• 044-26428162
  • dbdeepagam@gmail.com
Logo

Sermons

இன்றைய இறைமொழி. புதன், 22 மே 2024. நம் சார்பாக இருக்கிறார்

Wednesday, May 22, 2024   Fr. Yesu Karunanidhi   Archdiocese of Madurai

Daily Gospel Daily Catholic Lectio இன்றைய இறைமொழி Ordinary Time

இன்றைய இறைமொழி
புதன், 22 மே 2024
பொதுக்காலம் 7-ஆம் வாரம் – புதன்
யாக்கோபு 4:13-17. மாற்கு 9:38-40

 

நம் சார்பாக இருக்கிறார்

 

தங்களுக்குள்ளே யார் பெரியவர் என்று வழியில் தங்களிடையே விவாதித்துக்கொண்டிருந்த சீடர்கள், அடுத்த நிகழ்வில், ‘நாம் – அவர்கள்’ என்னும் அடுத்த பிரிவினையை இயேசுவிடம் கொண்டு வருகிறார்கள். ஒருவர் இயேசுவின் பெயரால் பேய்களை ஓட்டுவதைக் கண்டு அவரைத் தடுக்கப் பார்க்கிறார்கள். ஏனெனில், அவர் ‘நம்மைச் சாராதவர்’ என்பது அவர்களுடைய வாதம். ஆனால், ‘இயேசுவோ, நமக்கு எதிராக இல்லாதவர் நம் சார்பாக இருக்கிறார்’ என்று சொல்லி அவர்களுடைய பார்வையை விரிவுபடுத்துகிறார்.

 

முதல் பிரச்சினை, இயேசுவுடைய சீடர்களின் குறுகிய மனப்பாங்கும் பார்வையும். இயேசுவையும் அவருடைய பெயரையும் அவருடைய அதிகாரத்தையும் தங்களுக்கு உரியது என்று கருதுகிறார்கள் சீடர்கள்.

 

‘அவரைத் தடுக்க வேண்டாம்!’ எனச் சொல்கிறார் இயேசு. நற்செயல்கள் எங்கும், எப்படியும் நடக்கலாம் என்பதும், அவற்றை யாரும் தடுக்கக் கூடாது என்பதும் இயேசுவின் உளப்பாங்காக இருக்கிறது.

 

‘என் பெயரால் வல்ல செயல் செய்பவர் என்னை இகழ்ந்து பேசமாட்டார்’ – நற்செயல் இன்னொரு நற்செயலைப் பெற்றெடுக்கும்.

 

‘நமக்கு எதிராக இராதவர் நம் சார்பாக இருக்கிறார்’ – தீமையை எதிர்க்கிறவர் எவரும் கடவுளின் பக்கம் இருக்கிறார். இறையாட்சி என்பது இயேசுவின் சீடர்கள் வட்டத்தையும் தாண்டியது.

 

இவ்வாசகத்தை நம் வாழ்வோடு பொருத்திப் பார்ப்போம்:

 

(அ) ‘நாம்’ ‘அவர்கள்’ என்னும் வேறுபாடு நாம் பாராட்டக்கூடிய நேரங்கள் எவை? குடும்பம், பின்புலம், நம்பிக்கை, சமூக நிலை ஆகியவற்றைப் பொருத்து ‘நாம்’-‘அவர்கள்’ என்று வேற்றுமை பாராட்டுவது இறையாட்சிக்கு எதிரானது.

 

(ஆ) இயேசு நம் பார்வையை அகலமாக்குகிறார். இறையாட்சி அனைவருக்கும் அழைப்பு விடுப்பதாகவும், அனைவரையும் உள்ளடக்கியதாகவும் இருக்கிறது.

 

(இ) கடவுளின் செயல்பாடுகள் நாம் எதிர்பாராத இடங்களிலும், நபர்கள் வழியாகவும் நிகழும்போது நம் பதிலிறுப்பு என்ன?

 

இன்றைய முதல் வாசகத்தில், உள்ளத்தில் பெருமை கொள்வதைப் பற்றிப் பேசுகிற யாக்கோபு, நாம் செய்கிற அனைத்திலும் நம்மைத் தாண்டிய கடவுளின் கரம் இருக்கிறது என்பதை உணர்ந்து அதற்கேற்றாற்போல நம் வாழ்வைத் தகவமைத்துக்கொள்ள நம்மை அழைக்கிறார். ‘ஆண்டவருக்குத் திருவுளமானால், நாங்கள் உயிரோடிருப்போம், இன்னின்ன செய்வோம்!’ என்று கடவுளை மையப்படுத்திய வாழ்க்கை நடத்துவது நலம்.

 

நிற்க.

 

வேறுபாடு பார்க்கிற மனப்பாங்கை விடுத்து, அனைவரையும் உள்ளடக்கிய பார்வை பெறுகிறவர் எதிர்நோக்கின் திருப்பயணியாக மாறுகிறார் (யூபிலி கி.பி. 2025, துணுக்கு 104).

 

அருள்திரு யேசு கருணாநிதி
மதுரை உயர்மறைமாவட்டம்
இரக்கத்தின் தூதுவர்

 


 

Share: