• 044-26428162
  • dbdeepagam@gmail.com
Logo

Sermons

இன்றைய இறைமொழி. செவ்வாய், 9 ஜூலை 2024. வாய்ப்புகளைக் காணுதல்!

Tuesday, July 9, 2024   Fr. Yesu Karunanidhi   Archdiocese of Madurai

Daily Catholic Lectio இன்றைய இறைமொழி Ordinary Time

இன்றைய இறைமொழி
செவ்வாய், 9 ஜூலை 2024
பொதுக்காலம் 14-ஆம் வாரம் – செவ்வாய்
ஓசேயா 8:4-7, 11-13. மத்தேயு 9:32-38

 

வாய்ப்புகளைக் காணுதல்!

 

‘இலக்கு இல்லாதபோது மக்கள் அலைந்து திரிவார்கள்’ என்கிறது விவிலியம் (காண். நீமொ 29:18). ஒரு தலைவரின் பண்புகளாக மூன்றைக் குறிப்பிடலாம்: (அ) அவர் தன்னைப் பின்பற்றுபவர்களுக்கான இலக்கை வரையறை செய்வார். (ஆ) அந்த இலக்கை அடைவதற்கான வளங்களைக் கொண்டுவருவார். (இ) அந்த இலக்கை அடைவதற்கான வாய்ப்புகளைக் கண்டறிவார்.

 

மூன்றாவது தலைமைப் பண்புக்கான விளக்கமாக அமைந்துள்ளது இன்றைய நற்செய்தி வாசகம். பேச்சிழந்த ஒருவரைப் பேசச் செய்கிறார் இயேசு. இந்த வல்ல செயலைக் கண்டவுடன் அவருடைய எதிரிகள் அவரை விமர்சனம் செய்கிறார்கள். ‘பேய்களின் தலைவனைக் கொண்டு பேய்களை ஓட்டுகிறான்’ என்று சொல்லி அவருடைய மதிப்பையும் ஆற்றலையும் குறைக்கிறார்கள். நாம் செய்ய இயலாத ஒன்றை மற்றவர் நன்றாகச் செய்துமுடிக்கும்போது நம்மை அறியாமலேயே இதே வகையான விமர்சனத்தை வைக்கிறது நம் வன்ம உள்ளம். மற்றவரின் சாதனை அவருடைய அதிர்ஷ்டம், ஆள்அறிமுகம், பின்புலம் வழியாக வந்தது எனச் சொல்லி அவருடைய உழைப்பையும் ஆற்றலையும் குறைத்து மதிப்பிடுகிறோம்.

 

இயேசுவின் வல்ல செயல் இரண்டு வகை எதிர்வினைகளை எழுப்புகிறது: ஒரு சிலர் அவருடைய ஆற்றல் கண்டு வியப்படைகிறார்கள். மற்ற சிலர், அவருடைய வல்ல செயல்களைக் கண்டு இயேசுவை விமர்சனம் செய்கிறார்கள். ஆனால், இயேசு இவ்விரண்டையும் ஒன்றுபோல எடுத்துக்கொள்கிறார்.

 

தம்மைப் பின்பற்றிய மக்கள்மேல் பரிவுகொள்கிற அவர், அவர்கள் ஆயனில்லாத ஆடுகள்போல இருக்கக் காண்கிறார். ‘அறுவடை மிகுதி’ என்று பணிக்கான வாய்ப்பு மிகுந்திருப்பதைக் காண்கிறார்.

 

இயேசுவின் சொற்கள் இன்றுவரை நம் எதார்த்தநிலையைக் குறிக்கின்றன:

 

‘அறுவடை மிகுதி. வேலையாள்களோ குறைவு’ – இந்த வாக்கியம், நற்செய்தி அறிவிப்பு மற்றும் மேய்ப்புப்பணிக்கான தளம் மிகுதியாக இருப்பதைக் குறித்தாலும், மேலாண்மை பார்வையில், குறைவான வேலையைக் கொண்டு குறைவானவற்றை மட்டுமே அறுவடை செய்ய முடியும் என்பதால் நாம் செய்யும் ஒவ்வொரு செயலுக்கும் நாம் அதிகமான ஆற்றலையும் கவனத்தையும் அக்கறையையும் கொடுக்க வேண்டும்.

 

இன்றைய நற்செய்தி வாசகம் நமக்குத் தரும் வாழ்வியல் பாடங்கள் எவை?

 

(அ) நம் செயல்கள் எதிர்மறையான விமர்சனத்தை எதிர்கொள்ளும்போது, விமர்சனத்தை நாம் பெரிதாக எடுத்துக்கொள்ளக் கூடாது. நாமும் எதிர்மறையான விமர்சனம் செய்யக் கூடாது.

 

(ஆ) நம் கண்முன் இருக்கிற வாய்ப்புகளை அடையாளம் காண வேண்டும். சில நேரங்களில் நாம் எதிர்கொள்கிற பிரச்சினைகள்கூட வாய்ப்பாக மாறும். எடுத்துக்காட்டாக, இரண்டு குழந்தைகளை இருசக்கர வாகனத்தில் ஏற்றிச் செல்வது பிரச்சினையாகத் தெரிகிறது. ஆனால், இந்நிகழ்வே நான்கு சக்கர வாகனம் வாங்குவதற்கான, நம் வாழ்வை மேம்படுத்துவதற்கான வாய்ப்பாக மாறலாம்.

 

(இ) ‘உரிமையாளரிடம் மன்றாடுங்கள்’ என்கிறார் இயேசு. நம் வாழ்வின், உறவுகளின், பணிகளின் பொறுப்பாளர்கள்நாம். நாம் செய்கிற வேலையில் நம்மையே முழுமையாக ஈடுபடுத்திக்கொள்ளவும், அர்ப்பணத்துடன் செயல்படவும் அருள் வேண்டி கடவுளிடம் மன்றாடுவோம்.

 

இன்றைய முதல் வாசகத்தில், ‘அவர்கள் காற்றை விதைக்கிறார்கள்’ என ஓசேயா வழியாக மெழிகிற ஆண்டவராகிய கடவுள், இஸ்ரயேல் மக்கள் செய்கிற பணிகளின் வெறுமை அல்லது ஒன்றுமில்லாமையைச் சுட்டிக்காட்டுகிறார்.

 

நிற்க.

 

எதிர்நோக்கு கொண்டிருப்பவர் பிரச்சினைகளையும் வாய்ப்புகளாகக் காண்கிறார் (யூபிலி கி.பி. 2025, துணுக்கு 143).

 

அருள்திரு யேசு கருணாநிதி
மதுரை உயர்மறைமாவட்டம்
இரக்கத்தின் தூதுவர்

 


 

Share: