• 044-26428162
  • dbdeepagam@gmail.com
Logo

Sermons

இன்றைய இறைமொழி. செவ்வாய், 4 ஜூன் 2024. மௌனப் புரட்சி

Tuesday, June 4, 2024   Fr. Yesu Karunanidhi   Archdiocese of Madurai

Daily Catholic Lectio இன்றைய இறைமொழி Ordinary Time

இன்றைய இறைமொழி
செவ்வாய், 4 ஜூன் 2024
பொதுக்காலம் 9-ஆம் வாரம் – செவ்வாய்
2 பேதுரு 2:12-15, 17-18. மாற்கு 12:13-17

 

மௌனப் புரட்சி

 

‘இயேசுவை அவருடைய வார்த்தைகளில் சிக்கவைக்கப் பார்த்தார்கள் அவருடைய எதிரிகள். வார்த்தையான கடவுள் அவர் என்பதை அவர்கள் மறந்துவிட்டார்கள்.’

 

இயேசுவை தங்களுடைய காலணிகளுக்குள் சிக்கிய கல்லாக, கண்களில் வீசிய புகையாகப் பார்த்தார்கள் அவருடைய சமகாலத்து அரசியல் மற்றும் ஆன்மிகத் தலைவர்கள். அவரைத் தங்களோடு வைத்துக்கொள்வதில் மிகவும் இடறல்பட்டார்கள். அவரைத் தூக்கி எறிய முடிவு செய்கிறார்கள். அவருடைய சமகாலத்து அரசியல் மற்றும் சமயக் குழுக்கள் அவருடைய பேச்சில் அவரைச் சிக்கவைக் முயற்சி செய்கிறார்கள். வார்த்தையான கடவுளை வார்த்தைகளில் சிக்கவைக்க முடியாது என்பதை விரைவில் உணர்ந்துகொள்கிறார்கள்.

 

இன்றைய நற்செய்தி வாசகத்தில், பரிசேயர்கள் என்னும் சமயக் குழுவினரும், ஏரோதியர்கள் என்னும் அரசியல் குழுவினரும் இயேசுவிடம் ஒரு கேள்வியோடு வருகிறார்கள்: ‘சீசருக்கு வரி செலுத்துவது முறையா இல்லையா?’ பரிசேயர்கள் கோவில் வரி செலுத்துவதிலும், பத்தில் ஒன்று செலுத்துவதிலும் மிகவும் கவனமாக இருந்தார்கள். ஏரோதியர்கள் ஒரே நேரத்தில் ஏரோதுவுக்கும் சீசருக்கும் பிரமாணிக்கமாக இருக்க முயற்சி செய்தார்கள். இயேசுவை இக்கேள்வி வழியாக ஓர் இக்கட்டான சூழலுக்குத் தள்ளுகிறார்கள். ‘சீசருக்கு வரி செலுத்த வேண்டாம்’ என்று அவர் சொன்னால், சீசருக்கு எதிராக மக்களைத் திருப்புகிறார் என்று அரசியல் பழி சுமத்துவார்கள். ‘வரி செலுத்துங்கள்’ என்று அவர் சொன்னால், அவர் ரபி அல்ல என்று கற்பிக்கத் தொடங்குவார்கள்.

 

இயேசு ஒவ்வோர் அடியாக நகர்ந்து சென்று பதிலுரைக்கிறார்.

 

முதலில், அவர்களிடத்தில் உள்ள தெனாரியம் ஒன்றைக் கேட்கிறார். அதில் சீசருடைய உருவம் பொறிக்கப்பட்டுள்ளது. மோசேயின் சட்டப்படி இஸ்ரயேல் மக்கள் யாருடைய உருவத்தையும் எதிலும் பொறிக்கக் கூடாது. எந்த உருவத்தையும் கடவுள்போலக் கொண்டாடக் கூடாது. மேலும், இஸ்ரயேல் மக்களின் நாணயம் செக்கேல். நிகழ்வில் நாம் காணும் பரிசேயர்களும் ஏரோதியர்களும் சீசருடைய உருவத்தைத் தாங்கிக்கொண்டிருப்பதோடு, தெனாரியத்தை (உரோமை நாணயம்) வைத்துக்கொண்டிருக்கிறார்கள்.

 

இரண்டாவதாக, ‘சீசருக்கு உரியதை சீசருக்கும், கடவுளுக்கு உரியதை கடவுளுக்கும் கொடுங்கள்!’ எனக் கட்டளையிடுகிறார் இயேசு. அவர்களுடைய கேள்வியில் ‘கடவுள்’ என்னும் சொல் இல்லை. வழக்கமாக, இங்கே இயேசு நம் சமூக மற்றும் ஆன்மிகக் கடமைகளை நமக்கு நினைவுறுத்துகிறார் எனப் புரிந்துகொள்கிறோம்.

 

நான் இதைச் சற்று வித்தியாசமாகக் காண்கிறேன். இவ்வார்த்தைகளைப் பயன்படுத்தி இயேசு ஓர் அரசியல்-ஆன்மிக மௌனப்புரட்சியைத் தொடங்குகிறார். அதற்கான நெருப்பைப் பற்ற வைக்கிறார்.

 

எப்படி?

 

‘சீசருக்கு உரியதை சீசருக்குக் கொடுங்கள்’ – அதாவது, சீசருக்கு உரியது உரோமை. அவருக்கு உரியதைக் கொடுத்து அவரை அங்கே அனுப்பிவிடுங்கள். அவருக்கு இங்கே என்ன வேலை? அவருக்கு உரியதை அவருக்குக் கொடுத்த பின்னர், நீங்கள் உங்களையே முழுவதுமாகக் கடவுளுக்குக் கொடுங்கள். ஏனெனில், நீங்கள் கடவுளுக்கு உரியவர்கள்.

 

இவ்வாறாக, இயேசு தம் சமகாலத்து மக்களை அடுத்த நிலைக்கு உயர்த்துகிறார். சீசரின் குடிமக்களாக இருப்பது போதும் என்று எண்ணியவர்களை, கடவுளின் பிள்ளைகள் என்னும் நிலைக்கு உயர்த்துகிறார். ஒரு நாட்டின் மக்களாக இருப்பதில் அல்ல, மாறாக, கடவுளின் புதல்வர்கள் புதல்வியர்கள் என்னும் நிலையிலேயே நாம் மகிழ்ச்சிகொள்ள வேண்டும்.

 

இவ்வுலகமும் மறுவுலகமும் ஒன்றையொன்று நிரப்புகிறது என்று இயேசு சொல்லவில்லை. மாறாக, ஒன்று மற்றொன்றுக்கு முரணாக இருக்கிறது என்று காட்டி, கடவுளைப் பற்றிக்கொள்ள அழைக்கிறார்.

 

கடவுளைப் பற்றிக்கொள்ள வேண்டுமெனில் நம் வெளிவேடம் அகற்ற வேண்டும்.

 

இயேசுவின் பதிலைக் கேட்டு அவரைச் சோதித்தவர்கள் வியப்படைகிறார்கள். அவரில் ஒரு மௌனப் புரட்சியாளரை அடையாளம் காண்கிறார்கள்.

 

நம்மை நாமே கேட்டுக்கொள்வோம்: என் சிந்தனையை நான் கடவுள்மேல் பதிக்கிறேனா? அல்லது இவ்வுலகமும் வேண்டும் அவ்வுலகமும் வேண்டும் என்னும் இழுபறியில் இருக்கிறேனா?

 

கடவுளை மட்டுமே பற்றிக்கொள்ள நம்மை அழைக்கிறார் மௌனப் புரட்சியாளர் இயேசு.

 

நிற்க.

 

துன்புறும் தன் திருஅவைக்கு ஆறுதல் தருகிற பேதுரு, எதிர்நோக்கின் மக்களாக வாழ அவர்களை அழைக்கிறார் (முதல்வாசகம்): ‘புதிய விண்ணுலகும் புதிய மண்ணுலகமும் வரும் என நாம் எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறோம்.’ புதிய விண்ணுலகமே புதிய மண்ணுலகம்! (யூபிலி கி.பி. 2025, துணுக்கு 115).

 


 

Share: