• 044-26428162
  • dbdeepagam@gmail.com
Logo

Sermons

இன்றைய இறைமொழி. புதன், 29 மே 2024. மேன்மை உணர்வு

Wednesday, May 29, 2024   Fr. Yesu Karunanidhi   Archdiocese of Madurai

Daily Catholic Lectio இன்றைய இறைமொழி Ordinary Time

இன்றைய இறைமொழி
புதன், 29 மே 2024
பொதுக்காலம் 8-ஆம் வாரம் – புதன்
1 பேதுரு 1:18-25. மாற்கு 10:32-45

 

மேன்மை உணர்வு

 

மானிடர்களை அடிப்படையாக இயக்குகிற உணர்வுகள் இரண்டு என மொழிகிற உளவியல் அறிஞர் சிக்மன்ட் ஃப்ராய்ட், ‘வாழ்வு உணர்வு’ (‘eros,’ life instinct) தன்னையே தக்கவைத்துக்கொள்ளவும் உருவாக்கவும் இன்பம் அனுபவிக்கவும் ஒருவரோடு ஒருவர் இணைந்துகொள்ளவும் தூண்டுகிறது என்றும், ‘இறப்பு உணர்வு’ (‘thanatos,’ death instinct) தன்னையே அழித்துக்கொள்ளவும் வன்முறையோடு செயல்படவும் மற்றவர்களிடமிருந்து விலகி நிற்கவும் தூண்டுகிறது என்றும் கூறுகிறார்.

 

‘இறப்பு உணர்வோடு’ தொடர்புடைய ஓர் உணர்வு ‘முதன்மை உணர்வு’ (‘greatness instinct’) அனைத்திலும் நாம் முதன்மையாக இருக்க வேண்டும் என்று நேர்முகமாக நம்மில் தொடங்கும் இந்த உணர்வு, மற்றவர்கள்மேல் அதிகாரம் செலுத்தவும், அனைத்தும் எனக்கு உரிமையானது (sense of entitlement) என அனைவரையும் நம்மை நோக்கித் திருப்பவும் முயன்று, எதிர்மறையாக மாறுகிறது.

 

இன்றைய நற்செய்தி வாசகத்தில் இயேசு தம் பாடுகள், இறப்பு, உயிர்ப்பை மூன்றாவது முறை (இறுதியாக) முன்னுரைக்கிறார். இதற்கு முந்தைய பொழுதுகளில்போலவே இப்போதும் சீடர்கள் அவரைத் தவறாகப் புரிந்துகொள்கிறார்கள். செபதேயுவின் புதல்வர்கள் யாக்கோபுவும் யோவானும் – ‘செபதேயுவின் மனைவி இயேசுவிடம் வந்தார்’ என எழுதி திருத்தூதர்களின் முகத்தைக் காப்பாற்றுகிறார் மத்தேயு – இயேசுவிடம் வந்து, அவருடைய மாட்சியின் வருகையின்போது ஒருவர் வலப்புறமும் மற்றவர் இடப்புறமும் அமர விரும்புகிறார்கள். அவர்களுடைய புரிதலை மாற்றுகிற இயேசு, பணிவிடை செய்வதில்தான் மேன்மை அடங்கியுள்ளது என அறிவுறுத்துகிறார்.

 

செபதேயுவின் புதல்வர்களுக்கு எழுந்த இந்த முதன்மை அல்லது மேட்டிமை உணர்வு – இயேசுவுக்கு அருகில் அமர வேண்டும் என்று நேர்முகமாகத் தொடங்கினாலும் – மற்றவர்கள்மேல் அதிகாரம் செலுத்தவும், தாங்கள் திருத்தூதர்கள் என்பதற்காக சிலவற்றை உரிமையாக எடுத்துக்கொள்ளவும் விரும்புகிறார்கள். இவர்களுடைய கோரிக்கை மற்ற சீடர்களிடமிருந்து இவர்களை அந்நியமாக்கிவிடுகிறது. அதிகாரம் மற்றவர்களை நம்மைவிட்டுத் தூரமாக்குகிறது.

 

இயேசு மூன்று நிலைகளில் அவர்களுடைய புரிதலை மாற்றுகிறார்:

 

(அ) திருத்தூது நிலை என்பது இயேசுவுடைய மாட்சிமையில் பங்கேற்பதில் அல்ல, மாறாக, அவருடைய துன்பத்தில் பங்கேற்பதில்தான் அடங்கியுள்ளது.

 

(ஆ) முதன்மையானவர்கள் அதிகாரம் செலுத்துவது புறவினத்து மக்களிடையே நடக்கக் கூடிய நிகழ்வு.

 

(இ) முதன்மை என்பது மற்றவர்களுக்குப் பணிவிடை புரிவதில் வருகிறதே தவிர, மற்றவர்களிடமிருந்து பணிவிடை பெறுவதில் அல்ல.

 

இந்தப் புதிய புரிதலுக்கான உருவகமாக தம்மையே முன்மொழிகிறார் இயேசு. மானிட மகன் பணிவிடை புரிவதற்காக – தம் உயிரையே பலருக்காக அழிப்பதன் வழியாக – வந்தார். இதையே மாபெரும் விலை என முதல் வாசகத்தில் மொழிகிறார் பேதுரு.

 

முதன்மை உணர்வு நம்மில் இயல்பாகவே எழக்கூடியது. ஆனால், பணிவிடை உணர்வு (‘service instinct’) வருவதற்கு நாமே முயற்சி செய்ய வேண்டும். தியாகம், தாராள உள்ளம், துணிவு கொள்கிற நபரே பணிவிடை செய்ய முடியும். முந்தைய உணர்வை நடுநிலையாக்க பிந்தைய உணர்வை வளர்த்துக்கொள்ள வேண்டும். பணிவிடை புரிகிற நபர் மற்றவரை முதன்மையானவர் எனக் கருதுகிறார். ஒவ்வொருவரும் மற்றவருடைய முதன்மையை முன்நிறுத்தி வாழும்போது அதிகார அந்நியம் மறைந்து அன்பு நெருக்கம் பிறக்கிறது – ‘தூய உள்ளத்தோடு ஒருவருக்கொருவர் ஆழ்ந்த அன்பு காட்டுங்கள்’ என பேதுரு கூறுவதுபோல (முதல் வாசகம்)!

 

நிற்க.

 

யூபிலி 2025-க்கான தயாரிப்பாக நாம் கற்கிற நான்கு கொள்கை ஏடுகளை நமக்கு வழங்கியவர் இன்று நாம் கொண்டாடி மகிழ்கிற திருத்தந்தை புனித ஆறாம் பவுல் ஆவார். ‘மனித வாழ்வு பற்றிய’ அவருடைய சுற்றுமடல் முதன்மையான ஒன்று. இவர் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களால் அக்டோபர் 14, 2024 அன்று புனித நிலைக்கு உயர்த்தப்பட்டார். (யூபிலி கி.பி. 2025, துணுக்கு 110).

 

அருள்திரு யேசு கருணாநிதி
மதுரை உயர்மறைமாவட்டம்
இரக்கத்தின் தூதுவர்

 


 

Share: