• 044-26428162
  • dbdeepagam@gmail.com
Logo

Sermons

இன்றைய இறைமொழி. செவ்வாய், 25 ஜூன் 2024. இடுக்கமான வாயில்

Tuesday, June 25, 2024   Fr. Yesu Karunanidhi   Archdiocese of Madurai

Daily Catholic Lectio இன்றைய இறைமொழி Ordinary Time

இன்றைய இறைமொழி
செவ்வாய், 25 ஜூன் 2024
பொதுக்காலம் 12-ஆம் வாரம் – செவ்வாய்
2 அரசர்கள் 19:9-11, 14-21, 31-35, 36. மத்தேயு 7:6, 12-14.

 

மதிப்பு, பிறர்மைய எண்ணம், இடுக்கமான வாயில்

 

இன்றைய நற்செய்தி வாசகத்தில் தம் சீடர்களுக்கு மூன்று அறிவுரைகளை வழங்குகிறார் இயேசு:

 

(அ) மதிப்பு மிக்க ஒன்றை அதன் மதிப்பு தெரியாதவற்றிடம் வீணாக்க வேண்டாம். தூய்மையானது எது என்பதை நாய்கள் அறிவதில்லை. முத்துகளின் மதிப்பை பன்றிகள் அறிவதில்லை. அவற்றுக்குப் பயன்படாத இவ்விரு பொருள்களுமே அவற்றால் அழிக்கப்படும். மதிப்பும் நோக்கமும் இணைந்தே செல்கின்றன. ஒரு பொருள் அதன் நோக்கத்தை நிறைவேற்றும்போதுதான் மதிப்பு பெறுகிறது.

 

மதிப்பு மிக்க நம் பொருள், நேரம், ஆற்றலை நாம் சரியான நோக்கம் இல்லாமல் நாம் செலவிடும்போது, நாய்கள்முன்னும் பன்றிகள்முன்னும் அவற்றை எறிபவர்கள்போல இருக்கிறோம். ஆக, ஒன்றின் மதிப்பு மற்றும் நோக்கம் அறிந்து செயல்படுதல் நலம். எந்தவொரு செயலைச் செய்யுமுன்னும், ‘இதைச் செய்வதன் நோக்கம் என்ன?’ என்னும் கேள்வியையும், ‘மதிப்புக்குரிய ஒன்றை மதிப்புக்குரிய மற்றொன்றோடு நான் மாற்றிக்கொள்கிறேனா?’ என்னும் கேள்வியையும் கேட்பது நலம்.

 

(ஆ) பிறர் நமக்குச் செய்ய வேண்டும் என நாம் விரும்புவதை அவர்களுக்குச் செய்வது. மற்றவர்களின் இடத்திலிருந்து பார்ப்பது அல்லது யோசிப்பது. நாம் கூடி வாழும்போது நமக்கு அருகில் இருப்பவரின் தேவை உணர்ந்து செயல்படுவது நலம். பல நேரங்களில் தன்மைய எண்ணமும், தன்னலப் போக்கும் இதற்குக் குறுக்காக நிற்கின்றன. விட்டுக்கொடுப்பது நமக்கு வலியைத் தரும். ஆனால், தாராள உள்ளமும் பரந்த எண்ணமும் இருப்பவர் அந்த வலியைப் பொறுத்துக்கொள்கிறார்.

 

(இ) இடுக்கமான வாயில் வழியே நுழைதல். அகன்ற வழி, இடுக்கமான வழி என்னும் இரு வழிகளை முன்மொழிகிற இயேசு இடுக்கமான வழியைத் தெரிந்துகொள்ள அழைக்கிறார். வலி வழியாகத்தான் வழி என்பது இயேசுவின் பாடமாக இருக்கிறது. ஏனெனில், இடுக்கமான வாயில் வழியே நுழைபவர் வலியை ஏற்கிறார். இடர்களைச் சந்திக்கிறார். யாரும் செல்லாத வழியில் செல்கிற ஒருவரே மாற்றத்தை ஏற்படுத்துகிறார். அகன்ற வழியில் பலர் செல்வதைப் பார்த்து நாம் அவர்கள்பின் செல்ல நினைக்கிறோம். அந்த வழி எளிதான வழியாக இருக்கலாம். ஆனால், சரியான வழியாக இருக்க முடியாது. மேலும்,

 

நிற்க.

 

இடுக்கமான வழியாக செல்லும்போது நம் தான்மை மற்றும் அடையாளத்தை நாம் முழுமையாக வாழ்கிறோம். (யூபிலி கி.பி. 2025, துணுக்கு 133).

 

அருள்திரு யேசு கருணாநிதி
மதுரை உயர்மறைமாவட்டம்
இரக்கத்தின் தூதுவர்

 


 

Share: