• 044-26428162
  • dbdeepagam@gmail.com
Logo

Sermons

இன்றைய இறைமொழி. வியாழன், 23 மே 2024. தண்ணீரும் நெருப்பும்

Thursday, May 23, 2024   Fr. Yesu Karunanidhi   Archdiocese of Madurai

Daily Gospel Daily Catholic Lectio இன்றைய இறைமொழி Ordinary Time

இன்றைய இறைமொழி
வியாழன், 23 மே 2024
பொதுக்காலம் 7-ஆம் வாரம் – வியாழன்
யாக்கோபு 5:1-6. மாற்கு 9:41-50

 

தண்ணீரும் நெருப்பும்

 

(அ) மையக்கருத்து

 

கிறிஸ்துவின் சீடர் ஒருவருக்கு மற்றவர் தரும் தண்ணீர் அவருக்கு கைம்மாறு பெற்றுத்தரும். கிறிஸ்துவின் சீடருடைய வாழ்வை நெருப்பு புடமிட்டுப் பார்க்கும்.நாம் செய்யும் சின்னஞ்சிறிய இரக்கச் செயல்களின் முக்கியத்துவத்தையும், மற்றவர்களை வழிதவறச் செய்வதால் விளையும் ஆபத்தையும் நமக்கு எடுத்துரைக்கிறது இன்றைய நற்செய்தி வாசகம்.

 

(ஆ) பாட அமைப்பு

 

நற்செய்தி வாசகத்தின் முதல் பகுதி, மற்றவர்களை நோக்கியும், இரண்டாவது பகுதி கிறிஸ்துவின் சீடர்களை நோக்கியதாகவும் இருக்கிறது. முதல் பகுதியில், மற்றவர் கைம்மாறு பெறுவார் என்னும் வாக்குறுதி தரப்படுகிறது. இரண்டாவது பகுதியில், சீடர்களுடைய பொறுப்புணர்வு சுட்டிக்காட்டப்பட்டு அவர்களுக்கு எச்சரிக்கை விடப்படுகிறது.

 

(இ) வார்த்தைகளும் விளக்கங்களும்

 

1. ‘ஒரு கிண்ணம் தண்ணீர்’ (வ. 41). கிறிஸ்துவின் பெயரால் அல்லது பெயருக்காகச் செய்யப்படுகிற சிறிய இரக்கச் செயல்களின் உருவகம். நம் நம்பிக்கை அன்றாடம் வாழ்ந்துகாட்டப்படுவதிலும், சிறிய செயல்களிலும் அடங்கியுள்ளது. பெரிய பெரிய செயல்பாடுகள் அல்ல, மாறாக, சின்னஞ்சிறிய செயல்கள் போதும்!

 

2. ‘சிறியோர்களை நெறிதவறச் செய்தல், பாவத்திற்கு இட்டுச் செல்தல்’ (வ. 42). மற்றவருடைய நம்பிக்கையைக் குலைக்குமாறு செயல்படுதல் தவறு. நாம் செய்கிற ஒவ்வொரு செயலும் மற்றவர்கள்மேல், குறிப்பாக, வலுவற்றவர்கள்மேல் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதால், நாம் அதைப் பற்றி மிகவும் கவனமாகவும் பொறுப்புணர்வுடனும் இருக்க வேண்டும்.

 

3. மிகைப்படுத்தப்பட்ட மொழி (வவ. 43-47). ‘கை, காலை வெட்டுதல், கண்களைப் பிடுங்குதல்’ என்னும் சொல்லாடல்கள் பயன்படுபாடு மிகைப்படுத்துதலைக் காட்டுகிறது. கடவுளுக்கும் நமக்குமான உள்ள உறவுக்குத் தடையாக இருக்கிற காரணிகளை முழுமையாக விலக்க வேண்டும் என்பது பாடம். நம்பிக்கைப் பயணத்தில் நாம் எதிர்கொள்கிற தனிப்பட்ட தடைகள் எவை?

 

4. ‘தூய்மையாக்கும் நெருப்பு’ (வ. 49). நாம் அடைகிற துன்பங்கள் நம் நம்பிக்கையைத் தூய்மைப்படுத்தி அதற்கு அழகு தருகின்றன. நம்மைச் சீடர்களாக உருவாக்குகின்றன.

 

5. ‘உப்பும் அமைதியும்’ (வ. 50). இயேசுவின் சீடர்களுடைய வாழ்வு கலப்பற்றதாக, மேன்மையானதாக இருக்க வேண்டும். சீடர்கள் தங்களுடைய உறவு வாழ்வில் அமைதியையும் தோழமையையும் தேட வேண்டும்.

 

(ஈ) முதல் வாசகம்

 

செல்வத்தின் நிலையாமை பற்றியும், நாம் செய்கிற வேலைகளில் – வேலைக்காரருக்குக் கூலி – நாம் காட்ட வேண்டிய நீதி பற்றியும் தம் குழுமத்திற்கு அறிவுறுத்துகிறார் யாக்கோபு. செல்வம் பயன்படுத்தப்படாமல் இருக்கும்போது, அல்லது மிகுதியாகச் சேர்த்துவைக்கப்படும்போது தானாகவே அழிந்துவிடுகிறது. மேலும், செல்வம் பற்றிய பேரார்வம் மனித சதையை நெருப்பு போல அழித்துவிடுகிறது. செல்வம் பற்றிய ஏக்கமும் கவலையும் கலக்கமும் மனிதர்களின் உடலுக்கும் உள்ளத்திற்கும் தீங்கு விளைவிக்கின்றன. ஆக, செல்வம் என்பது சேர்த்துவைக்கப்பட வேண்டியது அல்ல, மாறாக, இரக்கச் செயல்களுக்காகப் பயன்படுத்தப்பட வேண்டியது. மேலும், நாம் பெற்றிருக்கிற செல்வம் அல்ல, மாறாக, நாம் மற்றவர்களுக்கு, குறிப்பாக வலுவற்றவர்களுக்குக் காட்டும் நீதியே நம்மை மேன்மையானவர்கள் ஆக்குகிறது.

 

(உ) இறுதியாக

 

நாம் செய்கிற சிறிய செயல்களும், அன்றாடச் செயல்களும் முதன்மையானவை என்று பாடத்தையும், நம்பிக்கையாளர் ஒவ்வொருவரும் பெற்றிருக்கிற ஆன்மிகப்பொறுப்புணர்வு பற்றியும், செல்வத்தின் இயலாமை, நீதியான செயல்பாடுகளின் அவசியம் பற்றியும் இன்று நாம் கற்றுக்கொள்கிறோம்.

 

நிற்க.

 

நம் நம்பிக்கை வாழ்வை ஆராய்ந்து பார்க்கவும், அதை மேன்மைப்படுத்தவும் நம்மை புனித ஆண்டு அழைக்கிறது. (யூபிலி கி.பி. 2025, துணுக்கு 105).

 

அருள்திரு யேசு கருணாநிதி
மதுரை உயர்மறைமாவட்டம்
இரக்கத்தின் தூதுவர்

 


 

Share: