• 044-26428162
  • dbdeepagam@gmail.com
Logo

Sermons

இன்றைய இறைமொழி. சனி, 22 ஜூன் 2024. நாளைக்காக

Saturday, June 22, 2024   Fr. Yesu Karunanidhi   Archdiocese of Madurai

Daily Catholic Lectio இன்றைய இறைமொழி Ordinary Time

இன்றைய இறைமொழி
சனி, 22 ஜூன் 2024
பொதுக்காலம் 11-ஆம் வாரம் – சனி
2 குறிப்பேடு 24:17-25. மத்தேயு 6:24-34

 

நாளைக்காக

 

இன்றைய நற்செய்தி வாசகத்தை மேலோட்டமாக வாசித்தால் அதில் இரு பிரிவுகள் உள்ளன: (அ) இரு தலைவர்களுக்கு – கடவுளுக்கும் செல்வத்துக்கும் – நாம் பணிவிடை செய்ய இயலாது. (ஆ) நாளைய தினத்தைப் பற்றிய கவலையை விடுக்க இயேசுவின் அறிவுரை. மேலோட்டமான வாசிப்பில் இப்பகுதி இரு பிரிவுகளாகத் தோன்றினாலும், கொஞ்சம் ஆழமாக வாசித்தால் இரு பிரிவுகளுக்கும் உள்ள தொடர்பு புரிகிறது.

 

அந்தத் தொடர்பு என்ன? செல்வத்துக்குப் பணிவிடை புரிபவர் நாளைய தினத்தைப் பற்றிக் கவலைப்படுகின்றார். கடவுளுக்குப் பணிவிடை புரிபவர் அத்தகைய கவலையை எளிதில் களைகின்றார்.

 

நாளைய தினத்தைப் பற்றி நாம் கவலைப்படக் கூடாது என்றால் என்ன?

 

(அ) சார்வாகா அல்லது எபிகூரியன் மெய்யியல் சொல்வது போல, ‘உண்டு, குடி, நாளை என்பது கிடையாது’ என்பதா? இல்லை.

 

அல்லது

 

(ஆ) நாளைக்கான எந்தத் திட்டமும் அல்லது எதிர்காலத்துக்கான எந்த இலக்கும் இல்லாமல் இருப்பதா? இல்லை.

 

அல்லது

 

(இ) சும்மா அமர்ந்துகொண்டு, கடவுள் அனைத்தையும் பார்த்துக்கொள்வார் என ஓய்ந்திருப்பதா? இல்லை.

 

மாறாக,

 

(அ) ஆண்டவர் பார்த்துக்கொள்வார் என்னும் நம்பிக்கை கொண்டிருப்பது. ‘பலிப்பொருள் எங்கே?’ என்று தன்னிடம் கேட்ட தன் மகன் ஈசாக்கிடம், ‘பலிப்பொருளைப் பொருத்த மட்டில் மலையில் ஆண்டவர் பார்த்துக்கொள்வார்’ என்கிறார் ஆபிரகாம். ‘நாம் செய்ய வேண்டிய வேலையைச் செய்வோம். நாம் மேற்கொள்ள வேண்டிய பயணத்தை மேற்கொள்வோம். பலிப்பொருளை ஆண்டவர் பார்த்துக் கொள்வார்’ என்பதே ஆபிரகாமின் நம்பிக்கைப் பார்வை.

 

(ஆ) நம் கவலையை விடுப்பது. இத்தாலிய மொழியில், ‘கவலை’ என்பதை ‘ப்ரெஓக்குபாட்சியோனே’ என்னும் சொல்லால் வழங்குகின்றனர். இந்தச் சொல்லின் பொருள், ‘நாற்காலியில் முன்சென்று அமர்வது.’ அதாவது, நாம் கவலைப்படும்போது என்ன நடக்கிறது? நம் மூளையில் பல சிந்தனைகள் நாற்காலியில் முன்சென்று அமர்ந்துகொள்கின்றன. இவை அமர்ந்துகொள்வதால் மற்ற சிந்தனைகளுக்கு, குறிப்பாக நேர்முகமான சிந்தனைகளுக்கும், தீர்வு தருகின்ற சிந்தனைகளுக்கும் அங்கே இடம் இல்லாமல் போய்விடுகிறது. விளைவு, நம் மூளை தொடர்ந்து கவலைப்பட்டுக் கொண்டே இருக்கிறது.

 

(இ) நம் முதன்மைகளை நெறிப்படுத்துவது. நாம் கவலைகள் கொள்ளலாம். ஆனால், முதன்மையானவற்றைப் பற்றிக் கவலைப்படுதல் வேண்டும். மேன்மையானது எது தாழ்வானது எது என நம் தேவைகளை வகைப்படுத்தி விட்டால், தாழ்வானவை பற்றிய கவலைகளிலிருந்து நம்மால் விடுபட இயலும். உணவை விட உயிரும், உடையை விட உடலும் மேன்மையானது என எண்ணி அவற்றுக்கேற்றாற் போல நம் தேவைகளை வரையறுத்து உணர்ந்து கொள்ள வேண்டும்.

 

நாளைய பற்றிய கவலை ஏன் தேவையற்றது?

 

(அ) கவலைப் படுவதால் நம் வாழ்நாளின் நாளையோ, நம் வளர்த்தியில் ஒரு முழத்தையோ கூட்ட இயலாது. அதாவது, நம்மால் எதுவும் செய்ய இயலாது. ஆக, கவலைப்படுதல் பயனற்றது.

 

(ஆ) கவலை கவனச் சிதறல்களை ஏற்படுத்துகிறது. ஒரே வேலையில் நம் மனம் ஈடுபடுவதற்குப் பதிலாக பற்பலவற்றைச் சிந்தித்திக் கொண்டே இருக்கிறது. இப்படியாக நம் ஆற்றல் வீணாகிறது.

 

(இ) கவலை நம் கவனத்தை நம்மேல் திருப்பி அங்கேயே உறைய வைத்து விடுகிறது. நமக்கு வெளியே உள்ள உலகையும், மனிதர்களையும், கடவுளையும் மறக்கச் செய்கிறது.

 

இன்று நாம் கேட்க வேண்டிய கேள்வி ஒன்றே: நான் யாருக்குப் பணிவிடை செய்கிறேன்? செல்வத்துக்கா? கடவுளுக்கா?

 

நிற்க.

 

கடவுளுக்குப் பணிவிடை செய்பவர் நாளைய கவலையை விடுக்கின்றார், இன்றைய பொழுதை இனிதே வாழ்கின்றார், தன் கவனச் சிதறல்களை விடுக்கின்றார். செல்வத்துக்குப் பணிவிடை செய்பவர் நாளைய பற்றிய கவலையோடு திரிகிறார், இன்று என்பதைச் சுமையாகப் பார்க்கிறார், கவனம் சிதறியவராய்ப் பரபரப்புடன் காணப்படுகின்றார். (யூபிலி கி.பி. 2025, துணுக்கு 131).

 

அருள்திரு யேசு கருணாநிதி
மதுரை உயர்மறைமாவட்டம்
இரக்கத்தின் தூதுவர்

 


 

Share: