தாயாக எடுத்துக்கொண்டார்? தன் தனிமை போக்கவா? தன் மகனை இழந்த துயரம் போக்கவா? தன் மகனின் இறப்பு தந்த வெறுமையை நீக்கிக் கொள்ளவா? திருத்தூதர்களுக்கு ஒன்றும் தெரியாது என்பதற்காகவா?

 

இல்லை!

 

‘நான் ஆண்டவரின் அடிமை. உம் சொற்படியே எனக்கு நிகழட்டும்!’ (காண். லூக் 1:38) என்று வானதூதர் கபிரியேல் வழியாக இறைவனிடம் சராணகதி அடைந்த அந்த நொடியே, அவர் தன்னை யாதுமாக இறைவனின் திட்டத்திற்கு ஒப்புக்கொடுத்ததால், இறைவனின் திட்டமான திருஅவைக்குத் தாயாக, தன்னையே கையளிக்கின்றார்.

 

மரியாவும் திருத்தூதர்களும் மேலறையில் இறைவேண்டல் செய்கிறார்கள்.

 

இந்த மேலறையில்தான் இயேசு தன் இறுதி இராவுணவைக் கொண்டாடினார். புதிய உடன்படிக்கையின் இரத்தம் என்று சொல்லி, அப்பம் மற்றும் இரசத்தை அவர் தன் சீடர்களோடு பகிர்ந்துகொண்டது இந்த அறையில்தான். புதிய உடன்படிக்கை ஏற்படுத்தப்பட்ட இடத்திலேயே தொடங்குகிறது திருஅவையின் பயணம். இயேசுவின் மகிழ்ச்சியான பொழுதாக இறுதி இராவுணவு இருந்தது என்பதை அவருடைய பிரியாவிடை உரை (யோவான் நற்செய்தி) நமக்குச் சொல்கிறது. ஆக, கல்வாரியில் அல்ல, வெற்றுக் கல்லறையில் அல்ல. மாறாக, மேலறையில் தொடங்குகிறது மரியாவின் தாய்மைப் பயணம்.

 

இரண்டாவதாக, அன்னை கன்னி மரியா திருத்தூதர்களோடு இணைந்திருக்கின்றார். இணைந்திருத்தல் இல்லாமல் தாய்மை இல்லை. ஒரு தாய் தன் குழந்தைகளோடு இணைந்திருந்தால் மட்டுமே அவரின் தாய்மையை நாம் கொண்டாடுகிறோம். உடலளவில் முதலில் அவர் குழந்தையோடு இணைந்திருக்கின்றார். பின் உள்ளத்தளவில் இணைந்திருக்கின்றார். இறந்த பின்னும் நினைவாக இணைந்திருக்கின்றார். இணைந்திருத்தலில் இல்லாமல் அவர் தன் தாய்மையை நிலைநிறுத்த முடியாது. அன்னை கன்னி மரியா, இயேசுவின் இடத்தில் நின்று, திருத்தூதர்களை ஒருவர் மற்றவர்களோடு இணைக்கின்றார்.

 

மூன்றாவதாக, இணைந்திருத்தல் இறைவேண்டலாகக் கனிகிறது. தன் தாய் மோனிக்கா பற்றி எழுதுகின்ற புனித அகுஸ்தினார், ‘இறைவேண்டலில் எந்நேரமும் என்னை நினைவில்கொள்.அதன் வழியாகவே நான் உன்னுடன் இணைந்திருப்பேன்’ என்று அவர் சொன்னதாகப் பதிவு செய்கின்றார். இறைவேண்டல் இறைவனையும் நம்மையும் அன்றி, நம்மை ஒருவர் மற்றவரோடும் இணைக்கின்றது. ‘ஒரே மனத்தோடு இறைவனிடம் வேண்டிக்கொண்டிருந்தார்கள்’ என்று மிக அழகாகப் பதிவு செய்கின்றார் லூக்கா. திருத்தூதர்களும் அன்னை கன்னி மரியாவும் வெள்வேறு நபர்களாக இருந்தாலும், அவர்கள் உள்ளம் ஒன்றாக இருக்கின்றது. இதுவே இயேசுவின் இறைவேண்டலாக இருந்தது. ஏனெனில், ‘எல்லாரும் ஒன்றாக இருப்பார்களாக’ என்று வேண்டினார் இயேசு.

 

இன்று அன்னை கன்னி மரியாவை, திருஅவையின் தாய் எனக் கொண்டாடி மகிழும் நாம், அத்தாயின் வழியாக இறைவனுக்கு நன்றி கூறுவோம். திருஅவையில் உள்ள நம் அனைவருக்கும் அவர் தாய் என்ற நிலையில், அவரோடு இணைந்து நம்மையும் இறைத்திட்டத்திற்குச் சரணாகதியாக்க முன்வருவோம்.

 

நிற்க.

 

யூபிலி 2025-க்கான தயாரிப்பின் இரண்டாவது ஆண்டான இந்த ஆண்டு இறைவேண்டல் ஆண்டு என அழைக்கப்படுகிறது. திருத்தூதர்களுடன் இணைந்து இறைவேண்டல் செய்கிற அன்னை கன்னி மரியா இறைவேண்டலுக்கான தூண்டுதலாக நிற்கிறார். (யூபிலி கி.பி. 2025, துணுக்கு 102).

 

அருள்திரு யேசு கருணாநிதி
மதுரை உயர்மறைமாவட்டம்
இரக்கத்தின் தூதுவர்

 


 

Share: