• 044-26428162
  • dbdeepagam@gmail.com
Logo

Sermons

இன்றைய இறைமொழி. ஞாயிறு, 9 ஜூன் 2024. வீட்டுக்குள் நுழைதல்!

Sunday, June 9, 2024   Fr. Yesu Karunanidhi   Archdiocese of Madurai

Daily Catholic Lectio இன்றைய இறைமொழி Ordinary Time

இன்றைய இறைமொழி
ஞாயிறு, 9 ஜூன் 2024
ஆண்டின் பொதுக்காலம் 10-ஆம் ஞாயிறு
தொடக்க நூல் 3:9-15. 2 கொரிந்தியர் 4:13-5:1. மாற்கு 3:20-35

 

வீட்டுக்குள் நுழைதல்!

 

‘இயேசுவின் இல்லத்திற்குள் நாம் நுழைய வேண்டுமெனில் கடவுளின் திருவுளத்தை நிறைவேற்ற வேண்டும்!’

 

அது ஒரு மனவளர்ச்சி குன்றியோர் பள்ளி. மாணவர்கள், மாணவியர் என ஏறக்குறைய 63 பேர் அங்கே தங்கியிருந்தார்கள். வௌ;வேறு நாட்டைச் சார்ந்த அவர்களைச் சேகரித்த ஒரு நிறுவனம் அவர்களைப் பாதுகாத்து வந்தது. அங்கிருந்த ஒரு மாணவனின் பெயர் மோங்-லி-லா. அவனுடைய சொந்த நாடு மியான்மர். அவர்களுடைய நாட்டில் இராணுவ ஆட்சி வந்தபோது அவர்களுடைய பெற்றோர்கள் இல்லத்தை விட்டு ஓடுகிறார்கள். சிறுவனாக இருந்த அவன் மனவளர்ச்சி குன்றியிருந்த காரணத்தால் அவனை இல்லத்திலேயே விட்டுச் செல்கிறார்கள். அப்படி விடப்பட்ட சிறுவன் தொண்டுநிறுவனம் ஒன்றில் ஒப்படைக்கப்படுகிறான். தொண்டுநிறுவனம் அவனை தாய்லாந்துக்கு அனுப்புகிறது. பின்நாளில் தன் மகன் தாய்லாந்தில் பத்திரமாக இருப்பதைக் கேள்விப்பட் மோங்-லி-லாவின் பெற்றோர்கள் அவனைக் கண்டு, தங்கள் இல்லம் அழைத்துச் செல்ல விரும்பி வருகிறார்கள். அன்று காலை முதல் தான் வித்தியாசமாக நடத்தப்படுவதையும், தனக்கு புதிய உடைகள் வழங்கப்படுவதையும், தன் பெட்டி தயார்செய்யப்படுவதையும் பார்த்த மோங்-லி-லா ஒன்றும் புரியாமல் நிற்கிறான். சற்று நேரத்தில் அவனுடைய பெற்றோர் வருகிறார்கள். ‘இவர் உன் அம்மா! இவர் உன் அப்பா!’ என்று அவனுக்குச் சொல்லப்படுகிறது. அவன் வந்து தங்களை அள்ளிக்கொள்வான் என்று அவனுடைய பெற்றோர்கள் காத்திருக்க, அவனோ அவர்களைவிட்டுத் தள்ளிச் சென்று ஒளிந்துகொள்கிறான். தொண்டுநிறுவனத்தை மேற்பார்வை செய்யும் அருள்பணியாளரை ஆரத்தழுவிக்கொண்டு, ‘இவரே என் அம்மா! இவரே என் அப்பா!’ என்கிறான். அவர்களுடைய வீட்டுக்குள் நுழைவதற்காகத் அவனை அழைத்துச் செல்ல வந்த தன் பெற்றோரை, தன் வீ;ட்டுக்குள் வருமாறு அழைக்கிறான் மோங்-லி-லா!

 

நிற்க.

 

மாற்கு நற்செய்தியாளர் சிறந்த கதைசொல்லி மட்டுமல்ல, நடந்ததை அப்படியே பதிவு செய்வதிலும் சிறந்தவர். இன்றைய நற்செய்தி வாசகத்தில் ‘நெருடல் பகுதி’ (’embarrassment text’) ஒன்றை வாசிக்கிறோம். அதாவது, வாசகர் அப்பகுதியை வாசிக்கும்போது உள்ளத்தில் நெருடலை உணர்கிற பகுதி இது. ஏன் இது நெருடல் தருகிறது? இயேசுவை அவருடைய சொந்த ஊரார், ‘இவர் மதிமயங்கி இருக்கிறார்!’ (கிரேக்கத்தில், ‘இவருடைய மூளை இவரிடம் இல்லை!’ அல்லது ‘இவர் தனக்கு வெளியே இருக்கிறார்!’ அல்லது ‘இவர் மனநலம் குன்றியவராக இருக்கிறார்!) என்று முத்திரை பதிக்கிறார்கள். தங்களுடைய ஆண்டவரும் போதகருமான ஒருவரைப் பற்றி மற்றவர்கள் இவ்வாறு குறிப்பிடுவதைக் கண்ட மாற்குவின் குழுமத்தார் நெருடலாக இதை உணர்ந்திருப்பார்கள்.

 

‘இயேசு அவருக்கு வெளியே இருக்கிறார்’ என்று ஊரார் சொல்லக் கேட்டு, வெளியே இருந்த அவரைத் தங்களுக்குள்ளே அழைத்துக்கொள்ள விரும்பி அவரிடம் வருகிறார்கள் இயேசுவின் உறவினர். உறவினர்களின் பெயர்கள் கொடுக்கப்படவில்லை. ஆனால், நிகழ்வின் இறுதியில் ‘அவருடைய தாயும் சகோதரர்களும்’ என மாற்கு குறிப்பிடுகிறார்.

 

அவர்களுடைய இல்லத்திற்குள் தம்மை அழைத்துச் செல்ல வந்திருந்தவர்களைத் தம் இல்லத்திற்குள் வருமாறு அழைக்கிறார் இயேசு. இனி இரத்த உறவு அல்ல, மாறாக, கடவுளின் திருவுளம் நிறைவேற்றும் இறையாட்சி உறவே தமக்கு நெருக்கம் எனச் சொல்லி, வீட்டுக்கு வெளியே நின்றவர்களை வீட்டுக்கு உள்ளே அழைக்கிறார் இயேசு.

 

இயேசு அவருக்கு வெளியே நின்றுகொண்டிருக்கிறார் எனக் கேள்விப்பட்டு, அவரை ‘வீட்டுக்கு உள்ளே, உறவு வட்டத்துக்குள்ளே’ அழைத்துக்கொள்ள விரும்பியவர்கள், இயேசுவின் வட்டத்துக்குள், வீட்டுக்குள் அழைத்துக்கொள்ளப்படுகிறார்கள். இரத்த உறவு என்ற வட்டம் மறைந்து, இறைத்திருவுளம் உறவு என்னும் புதிய வட்டம் பிறக்கிறது.

 

இயேசுவின் உறவினர்கள் அவரைத் தவறாகப் புரிந்துகொள்கிறார்கள் எனில், இயேசுவின் எதிரிகள், இதே புரிதலை முன்வைத்து இயேசுவைப் பழித்துரைக்கிறார்கள்.

 

‘இவனைப் பெயல்செபூல் பிடித்திருக்கிறது. பேய்களின் தலைவனைக் கொண்டே இவன் பேய்களை ஓட்டுகிறான்’ எனக் குற்றம் சுமத்துகிறார்கள். இவ்வாறாக, இயேசுவைப் பேய்பிடித்தவன் (‘மதிமயங்கியவன்’) என்று அழைத்ததோடல்லாமல், அவருடைய வல்ல செயல்களையும் புறக்கணிக்கிறார்கள்.

 

உவமைகள் வழியாக அவர்களுக்கு விளக்கம் தருகிறார் இயேசு. ‘தனக்கு எதிராகத் தானே பிளவுபடும் எந்த அரசும் (வீடும்) நிலைத்துநிற்க முடியாது … வலியவரைக் கட்டினாலன்றி அவ்வலியவருடைய வீட்டைக் கொள்ளையிட முடியாது.’

 

சாத்தான் சாத்தானுக்கு எதிராக உடைந்த நிகழ்வை இன்றைய முதல் வாசகத்தில் காண்கிறோம். ஆண்டவராகிய கடவுள் நம் முதற்பெற்றோரை ஏதேன் தோட்டத்துக்குள் குடிவைக்கிறார். பாம்பின் சூழ்ச்சியால் பெண்ணும் ஆணும் விலக்கப்பட்ட கனியை உண்கிறார்கள். ‘நீ எங்கே இருக்கிறாய்?’ என்று மனிதனைத் தேடி வருகிறார் கடவுள். பாம்பைச் சபிக்கிற கடவுள், ‘உனக்கும் பெண்ணுக்கும் உன் வித்துக்கும் அவள் வித்துக்கும் பகையை உண்டாக்குவேன்!’ என்கிறார். அன்றே, சாத்தானின் இல்லம் உடைகிறது. ‘புதிய ஏவாளின்’ (மரியா) வித்தாக வருகிற இயேசு சாத்தானின் தலையைக் காயப்படுத்துகிறார். சாத்தானோ அவருடைய குதிங்காலைக் காயப்படுத்த – அவர்மேல் குற்றம் சுமத்த முற்படுகிறது. இவ்வாறாக, ஏற்கெனவே பிளவுபட்ட சாத்தானின் அரசு இனிமேல் நிலைக்க முடியாது என்றும், சாத்தான் என்னும் வலியவரைக் கட்டக்கூடிய ஆற்றல் தனக்கே உண்டு என்றும் மொழிகிறார் இயேசு.

 

சாத்தானின் வீடு உடைகிறது. அவனுடைய அரசு வீழ்கிறது. அவனுடைய இல்லம் கொள்ளை போகிறது. ஆக, இயேசு சாத்தானுக்கு எதிரானவராகவும், சாத்தானைவிட வலிமையானவராகவும் இருக்கிறார். மறைநூல் அறிஞரின் குற்றச்சாட்டு பொய்யாகிறது. இயேசுவின் வீடு வலிமை வாய்ந்ததாக இருக்கிறது. அதை உடைக்க யாராலும் இயலாது.

 

இயேசுவின் வலிமைமிகுந்த வீட்டுக்குள் நாம் நுழைவதற்கான எளிய வழி கடவுளின் திருவுளத்தை நிறைவேற்றுவது.

 

இன்றைய இரண்டாம் வாசகத்தில், கொரிந்தியருக்கு எழுதுகிற பவுல் (தன்நிலை விளக்க மடல்), ‘நாம் இவ்வுலகில் குடியிருக்கும் உடலாகிய கூடாரம் அழிந்துபோனாலும் கடவுளிடமிருந்து கிடைக்கும் வீடு ஒன்று விண்ணுலகில் நமக்கு உண்டு’ என்கிறார். இவ்வுலகில் நாம் வசிக்கும் வீட்டையும் நம் உடலையும் கூடாரம் (தற்காலிகமானது) என அழைக்கிற பவுல், நிலையான வீட்டுக்கான எதிர்நோக்கை முன்மொழிகிறார். ஆக, பவுலைப் பொருத்தவரையில் ‘வீடு’ என்பது மறுவுலகம் சார்ந்தது, இறப்புக்குப் பின்னர் நாம் சென்றடைவது.

 

பதிலுரைப்பாடல் ஆசிரியர் (திபா 130), ஆண்டவருக்காக, ஆண்டவரின் இல்லம் திரும்புவதற்காகக் காத்திருக்கிறார்: ‘ஆண்டவருக்காக ஆவலுடன் நான் காத்திருக்கின்றேன். என் நெஞ்சம் காத்திருக்கின்றது. அவரது சொற்களுக்காக ஆவலுடன் காத்திருக்கிறேன். விடியலுக்காய் காத்திருக்கும் காவலரைவிட, என் நெஞ்சம் என் தலைவருக்காய் ஆவலுடன் காத்திருக்கிறது.’

 

இயேசு அவரைவிட்டு வெளியே நிற்கிறார் எனக் கேள்விப்படுகிற அவருடைய உறவினர்கள் அவரைத் தங்களுக்குள்ளே அழைத்துக்கொள்ள விரும்புகிறார்கள். தாம் அல்ல, மாறாக, அவர்களே அவருக்கு வெளியே நிற்கிறார்கள் எனச் சுட்டிக்காட்டுகிறார் இயேசு.

 

நாம் நம்மைவிட்டு வெளியே நிற்கிற பொழுதுகள் எவை? நம்மையே ஏற்றுக்கொள்ளாதபோது, தாழ்வு மனப்பான்மை, குற்றவுணர்வு கொள்ளும்போது! பாவச் செயல்கள் பழக்கங்களாக மாற நாம் அவற்றையும் அவை நம்மையும் பற்றிக்கொள்ளும்போது! கடவுளின் திருவுளம் நிறைவேற்றுவதற்குப் பதிலாக, நம் முதற்பெற்றோர்போல அவருக்குக் கீழ்ப்படிய மறுக்கும்போது! இயேசுவைப் பழித்துரைக்கும்போது! தூய ஆவியாரைப் பழித்துரைக்கும்போது!

 

இப்படி நாம் வெளியே நிற்கிற பொழுதுகளில் நாம் வெளியே நிற்பதை உணராமல், ‘கடவுளுக்கு மதிமயங்கியது’ என்ற நிலையில் அவரோடு கண்டும் காணாமல் உறவுகொள்கிறோம்.

 

நம்மைவிட்டு வெளியே நிற்கிற நம்மைத் தேடி வருகிற இயேசு, நம் வீட்டை வெற்றிகொண்டு அவருடைய வீடாக அதை மாற்றிக்கொள்கிறார். அங்கே நாம் அவருடைய தாயும் சகோதரர்களுமாக மாறுகிறோம்.

 

இயேசுவோடு இணைந்து நாம் அமைக்கும் இல்லம் அழியாததாக, நீடித்து நிலைக்கிற இன்பமாகத் தொடர்கிறது.

 

இயேசுவின் வீட்டுக்குள் நுழைதலே நம் வாழ்வின் இலக்கு!

 

(மனவளர்ச்சி குன்றியவர்களை, மனவளர்ச்சி குன்றியவர் என முத்திரையிடப்படுபவர்களை இன்றைய நாளில் சிறப்பாக நினைவில்கொண்டு அவர்களுக்காக இறைவேண்டல் செய்வோம். அவர்களுடைய பெற்றோர்கள், உடன்பிறந்தோர்கள், உறவினர்கள், அவர்களைப் பராமரிக்கிற நன்மக்கள் அனைவரும் துணிவையும் பொறுமையையும் பெற்றுக்கொள்ள அவர்களுக்காகவும் வேண்டுவோம்.)

 

அருள்திரு யேசு கருணாநிதி
மதுரை உயர்மறைமாவட்டம்
இரக்கத்தின் தூதுவர்

 


 

Share: