• 044-26428162
  • dbdeepagam@gmail.com
Logo

Sermons

இன்றைய இறைமொழி. செவ்வாய், 18 ஜூன் 2024. எல்லையற்ற அன்பு

Tuesday, June 18, 2024   Fr. Yesu Karunanidhi   Archdiocese of Madurai

Daily Catholic Lectio இன்றைய இறைமொழி Ordinary Time

இன்றைய இறைமொழி
செவ்வாய், 18 ஜூன் 2024
பொதுக்காலம் 11-ஆம் வாரம் – செவ்வாய்
1 அரசர்கள் 21:17-29. மத்தேயு 5:43-48

 

எல்லையற்ற அன்பு

 

ஆண்டவரை அன்பு செய்தலும் அடுத்திருப்பவரை அன்பு செய்தலும் இஸ்ரயேல் மக்கள் வாழ்வின் இரு தடங்களாக இருந்தன. இவற்றில், ‘அடுத்திருப்பவர்’ என்பவர் இஸ்ரயேல் மக்கள் சமூகத்தைச் சார்ந்தவர் என்ற வரையறை இருந்தது. மேன்மையான நெறிபற்றிப் பேசுகிற இயேசு, தம் சீடர்கள் அடுத்திருப்பவருக்குக் காட்டுகிற அன்பு எல்லையற்றதாக, விண்ணகத் தந்தை போல நிறைவுள்ளதாக இருக்க வேண்டும் என அறிவுறுத்துகிறார்.

 

வழக்கமான மனித அன்பு மூன்று கூறுகளைக் கொண்டது: (அ) நிபந்தனைக்குட்பட்டது – அதாவது, அடுத்தவர் இப்படி இருந்தால்தான் நான் அன்புகூர்வேன் என்ற எல்கையை நம் மனம் விதித்து, அந்த எல்கையைப் பொருத்தே அன்பு செய்கிறது. (ஆ) கைம்மாறு கருதுவது – ஒருவர் மற்றவருக்குக் காட்டுகிற அன்பு கொடுக்கல்-வாங்கலை அடிப்படையாகக் கொண்டது. அதாவது, ஒருவர் எந்த அளவுக்குப் பெறுகிறாரோ, அந்த அளவுக்கே கொடுக்கிறார். (இ) சூழல் சார்ந்தது – ஒருவருக்குக் காட்டுகிற அன்பை நாம் எல்லாச் சூழலும் எல்லா நிலைகளிலும் அவரிடம் காட்டுவதில்லை.

 

தம் சீடர்கள் விண்ணகத் தந்தையின் பிள்ளைகள் ஆக வேண்டும் என விரும்புகிற இயேசு, அவரைப் போல அன்பு செய்யுமாறு தூண்டுகிறார்: கடவுளின் அன்பு அனைவருக்கும் உரியதாக, அனைவருடைய நலனையும் விரும்புவதாக, அனைவருக்கும் வளம் தருவதாக இருக்கிறது.

 

‘நிறைவுள்ளவராய் இருக்க விரும்பினால் அனைத்தையும் இழக்குமாறு’ இளவல் ஒருவருக்குப் பணிக்கிறார் இயேசு.

 

சூரியன் தன் ஒளியை அள்ளிக் கொடுத்தாலும் அதன் ஒளி குறைவதில்லை (அறிவியல்படி, சூரியன் தன் ஒளியை கொஞ்சம் கொஞ்சமாக இழக்கிறது). மழை எவ்வளவு பொழிந்தாலும் குறைந்துவிடுவதில்லை. அதுபோலவே, அன்பு செய்யும் ஒருவர் மற்றவரை அன்பு செய்யும்போது அவர் குறைந்துவிடுவதில்லை. அவர் நிறைவில் வளர்கிறார். விண்ணகத் தந்தையின் நிறைவை அடையும் வரை அன்பு வளர்ந்துகொண்டே இருக்கும்.

 

பாரபட்சமற்ற, வேற்றுமை பாராட்டாத, அனைவரையும் உள்ளடக்கிய அன்பு கொண்டிருத்தல் நலம்.

 

இத்தகைய அன்பு வளர வேண்டுமெனில் பரிவுள்ளம் அவசியம். ஆகையால்தான், லூக்கா நற்செய்தியாளர் ‘விண்ணகத் தந்தையின் நிறைவு’ என்பது ‘விண்ணகத் தந்தையின் இரக்கம்’ என மாற்றுகிறார்.

 

இன்றைய முதல் வாசகத்தில், நாபோத்துக்காக ஈசபேலையும் ஆகாபையும் பழிதீர்க்க விரும்புகிறார் ஆண்டவர். ஆனால், ஆகாபின் மனமாற்றம் கடவுளிடமிருந்து அவருக்குப் பரிவைப் பெற்றுத் தருகிறது.

 

நிற்க.

 

‘கடவுளே, உமது பேரன்புக்கேற்ப எனக்கு இரங்கும்!’ எனப் பாடுகிறார் தாவீது (காண். திபா 51). ஆண்டவரின் பேரன்பை இரக்கமாக அனுபவிக்கும் நாம் அதை ஒருவர் மற்றவருக்கு வழங்குதல் நலம்! (யூபிலி கி.பி. 2025, துணுக்கு 127).

 

அருள்திரு யேசு கருணாநிதி
மதுரை உயர்மறைமாவட்டம்
இரக்கத்தின் தூதுவர்

 


 

Share: