• 044-26428162
  • dbdeepagam@gmail.com
Logo

Sermons

இன்றைய இறைமொழி. திங்கள், 24 ஜூன் 2024. இவர் பெயர் யோவான்.

Monday, June 24, 2024   Fr. Yesu Karunanidhi   Archdiocese of Madurai

Daily Catholic Lectio இன்றைய இறைமொழி Ordinary Time

இன்றைய இறைமொழி
திங்கள், 24 ஜூன் 2024
திருமுழுக்கு யோவான் பிறப்பு
எசா 49:1-6. திப 13:22-26. லூக் 1:57-66, 80.

 

இவர் பெயர் யோவான்

 

திருஅவை மூவரின் பிறந்தநாள்களைக் கொண்டாடுகிறது: இயேசு, இயேசுவின் தாய் மரியா, இயேசுவின் முன்னோடி திருமுழுக்கு யோவான். இன்றைய நற்செய்தி வாசகத்தில் (காண். லூக் 1:57-66, 80) திருமுழுக்கு யோவானின் பிறப்பு நிகழ்வையும், பெயரிடுதல் நிகழ்வையும் வாசிக்கின்றோம்.

 

‘இவர் பெயர் யோவான்’ என சக்கரியா எழுதியவுடன், ஊமையாக இருந்த அவர் பேசத் தொடங்குகிறார். இந்த நிகழ்வுக்கு விளக்கம் தருகிற புனித அகுஸ்தினார், ‘யோவான் குரல். இயேசு வார்த்தை. குரலாக அவர் இருப்பார் எனக் காட்டுவதற்காகவே சக்கரியா குரலைத் திரும்பப் பெறுகிறார். அன்றாட உரையாடலில் நாம் சொற்களைக் கேட்கிறோம். வார்த்தைகள் குரல் வழியாகவே உச்சரிக்கப்படுகின்றன. குரலை நாம் மறந்துவிடுகிறோம். வார்த்தைகளே நம் நினைவில் நிலைகொள்கின்றன.’

 

‘இக்குழந்தை எப்படிப்பட்டதாக இருக்குமோ?’

  • இதுதான் சக்கரியா-எலிசபெத்து இல்லத்தைச் சுற்றி வாழ்ந்தவர்கள் உள்ளத்தில் எழுந்த ஒரே கேள்வி.

 

இக்குழந்தை எப்படிப்பட்டதாக இருக்கும் என்பதை சக்கரியாவின் பாடலிலிருந்து வாசகர் தெரிந்துகொள்ள முடியும்: ‘நீ உன்னத கடவுளின் இறைவாக்கினர் எனப்படுவாய். ஏனெனில், பாவமன்னிப்பால் வரும் மீட்பை அவர்தம் மக்களுக்கு அறிவித்து ஆண்டவருக்கான வழியைச் செம்மைப்படுத்த அவர் முன்னே செல்வாய்!’

 

இந்நாளில், திருமுழுக்கு யோவான் நமக்குத் தரும் வாழ்க்கைப் பாடங்களைச் சற்றே சிந்திப்போம்:

 

  1. தன் இலக்கு எது என்பதை தன்னுடைய செயல்களில் வெளிப்படுத்தினார்.

 

இயேசுவின் செயல்கள் பல நேரங்களில் அவருடைய இலக்கை மக்களுக்குத் தெளிவாகச் சொல்லவில்லை. ‘இவர் யாரோ?’ என்று மக்கள் எண்ணும்படியாகவே அவர் வைத்திருந்தார். ஆனால், திருமுழுக்கு யோவான் யார் என்பதை மக்கள் தெளிவாக அறிந்திருந்தனர். ஏனெனில், அவருடைய செயல்கள் அவருடைய இலக்கை அப்படியே வெளிப்படுத்தின. மேலும், ‘இதுதான் நான்’ என மற்றவர்களிடம் சொல்லிவிட்டார் திருமுழுக்கு யோவான்.

 

  1. இரண்டாம் இடத்தில் இருப்பது

 

இன்றைய உலகில் நாம் நம்மிடம் இல்லாத ஒன்றையும் இருப்பதாகச் சொல்லிப் பெருமைப்படுகிறோம். ஆனால், அவர், ‘நீர் மெசியாவா?’ என்று மக்கள் கேட்டபோது, ‘இல்லை’ என்றும், ‘மிதியடி வாரை அவிழ்ப்பவர்’ என்றும் சொல்கின்றார். மேலும், மணமகனுக்கு அருகில் நிற்கும் தோழன் என்கிறார். திருமண நிகழ்வுகளில் மணமகனின் மேல் அடிக்கும் வெளிச்சம் தோழன்மேல் விழுவதில்லை. மணமகன் தோழர்களை யாரும் பார்ப்பதில்லை. தன்னை இரண்டாம் இடத்தில் வைத்துக்கொள்வதன் வழியாக, ‘இரண்டாம் இடத்தில் இருந்தால் என்ன தவறு?’ என்று நம்மைக் கேட்கத் தூண்டுகின்றார் யோவான். அவருடைய தாய் எலிசபெத்துக்கும் இது தெரியும். தன் மகன் கடைசி வரை இரண்டாம் இடத்தில்தான் இருக்கப் போகிறான் என்று. இரண்டாம் இடமும் இனிய இடமே எனக் கற்றுத் தருகிறார் யோவான்.

 

  1. செயல்கள் முதன்மைகளை வெளிப்படுத்துகின்றன

 

என்னுடைய இலக்குகள் என் வெறும் எண்ணங்களாக மட்டுமே இருந்தால் நான் இலக்கை அடைய முடியாது. நான் ஓர் எழுத்தாளன் ஆக வேண்டும் என்ற இலக்கை வைத்திருக்கிறேன் என்றால், நான் தினமும் ஒரு பக்கமாவது எழுத வேண்டும். எழுதவே செய்யாமல் நான் எழுத்தாளன் ஆக முடியாது. ஆக, ‘எழுத்தாளன் ஆக வேண்டும்’ என்ற என்னுடைய எண்ணம் ‘எழுதுதல்’ என்னும் செயலில் வெளிப்பட வேண்டும். அப்படி வெளிப்பட்டால்தான் அது என்னுடைய முதன்மை என்பது தெளிவாகும்.

 

திருமுழுக்கு யோவானின் செயல்கள் அவருடைய இலக்கை நோக்கியதாகவே இருந்தன. பாலைநிலத்தில் ‘மறைந்து’ வாழ்கின்றார். ஏனெனில், அது அவருடைய பணி. வெட்டுக்கிளியும் காட்டுத்தேனும் உண்டு, ஒட்டக மயிராடையை அணிகின்றார். அதுதான் அவருடைய எளிய வாழ்க்கை முறை. திருமுழுக்குக் கொடுக்கின்றார். அதுதான் அவருடைய பணி. தலை வெட்டுண்டு இறந்து போகின்றார். அதுதான் அவருடைய நியதி. தான் மெசியாவின் முன்னோடி எனக் கனவு காணவில்லை அவர். முன்னோடியாகவே செயல்படுகிறார்.

 

ஆக, செயல்கள் நம் முதன்மைகளை வெளிப்படுத்துகின்றன. திருமுழுக்கு யோவானின் பிறப்புத் திருவிழாவில் நம் முதன்மைகளைச் சரிசெய்வதோடு, இலக்குகளுக்கு ஏற்ற செயல்களைச் செய்ய முற்படுவோம்.

 

  1. மகிழ்ச்சி

 

திருமுழுக்கு யோவான் தாயின் வயிற்றில் இருக்கும்போது மகிழ்கின்றார். இவருடைய பிறப்பால் சுற்றத்தார் மகிழ்கின்றனர். மணமகனுக்கு அருகில் நின்று அவர் சொல்வதைக் கேட்டு மகிழும் நண்பனே தான் எனத் தன்னைப் பற்றி எடுத்துரைக்கின்றார் யோவான். மகிழ்ச்சி என்பது பின்வருவனவற்றில் அடங்கியுள்ளது எனக் கற்பிக்கிறார் யோவான்.

 

(அ) தாழ்ச்சியில்

 

‘எனக்குப் பின் வருபவர் எனக்கு முன்பே இருந்தவர். அவருடைய மிதியடி வாரை அவிழ்க்கக் கூட எனக்குத் தகுதியில்லை’ என்று ஒரே நேரத்தில் இயேசுவை மணமகனாகவும் (காண். ரூத் 4), தன்னை அடிமையாகவும் முன்வைக்கின்றார் திருமுழுக்கு யோவான். தான் மிகப் பெரிய இறைவாக்கினராகக் கருதப்பட்டாலும், தனக்கென்று சீடர்கள் இருந்தாலும், தன்னைத் தேடி ஆட்சியாளர்களும் அரச அலுவலர்களும் வந்தாலும் தாழ்ச்சியில் மிளிர்கின்றார் யோவான்.

 

(ஆ) குரல் கேட்பதில்

 

மணமகன் குரல் கேட்பதில் மகிழும் மாப்பிள்ளைத் தோழர் இவர். அவருடைய குரல் கேட்டால் போதும் என்ற எண்ணம் கொண்டிருந்தார் யோவான்.

 

(இ) தன் பணியைச் செய்வதில்

 

எளிமையான உணவுப் பழக்கம், அமைதியான பாலைவனம் என அவருடைய வாழ்க்கை ஒரு சிறுநுகர் வாழ்வாக இருந்தது. அந்த நிலையில்தான் அவர் மனமாற்றத்தின் செய்தியை அறிவித்து திருமுழுக்கு கொடுத்தார். வாழ்வு தரும் தண்ணீராக வந்த மெசியாவுக்கே தண்ணீரால் திருமுழுக்கு கொடுத்தார்.

 

(ஈ) துன்பம் ஏற்பதில்

 

ஏரோதுவின் தவற்றைச் சுட்டிக்காட்டியதால் சிறைத்தண்டனைக்கும் மரணத்திற்கும் ஆளானார். ஏனெனில், தன் வாழ்க்கையின் இலக்கோடு அவர் சமரசம் செய்துகொள்ள விரும்பவில்லை.

 

திருமுழுக்கு யோவானின் சுற்றத்தார் கேட்ட அதே கேள்வி – ‘இக்குழந்தை எப்படிப்பட்டதாக இருக்குமோ?’ – என்னும் கேள்வியை நாம் நம்மைப் பற்றியே பல்வேறு விதங்களாகக் கேட்கிறோம்: ‘இதுதான் நானா?’ ‘இதுதான் என் வாழ்வியல் இலக்கா?’ ‘நான் சரியான பாதையில்தான் செல்கிறேனா?’ ‘என் தான்மை என்ன?’ இக்கேள்விகளுக்கான விடையை நாம் காணவும் இப்புனிதர் நமக்காக இறைவேண்டல் செய்வாராக!

 

நிற்க.

 

மகிழ்ச்சி என்பது ஒரு மாபெரும் உணர்வு. நாம் பிறந்தபோதும் நம் பெற்றோர் மகிழ்ந்தனர். நம் உதடுகள் அழகாகச் சிரித்தன. ஆனால், அன்றாட அலுவல்களின் அழுத்தத்திலும், வாழ்வியல் போராட்டத்திலும் நம் சிரிப்பை நாம் மறந்துவிட்டோம். இன்று நன்றாகச் சிரிப்போம்! ஏனெனில், ‘ஒரு குழந்தை பிறந்துள்ளது!’ (யூபிலி கி.பி. 2025, துணுக்கு 132).

 

அருள்திரு யேசு கருணாநிதி
மதுரை உயர்மறைமாவட்டம்
இரக்கத்தின் தூதுவர்

 


 

Share: