• 044-26428162
  • dbdeepagam@gmail.com
Logo

Sermons

இன்றைய இறைமொழி. ஞாயிறு, 16 ஜூன் 2024. நம்பிக்கையின் அடிப்படையிலேயே!

Sunday, June 16, 2024   Fr. Yesu Karunanidhi   Archdiocese of Madurai

Daily Catholic Lectio இன்றைய இறைமொழி Ordinary Time

இன்றைய இறைமொழி
ஞாயிறு, 16 ஜூன் 2024
ஆண்டின் பொதுக்காலம் 11-ஆம் ஞாயிறு
எசேக்கியேல் 17:22-24. 2 கொரிந்தியர் 5:6-10. மாற்கு 4:26-34

 

நம்பிக்கையின் அடிப்படையிலேயே!

 

கிராமம் ஒன்று பஞ்சத்தில் வாடியது. பருவமழை பொய்த்துப் போய், ஏரிகள், குளங்கள் வறண்டன. நிலத்தடி நீரும் நாளுக்கு நாள் கீழே சென்றது. விதைக்கும் காலம் நெருங்கி வரவே ஊரார் ஒன்றுகூடி அடுத்து செய்ய வேண்டியவை குறித்துப் பேசினர்.

 

‘இனி இந்த ஊரில் இருக்க முடியாது! நாம் வேறு ஊர் நோக்கிப் புலம்பெயர்ந்தால்தான் உயிர்பிழைக்க முடியும்’ என்றார் ஒருவர்.

 

‘நம் நிலம், வீடு அனைத்தையும் விட்டுவிட்டு எங்கே செல்வது? இங்கேயே இருந்தால்தான் அவற்றைப் பாதுகாக்க முடியும்’ என்றார் இன்னொருவர்.

 

கூட்டத்தின் ஓரத்தில் நின்ற வயதான லட்சுமி பாட்டி, ‘இப்போது நாம் இருக்கும் நிலை வருத்தத்துக்குரியதே! ஆனால், சோர்ந்துவிட வேண்டாம். நம்மிடம் இருக்கும் சேமிப்புகளை மாற்றி விதைகள் வாங்குவோம். வழக்கம்போல விதைப்போம். நிலத்தடி நீரைப் பகிர்ந்து கொள்வோம். பருவமழை இந்த ஆண்டு பொய்க்காது. ஏனெனில், நாம் காண்பவற்றின் அடிப்படையில் அல்ல, மாறாக, நம்பிக்கையின் அடிப்படையிலேயே வாழ்கிறோம்!’ என்றார்.

 

அவருடைய சொற்கள் ஊராருக்கும் நம்பிக்கை கொடுத்தன. விதைகள் விதைக்கப்பட்ட சில நாள்களுக்குள் பருவமழை வந்தது. விதைகள் வேகமாக வளரத் தொடங்கின. பஞ்சம் மறைந்தது. வளமை பிறந்தது.

 

நிற்க.

 

‘நாம் காண்பவற்றின் அடிப்படையில் அல்ல. மாறாக, நம்பிக்கையின் அடிப்படையிலேயே வாழ்கிறோம்!’ என உரைக்கிறார் பவுல் (இரண்டாம் வாசகம்).

 

கொரிந்து நகருக்குப் பவுல் வரையும் கடிதம் ‘கண்ணீர் மடல்’ என அழைக்கப்படுகிறது. ஏனெனில், கொரிந்து நகர மக்கள் பவுல் அறிவித்த நற்செய்தியை விடுத்து இன்னொரு நற்செய்தியைப் பற்றிக்கொள்கிறார்கள். பவுலின் நம்பகத்தன்மையைக் கேள்விக்கு உட்படுத்தி, அவருடைய திருத்தூது பணி பற்றி இடறல்படுகிறார்கள். தன் பணி குறித்து அவர்களுக்கு எழுதுகிற பவுல், தான் காண்கிற, கேட்கிற, உணர்கிற எதிர்ப்புகளின் அடிப்படையில் அல்ல, மாறாக, தன் வாழ்க்கை இவற்றைத் தாண்டியது என முன்மொழிகிறார். மேலும், நம் வாழ்வு இவ்வுலகில் முடிந்துவிடக்கூடியது அல்ல, மாறாக, முடிவுறாதது. அந்தப் புதிய வாழ்க்கை நம் புலன்களுக்கு அப்பாற்பட்டது என மொழிகிறார்.

 

நற்செய்தி வாசகத்தில், ‘இறையாட்சி’ என்னும் மறைபொருளை தம் சீடர்களின் கேட்டறியும் திறனுக்கு ஏற்ப உருவகங்களாக (சொல்லோவியங்களாக) வழங்குகிறார் இயேசு. ‘தானாக வளரும் விதை’, ‘கடுகு விதை’ என்னும் இரு உருவகங்களை இங்கே காண்கிறோம். இவற்றை இணைத்துப் பார்க்கும்போது நான்கு விடயங்கள் தெளிவாகின்றன:

 

(அ) விதை தன்னகத்தே ஆற்றல் கொண்டதாக இருக்கிறது. அந்த ஆற்றல் கண்ணுக்குப் புலப்படாதது.

 

(ஆ) விதையின் வளர்ச்சியை நிறுத்தவோ, தடுக்கவோ, தள்ளிப்போடவோ இயலாது (புளிப்புமாவு செயல்பாடும் இத்தகையதே). வெளிப்புறக் காரணிகள் அவற்றைத் தடுத்த நிறுத்தாலும் அது தொடர்ந்து வளர்ந்துகொண்டே இருக்கும்.

 

(இ) சிறிய அளவில் இருக்கிற ஒன்று பெரிய அளவு மாற்றத்தைத் தரும்.

 

(ஈ) விதையை யாரும் கவனிக்கவில்லை என்றாலும், அது தன் முழு இயல்பை அடையும் வரை தொடர்ந்து வளர்ந்துகொண்டே இருக்கும்.

 

இந்த நான்கு விடயங்களின் பின்புலத்தில், இறையாட்சியின் பண்புகளைப் புரிந்துகொள்வோம்.

 

(அ) இறையாட்சி தன்னகத்தே ஆற்றல் கொண்டதாக இருக்கிறது. அந்த ஆற்றல் நமக்குப் புலப்படாமல் இருக்கிறது.

 

(ஆ) இறையாட்சியின் வளர்ச்சியை யாரும் நிறுத்தவோ, தடுக்கவோ, தள்ளிப்போடவோ இயலாது. வெளிப்புறத்திலிருந்து இறையாட்சி எதிர்க்கப்பட்டாலும் அது தொடர்ந்து வளர்ந்துகொண்டே இருக்கும்.

 

(இ) இறையாட்சி சிறிய அளவில் தொடங்கி அனைவரையும் உள்ளடக்கும் நிலைக்கு உயரும்.

 

(ஈ) இறையாட்சியை யாரும் கண்டுகொள்ளவில்லை என்றாலும், அது தன் முழு இயல்பை அடையும் வரை வளர்ந்துகொண்டே இருக்கும்.

 

இவ்விரு உருவகங்கள் – தானாக வளரும் விதை, கடுகு விதை – இயேசு தம் சீடர்களுக்கும் (மாற்கு தன் குழுமத்தாருக்கும்) சொல்வது என்ன? அவர்களுடைய சமகாலத்தில் இறையாட்சி எதிர்க்கப்பட்டாலும் கண்டுகொள்ளாமல் விடப்பட்டாலும் அவர்கள் சோர்வடையக் கூடாது. இறையாட்சி வளர்ந்து அதன் முழு இயல்பை அடையும் என்னும் எதிர்நோக்கில் அவர்கள் உறுதியாக நிற்க வேண்டும். ‘காண்பவற்றின் அடிப்படையில் அல்ல, மாறாக, நம்பிக்கையின் அடிப்படையில் அவர்கள் வாழ வேண்டும்!’

 

இன்றைய முதல் வாசகத்தில், இறைவாக்கினர் எசேக்கியேல் உருவகம் ஒன்றைக் கையாளுகிறார்: நுனிக்கிளை ஒன்று பெரிய மரமாக மாறுகிறது. நுனிக்கிளை தன்னிலே வலுவற்றது, நொறுங்குதன்மை கொண்டது. வலுவற்றதும் நொறுங்கக்கூடியதுமான நுனிக்கிளையை கடவுள் தொட்டவுடன் (நட்டவுடன்) பெரிய மரமாக மாறுகிறது.

 

பாபிலோனியாவில் அடிமைப்பட்டுக் கிடக்கிற இஸ்ரயேல் மக்களையே ‘நுனிக்கிளை’ உருவகம் குறிக்கிறது. ஆண்டவராகிய கடவுளே இஸ்ரயேல் மக்களை மீண்டும் அழைத்து அவர்களைப் பெரிய இனமாக மாற்றுவார். ஆக, தங்கள் கண்களால் தாங்கள் காண்கிற அடிமைத்தனத்தின் அடிப்படையில் அல்ல, மாறாக, நம்பிக்கையின் அடிப்படையில் – கடவுள் அருளும் விடுதலை வாழ்வின் அடிப்படையில் – அவர்கள் வாழ வேண்டும்.

 

பவுல் போல, இயேசுவின் சீடர்கள்போல, இஸ்ரயேல் மக்கள்போல நம்பிக்கையின் அடிப்படையில் நாம் எப்படி வாழ்வது?

 

(அ) பார்வை மாற்றம் வேண்டும்

 

ஒரு பப்பாளியைத் திறந்து பார்த்து, அந்தப் பப்பாளிக்குள் இருக்கிற விதைகளை எண்ணிப் பார்ப்பது அறிவு என்றால், ஒரு விதைக்குள் எவ்வளவு பப்பாளிகள் ஒளிந்திருக்கின்றன என்று சிந்தித்துப் பார்ப்பது ஞானம். ஒரு விதைக்குள் நிறையப் பப்பாளிகளைப் பார்ப்பதே நம்பிக்கைப் பார்வை. இத்தகைய பார்வை கொண்டிருக்கும்போது வாழ்க்கை நமக்கு விரியத் தொடங்கும். குழந்தை இயேசுவைக் காண வந்த கீழ்த்திசை ஞானியரிடம் இருந்தது இதே நம்பிக்கைப் பார்வையே! அதனால்தான், அவர்கள் ஒரு குழந்தையில் யூதர்களின் அரசனைக் கண்டார்கள். ஏரோதுவோ, குழந்தையில் குழந்தையை மட்டுமே கண்டார். நாம் காண்கிற அனைத்திலும் ஆற்றல் மறைந்திருப்பதைக் காணும் பார்வை பெற வேண்டும்.

 

(ஆ) மாறுவது மதிப்புக்குரியதாகிறது

 

விதையும், கடுகு விதையும், நுனிக்கிளையும் மரமாக மாறும்போது மதிப்புக்குரியதாக, வலிமைமிக்கதாக, அனைவரையும் தழுவிக்கொள்வதாக மாறுகிறது. நாம் நம் முழு இயல்பாக மாறும்போது மதிப்புக்குரியவர் ஆகிறோம். லெயோனார்டோ டாவின்சி இவ்வாறு புலம்புகிறார்: ‘நான் வயல்வெளியில் காண்கிற அனைத்து மலர்ச்செடிகளும் தங்கள் முழு இயல்பை அடைந்து பூத்துக் குலுங்குகின்றன. மனிதர்கள் என்னவோ தங்கள் ஆற்றலை அறியாதவர்களாக, தங்கள் இயல்பை முழுமையாக அடையாமலேயே இறந்துவிடுகிறார்கள்!’ நம் முழு இயல்பாக நாம் மாறும் வரை தொடர்ந்து நாம் நகர்ந்துகொண்டே இருக்க வேண்டும். ‘இந்த வளர்ச்சி போதும்!’ என எந்தச் செடியும் நிறுத்திக்கொள்வதில்லை. வெட்ட வெட்ட அது வளர்கிறது, துளிர்க்கிறது. அதுபோலவே, எதிர்ப்புகள் வந்தாலும் நாம் தொடர்ந்து வளர வேண்டும்.

 

(இ) நம்பிக்கைப் பார்வை அளிப்பது

 

நம் கணவர், மனைவி, குழந்தைகள், நண்பர், உடன்பணியாளர், முன்பின் தெரியாதவர் என அனைவரும் தங்களுக்குளே ஆற்றல் கொண்டவர்களாக இருக்கிறார்கள். அவர்களுடைய ஆற்றலை நாம் அவர்களுக்குச் சுட்டிக்காட்ட வேண்டும். சோர்வும், விரக்தியும், அவநம்பிக்கையும் வரும்போது, ‘வாழ்க்கை ஒன்றும் முடிந்துவிடவில்லை!’ என்னும் நம்பிக்கைச் செய்தியை நாம் மற்றவர்களுக்குத் தர வேண்டும். நம் சொற்களும் செயல்களும் மற்றவர்களுக்கு ஆற்றல் அளிப்பதாக இருத்தல் வேண்டும். நாம் ஒவ்வொருவருமே இறையாட்சியின் ஆற்றலைக் கொண்டிருக்கிறோம். நம் வழியாகவே இறையாட்சி இந்த மண்ணில் மலர்கிறது. நாமே இறையாட்சி. நம்முடைய வளமையும் வளர்ச்சியும் வலிமையுமே இறையாட்சியின் அடையாளங்கள்.

 

‘ஆண்டவரின் இல்லத்தில் நடப்பட்டோர் செழித்தோங்குவர், கனி தருவர், செழுமையாய் பசுமையாய் இருப்பர்’ எனப் பாடுகிறார் திருப்பாடல் ஆசிரியர் (காண். திபா 92) (பதிலுரைப்பாடல்). நாம் வாழும் இந்த உலகமே ஆண்டவரின் இல்லம். நாம் எல்லாருமே இங்கு நடப்பட்டுள்ளோம்!

 

அருள்திரு யேசு கருணாநிதி
மதுரை உயர்மறைமாவட்டம்
இரக்கத்தின் தூதுவர்

 


 

Share: