• 044-26428162
  • dbdeepagam@gmail.com
Logo

Sermons

இன்றைய இறைமொழி. செவ்வாய், 11 ஜூன் 2024. உப்பும் ஒளியும்

Tuesday, June 11, 2024   Fr. Yesu Karunanidhi   Archdiocese of Madurai

Daily Catholic Lectio இன்றைய இறைமொழி Ordinary Time

இன்றைய இறைமொழி
செவ்வாய், 11 ஜூன் 2024
பொதுக்காலம் 10-ஆம் வாரம் – செவ்வாய்
திருத்தூதர் புனித பர்னபா – நினைவு
திருத்தூதர் பணிகள் 11:21-26. 13:1-3. மத்தேயு 5:13-16

 

உப்பும் ஒளியும்

 

மலைப்பொழிவில் இயேசு மொழிந்த எட்டு பேறுபெற்ற நிலைகளுக்கும், அவர் வழங்குகின்ற கட்டளைகளுக்கும் இடையே நிற்கிறது இன்றைய நற்செய்தி வாசகப்பகுதி. ‘நீங்கள் இப்படி இருக்க வேண்டும்’ என மொழிவதற்குப் பதிலாக, ‘நீங்கள் இப்படி இருக்கிறீர்கள்’ எனத் தம் சீடர்களின் தான்மையை அவர்களுக்கு எடுத்துரைக்கிறார் இயேசு. இத்தான்மையே அவர்களுடைய அனைத்துச் செயல்களுக்கும் அடிப்படையாக அமைதல் வேண்டும். மேலும், சீடர்களின் செயல்கள் அல்ல மாறாக, அவர்களுடைய இத்தான்மையே அவர்களுடைய இருத்தலையும் இயக்கத்தையும் நிர்ணயிக்கிறது. தம் சீடர்கள் உப்பாகவும், ஒளியாகவும் இருக்கிறார்கள் எனச் சொல்கிறார் இயேசு. முதல் ஏற்பாட்டில் இஸ்ரயேல் இனம், திருச்சட்டம், எருசலேம், ஆலயம் போன்றவை ஒளியாகக் கருதப்பட்டன. ஆனால், இயேசு இதுமுதல் தம் சீடர்களே ஒளி என அழைப்பதன் வழியாக, ஒரு மாற்றுச் சமூகத்தை முன்மொழிவதுடன், இந்த அடையாளம் தருகின்ற பொறுப்புணர்வையும் அவர்களுக்குச் சுட்டிக்காட்டுகிறார்.

 

(அ) ‘நீங்கள் மண்ணுலகுக்கு உப்பாய் இருக்கிறீர்கள்’

 

உணவுக்குச் சுவையூட்ட, உணவைப் பதப்படுத்த, பலிப்பொருளோடு கலக்க என பல நிலைகளில் உப்பு பயன்படுகிறது. உப்பு தான் தழுவுகிற பொருளோடு கலந்து தன்னைப் பிறரின் கண்களுக்கு மறைத்துக்கொள்கிறது. ஆனால், மற்றவர்கள் உப்பைச் சுவைத்துப் பார்க்க முடியும். உப்பின் தன்மை அதன் உவர்ப்புத் தன்மையில்தான் இருக்கிறது. அத்தன்மையை அது இழந்தாலோ, அல்லது அதிலிருந்து அது பிறழ்வுபட்டாலோ அது தேவையற்ற பொருளாக மாறிவிடும். தட்பவெப்பநிலை, காலம், பொதிந்துவைக்கப்பட்ட இடம் போன்றவை உப்பின் தன்மையின்மேல் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. சீடருடைய வாழ்விலும் புறக்காரணிகள் பல செயல்பட்டு அவர்களுடைய தன்மையைச் சீர்குலைக்க முயற்சி செய்யும். அந்த நிலையிலும் சீடர்கள் தங்கள் தன்மையை நிலைகுலையாமல் வைத்துக்கொள்ள வேண்டும். தாங்கள் செய்கிற அனைத்தோடும் கலந்து அதற்குச் சுவை ஊட்ட வேண்டும்.

 

(ஆ) ‘நீங்கள் உலகிற்கு ஒளியாய் இருக்கிறீர்கள்’

 

‘ஒளி’ என்னும் உருவகத்தோடு ‘மலைமேல் உள்ள நகர்,’ ‘விளக்கு’ என்னும் உருவகங்களும் இப்பகுதியில் இணைந்து மொழியப்படுகின்றன. உலகின் ஒளியாக வந்த இயேசு இப்போது தம் சீடர்களையும் ஒளி என அழைக்கிறார். உப்பு நாக்குடன் தொடர்புடையது. ஒளி கண்களுடன் தொடர்புடையது. ஒளி இருக்கும் வரைதான் வாழ்வு இருக்கிறது என்பது பண்டைக்கால நம்பிக்கை. மனித வாழ்க்கையும் மின்சாரம் கண்டுபிடிக்கப்பட்டவுடன் பெரிய மாற்றம் அடைந்துவிட்டது. ஒளி ஓர் உயிரின் இருத்தலை உறுதிசெய்வதுடன், இயக்கத்திற்கும் காரணமாக இருக்கிறது. உப்பு மற்றும் ஒளி ஆகியவற்றின் இருத்தல் அவற்றின் பயன்பாட்டுத்தன்மையில்தான் இருக்கிறது. உப்பு கரைவது போல ஒளி கரைவதில்லை. ஆனால், ஒளி மற்றவர்களுக்குப் பயன்படாமல் தடுக்கப்படலாம். தடைகளைத் தாண்டி ஒளிர்கிறார்கள் சீடர்கள்.

 

இரண்டாம் உருவகத்தின் இறுதியில், ‘உங்கள் ஒளி மனிதர்முன் ஒளிர்க’ என்னும் கட்டளை கொடுக்கிற இயேசு, அப்படி ஒளிர்வதன் வழியாகச் சீடர்கள் அல்ல, மாறாக, ‘விண்ணகத் தந்தையை மக்கள் போற்றிப் புகழ்வார்கள்’ என்கிறார். ‘உங்கள் விண்ணகத் தந்தை’ என்னும் சொல்லாடல் மத்தேயு நற்செய்தியில் மிக முக்கியமான ஒன்று. இங்கேதான் அது முதன்முதலாகப் பயன்படுத்தப்படுகிறது. சீடர்கள் வானகத் தந்தையின் பிள்ளைகளாக இருக்கிறார்கள் என்னும் புதிய தான்மையும் இங்கு புலப்படுகிறது.

 

உப்பு தன் உப்புத்தன்மையை இழந்தால் தனக்குத்தானே முரண்படுகிறது. ஏனெனில், அது பார்ப்பதற்கு உப்பு போல இருந்தாலும், உப்புத்தன்மை அதில் இல்லை.

 

தடுக்கப்படும் ஒளி இருளை உண்டாக்குவதான் அது தனக்குத்தானே முரண்படுகிறது. ஏனெனில், ஒளியாக இருந்தாலும் அதன் மறைவான இருத்தல் இருளையே உண்டாக்குகிறது.

 

சீடர்களுடைய சொற்களும் செயல்கள் முரண்கள் தவிர்த்ததாக இருத்தல் வேண்டும்.

 

இன்றைய பதிலுரைப் பாடலில் (திபா 119), ‘உம் ஊழியன்மீது உமது முக ஒளி வீசச் செய்யும்’ எனப் பாடுகிறார் ஆசிரியர். ஆண்டவரின் முக ஒளி நம்மேல் வீசுவதால் நாம் ஒளிர்கிறோம். அவர் நம்மை அழைத்ததால் உப்பாக இருக்கிறோம்.

 

இன்று நம் தாய்த்திருஅவை புனித பர்னபாவை நினைவுகூர்கிறது.

 

திருத்தூதர் பணிகள் நூலின் முதன்மைக் கதைமாந்தர்களில் ஒருவராக, பவுலின் நுகத்தடித் தோழராக விளங்கும் இவரை லூக்கா இப்படி அறிமுகம் செய்கின்றார்: ‘சைப்பிரசு தீவைச் சேர்ந்த யோசேப்பு என்னும் லேவியர் ஒருவர் இருந்தார். இவருக்குத் திருத்தூதர்கள், ‘ஊக்குவிக்கும் பண்பு கொண்டவர்’ என்று பொருள்படும் பர்னபா என்னும் பெயரைக் கொடுத்திருந்தனர். அவர் தமது நிலத்தை விற்று அந்தப் பணத்தைக் கொண்டு வந்து திருத்தூதர்களின் காலடியில் வைத்தார்.’ (காண். திப 4:36-37)

 

திருத்தூதர் பவுல் பர்னபா வழியாக அழைக்கப்படுகின்றார் (முதல் வாசகம்). அதாவது, சவுல் என்னும் பவுலின் பணி முதலில் மற்றவர்களால் ஏற்றுக்கொள்ளப்படவில்லை. ஆக, பவுல் சோர்ந்து போய் தன் சொந்த ஊருக்குச் சென்று மறைந்த வாழ்க்கை வாழ்கின்றார். பர்னபா அவரைத் தேடிச் செல்கின்றார். கடவுளின் பதிலாளி போல இங்கே செயல்படுகின்றார் பர்னபா. ஆனால், பவுல் அடுத்தடுத்து தொடக்கத் திருஅவையில் புறவினத்தாரின் திருத்தூதராக முதன்மை பெறுகின்றார். பர்னபா அவரை மேலே ஏற்றிவிட்ட ஏணி போல நின்றுகொள்கின்றார். இது அவருடைய பெருந்தன்மையைக் காட்டுகிறது. பவுலும் பர்னபாவும் இணைந்து செல்லும் இரண்டாவது தூதுரைப் பயணத்தில் அவர்கள் இருவருக்குமிடையே கருத்து வேறுபாடு வருகிறது (காண். திப 15:36-38). பர்னபா தன்னுடன் மாற்கை அழைத்துச் செல்ல விரும்புகின்றார். பர்னபா தன்னோடு மாற்கையும், பவுல் தன்னோடு சீலாவையும் அழைத்துச் செல்கின்றனர். ஆக, தவறுகளையும், மனித வலுவின்மைகளையும் பரந்த மனத்தோடு, தாராள உள்ளத்தோடு பொருத்துக்கொள்கின்றார் பர்னபா.

 

நிற்க.

 

பர்னபா போல ஊக்குவிக்கும் பண்பு கொண்டவராக இருந்து, சோர்ந்துபோன ஒருவருக்கு நம் சொல் அல்லது செயலால் ஊக்கம் தருதல் நலம். (யூபிலி கி.பி. 2025, துணுக்கு 121).

 

அருள்திரு யேசு கருணாநிதி
மதுரை உயர்மறைமாவட்டம்
இரக்கத்தின் தூதுவர்

 


 

Share: