• 044-26428162
  • dbdeepagam@gmail.com
Logo

Sermons

இன்றைய இறைமொழி. வெள்ளி, 28 ஜூன் 2024. நம்பிக்கையும் நலமும்

Friday, June 28, 2024   Fr. Yesu Karunanidhi   Archdiocese of Madurai

Daily Catholic Lectio இன்றைய இறைமொழி Ordinary Time

இன்றைய இறைமொழி
வெள்ளி, 28 ஜூன் 2024
பொதுக்காலம் 12-ஆம் வாரம் – வெள்ளி
2 அரசர்கள் 25:1-12. மத்தேயு 8:1-4

 

நம்பிக்கையும் நலமும்

 

இன்றைய நற்செய்தி வாசகத்தில், இயேசுவை அணுகி வருகிற தொழுநோயாளர் ஒருவர், அவர் முன் முழந்தாளிட்டு, அவர்மேல் உள்ள நம்பிக்கையை வெளிப்படுத்துகிறார். இயேசுவின் சமகாலத்தில், குணமாக்க இயலாத, அதே வேளையில் வெறுக்கத்தக்க நோயாகத் தொழுநோய் இருந்தது. தொழுநோயாளர்கள் தீட்டானவர்கள் எனக் கருதப்பட்டு, சமூகத்திலிருந்து அந்நியப்படுத்தப்பட்டனர். இந்தப் பின்புலத்தில் இத்தொழுநோயாளர் இயேசுவை அணுகி வந்தது அவருடைய துணிச்சலையும், அவசரமான தேவையையும் காட்டுகிறது.

 

தன்னைக் குணமாக்குமாறு வேண்டுகிற தொழுநோயாளரை இரக்கத்துடன் தொடுகிறார் இயேசு. இதுவும் அக்காலத்தில் தகாதது எனக் கருதப்பட்டது. ஏனெனில், தொழுநோய் ஒருவர் மற்றவரிடமிருந்து பரவக்கூடியது. இயேசுவின் தொடுதல் அவருக்கு உடனடியாக நலம் தருகிறது.

 

இப்பகுதி இயேசுவின் பண்புநலன்களையும் அவருடைய பணியையும் பற்றி பல முக்கியமான கருத்துகளைத் தருகிறது: முதலில், இயேசுவின் இரக்கம் மற்றும் விருப்பம். சமூகத்தின் விளிம்புநிலை மக்கள்மேல் இயேசு அக்கறை காட்டுகிறார். ஒதுக்கப்பட்டவர்கள்மேல் அன்பும் பரிவும் கொள்கிறார். மேலும், தம் சமகாலத்தில் வழக்கத்திலிருந்த சமூக மற்றும் சமய விதிமுறைகளை உடைக்கிறார்.

 

அதே வேளையில், தொழுநோயாளரின் நம்பிக்கையும் நமக்குத் தூண்டுதலாக இருக்கிறது. இயேசுவுக்கு அருகில் செல்லும் நாம் நலம் பெறுகிறோம்.

 

நேற்றைய மற்றும் இன்றைய முதல் வாசகமும் இஸ்ரயேல் மக்கள் பாபிலோனியாவுக்கு நாடுகடத்தப்பட்ட நிகழ்வை நம் கண்முன் கொண்டுவருகின்றன. ஆண்டவருடைய நகரம், ஆலயம் தரைமட்டமாக்கப்பட்டு, ஆண்டவருடைய மக்கள் தாங்கள் முன்பின் தெரியாத ஒரு நாட்டினரால் கொள்ளையடிக்கப்படுகின்றனர். ஆண்டவருடைய உடன்படிக்கையை மீறியதாலும், சிலைவழிபாடு செய்ததாலும் இந்த நிகழ்வு நடந்தது என்று இஸ்ரயேல் மக்கள் தங்களுக்குத் தாங்களே ஆறுதல் சொன்னாலும், ‘ஒரு நகரில் பத்துப் பேர் நீதிமான்களாக இருந்தால், அந்தப் பத்துப் பேரை முன்னிட்டு நான் நகரை அழிக்க மாட்டேன்’ (காண். தொநூ 18:32)-இல் ஆபிரகாமுக்கு வாக்குக் கொடுத்த கடவுள் தன் வாக்கை மறந்துவிட்டாரோ? என்று புலம்பவும், தங்கள் நாட்டில் பத்து நீதிமான்கள் கூட இல்லாமல் போனார்களோ என்று ஆதங்கப்படவும் செய்கின்றனர்.

 

அவர்கள் பாபிலோனியாவுக்கு நாடுகடத்தப்பட்டுச் சென்றபோது, அவர்கள் பாடிய பாடலாக திபா 137 விளங்குகிறது (இன்றைய பதிலுரைப்பாடல்).

 

ஒரு தனி மனித மற்றும் குழுமத்தின் வருத்தம், துன்பம், வெறுமை, இழப்பு, புலம்பல், கோபம், பகை அனைத்தையும் ஒரே பாடலுக்குள் கொண்டுவருகிறார் ஆசிரியர்.

 

மனிதன் கதைகளால் கட்டப்பட்டவன். கதைகளால் கட்டப்பட்ட அவன் தன் கதையை யாரும் மறந்துவிடக்கூடாது என்பதற்காக, அந்தக் கதையைப் பாடலாக்கிவிடுகின்றான். அந்தப் பாடலை யார் பாடினாலும் அந்த நபருக்குள் ஆதி மனிதன், நாடுகடத்தப்பட்ட மனிதன், அடிமையாகிப் போன மனிதன் மீண்டும் வந்து சில நிமிடங்கள் வாழ்ந்துவிட்டுப் போகின்றான். வாசித்த மனிதன் மறைந்துபோன அந்த மனிதனின் சோகத்தை தன்மேல் அப்பிக் கொண்டு தானும் கொஞ்ச தூரம் வழிநடக்கின்றான்.

 

மண், கோவில், கடவுள் என அனைத்தையும் இழந்து தங்கள் நாட்டைவிட்டு பாபிலோனியாவிற்கு அடிமைகளாக அழைத்துச்செல்லப்படும்போது அவர்கள் கடக்கின்ற ஓர் ஆற்றங்கரையில் நடக்கும் நிகழ்வே இப்பாடல். இந்தப்பாடலில் எண்ணற்ற வினைச்சொற்கள் பயன்படுத்தப்படுகின்றன: அமர்ந்து, அழுதோம், யாழ்களை மாட்டி வைத்தோம், பாடும்படி, கேட்டனர், கடத்திச் சென்றோர், இசைக்குமாறு, பாடுவோம், மறந்தால், சூம்பிப்போவதாக, நினையாவிடில், கருதாவிடில், ஒட்டிக்கொள்வதாக, வீழ்ந்த, இடியுங்கள், தள்ளுங்கள், சொன்னார்கள், பாழாக்கும், திருப்பிச் செய்வோர், பிடித்து, மோதி, அடிப்போர் என அடுக்கடுக்காக வினைச்சொற்களைப் பயன்படுத்துகின்றார் இதன் ஆசிரியர். இந்தப் பாடலை வாசித்தால் அதில் உள்ள வேகம் கண்கூடாய்த் தெரியும்.

 

‘ஆண்டவருக்கு உரித்தாக்கும் பாடலை அன்னிய நாட்டில் எங்ஙனம் பாடுவோம்’ – இவையே இந்தப் பாடலின் மையமாக உள்ள வார்த்தைகள். இந்த வார்த்தைகள் தங்கள் இறைவனின் மேல் அவர்கள் கொண்டிருந்த அளவில்லாத பற்றையும், தாங்கள் ‘அந்நியப்படுத்தப்பட்ட’ (தனிமைப்படுத்தப்பட்ட, திக்கற்ற நிலை) நிலையையும் மிக அழகாகப் பிரதிபலிக்கின்றது.

 

நம் தனிமைப்படுத்தப்பட்ட நிலை நமக்கு அழுகையைத் தருகின்றது. வாழ்வில் என்ன நடந்தாலும், என்னதான் திக்கற்றநிலை வந்தாலும், என்னதான் தனிமைப்படுத்தப்பட்டாலும் அதற்குக் காரணமான நபர்களைத் தேடி பழிதீர்ப்பதை விடுத்து, ‘எங்கே நடந்தது தவறு? என்று ஆராய்ந்தால் அதுவே புதிய வாழ்க்கையின் முதற்படி. என்னதான் தாங்கள் திக்கற்ற நிலைக்குத் தள்ளப்பட்டாலும், கொஞ்சம் நம்பிக்கை இஸ்ரயேல் மக்களின் நெஞ்சுக்குழிக்குள் இருந்ததால்தான், ‘எருசலேமே! நான் உன்னை மறந்தால் என் வலக்கை சூம்பிப்போவதாக! உன்னை நான் நினையாவிடில், எனது மகிழ்ச்சியின் மகுடமாகக் கருதாவிடில், என் நா மேல்வாயோடு ஒட்டிக்கொள்வதாக!’ என்று அவர்களால் பாட முடிகிறது.

 

இந்த நம்பிக்கையே இன்று நம்மை அடுத்த நாள் எழச் செய்கிறது. இந்த நம்பிக்கையே தொழுநோய் பீடித்த நபரை இயேசுவை நோக்கித் தள்ளியது.

 

நிற்க.

 

தனிமையில் வாடுகிற நபருக்கு நாம் காட்டும் உடனிருப்பால் அவர் எதிர்நோக்கு பெறுகிறார் (யூபிலி கி.பி. 2025, துணுக்கு 136).

 

அருள்திரு யேசு கருணாநிதி
மதுரை உயர்மறைமாவட்டம்
இரக்கத்தின் தூதுவர்

 


 

Share: