• 044-26428162
  • dbdeepagam@gmail.com
Logo

Sermons

இன்றைய இறைமொழி. திங்கள், 15 ஜூலை 2024. வாளையே கொணர வந்தேன்!

Monday, July 15, 2024   Fr. Yesu Karunanidhi   Archdiocese of Madurai

Daily Catholic Lectio இன்றைய இறைமொழி Ordinary Time

இன்றைய இறைமொழி
திங்கள், 15 ஜூலை 2024
பொதுக்காலம் 15-ஆம் வாரம் – திங்கள்
எசாயா 1:11-17. மத்தேயு 10:34-11:1

 

வாளையே கொணர வந்தேன்!

 

மத்தேயு நற்செய்தியின் ‘மறைத்தூது உரை’ இன்றைய நற்செய்தி வாசகத்துடன் நிறைவுக்கு வருகிறது. உரையின் நிறைவு ஓர் உருவகத்தோடு நிறைவுபெறுகிறது: ‘வாள்.’ ‘அமைதியை அல்ல. வாளையே கொணர வந்தேன’ என்கிறார் இயேசு. வாள் என்பதை பிளவு ஏற்படுத்துதல் என்னும் பொருளில் கையாளுகிறார் இயேசு. இந்தப் பிளவு எங்கே வருகிறது என்றால் நாம் எடுக்கிற முடிவுகளில்!

 

சீடத்துவத்தில் ஒருவர் பங்கேற்க வேண்டுமெனில் அவர் தாமாக விரும்பி அதைத் தெரிந்துகொள்ள வேண்டும். இந்த உலகில் உள்ள மக்களை இரண்டு வகைகளாகப் பிரிக்கலாம் என்கிறார் மாற்கு அவுரேலியு: ‘வெற்றியாளர்கள் மற்றும் முடிவு எடுக்க இயலாதவர்கள்.’ இந்த நேரத்தில் எனக்கு இது வேண்டும் என்று தெளிவாக முடிவு எடுத்து அதற்கேற்றாற்போலச் செயல்படுபவரே வெற்றி பெறுகிறார். சீடத்துவத்திற்கும் இத்தகைய முடிவு அவசியம். முடிவு எடுப்பது மற்றவர்கள் நடுவே பிளவை ஏற்படுத்துவதை விட நமக்குள்ளேயே பிளவை ஏற்படுத்துகிறது. அதாவது, நான் அமர்ந்து இந்த மறையுரையை எழுத வேண்டும் என்ற முடிவு எடுக்கும்போது, நான் இன்னும் கொஞ்ச நேரம் தூங்கிக்கொள்கிறேன் என்ற என் விருப்பத்திலிருந்து நான் என்னையே பிய்த்துக்கொண்டு வர வேண்டும். இதுதான் நான் அனுபவிக்கிற பிளவு! இதுதான் நான் அனுபவிக்கிற வாள்!

 

இன்று நாம் கேட்க வேண்டிய முதல் கேள்வி: வாழ்வின் முதன்மையானவற்றை நான் தெரிந்துகொண்டு, உறுதியான முடிவு எடுத்து, அதில் நிலைத்து நிற்கிறேனா?

 

தொடர்ந்து, சீடத்துவ வாழ்வின் மூன்று பண்புகளை முன்மொழிகிறார் இயேசு:

 

(அ) பிளவுபடாத அன்பு

 

இயேசுவை அன்பு செய்கிற சீடர் பிளவுபடா உள்ளத்தோடு, முழுமையாக அவரை அன்பு செய்ய வேண்டும். பாதி-பாதி சீடத்துவம் ஆபத்தானது. அதுபோலவே, வாழ்வின் முதன்மைகளைத் தெரிவுசெய்யும்போது பிளவுபடா உள்ளத்தோடு அதைப் பற்றிக்கொள்ள வேண்டும். இங்கே கொஞ்சம் அங்கே கொஞ்சம் என ஓடிக்கொண்டிருந்தால் நம் முதன்மைகளை நம்மால் அடைய முடியாது.

 

(ஆ) தயக்கமில்லாத வரவேற்பு

 

இயேசுவையும் அவர் அனுப்பிய தந்தையையும் இடறல்படாமல், தயக்கமில்லாமல் ஏற்றுக்கொள்ள வேண்டும். வாழ்வின் முதன்மைகளை நாம் தொடரும்போது சில நேரங்களில் நாம் தயக்கம்காட்டுகிறோம். தயக்கம் காட்டுகிறவர் பின்தங்கியே இருக்கிறார். துணிவுடன் எதையும் எதிர்கொள்பவரே வெற்றி பெறுகிறார்.

 

(இ) எதிர்பார்ப்பு இல்லாத நற்செயல்

 

சீடர் கைம்மாறு பெறுவர் என்பது இங்கே முன்மொழியப்பட்டாலும், நாம் ஒருவர் மற்றவருக்கு நற்செயல்கள் செய்யக் கற்றுக்கொள்ள வேண்டும். நற்செயல்களை நாம் செய்கிறோம். ஆனால், அவை மற்றவர்களால் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும், பாராட்டப்பட வேண்டும், விரும்பப்பட வேண்டும் என விரும்புகிறோம். அப்படிச் செய்யும்போது நற்செயல்களுக்கான பலன்களை நாம் நமக்கு வெளியே கட்டிவிடுகிறோம். நற்செயல்கள் செய்வது மட்டுமே நோக்கமாக இருந்தால் நலம்.

 

இன்றைய முதல் வாசகம், இறைவாக்கினர் எசாயாவின் பணிச் சூழலை நமக்கு முன்மொழிகிறது. ஆண்டவராகிய கடவுள் இஸ்ரயேல் மக்களின் வழிபாடுகளையும், பலிகளையும், திருவிழாக்களையும் சாடுகிறார். ‘இவை யாவும் என்மேல் விழுந்த சுமையாயின!’ என்கிறார் கடவுள். நம் நிகழ்வுக்கு வருகிற ஒருவருக்கு மாலையும் சால்வையும் அணிவித்து மகிழ்கிறோம். அவர் அவற்றை ஏற்றுக்கொள்வதற்குப் பதிலாக, ‘இவை என்மேல் விழுந்த சுமையாயின!’ என்று சொன்னால் எப்படி இருக்கும்? ஆண்டவராகிய கடவுள் இப்படிச் சொல்லக் காரணம் என்ன?

 

இஸ்ரயேல் மக்கள் இறையன்பை வெறும் வழிபாட்டு அளவில் சுருக்கிவிட்டு, பிறரன்பை உதறித் தள்ளினார்கள். ‘தீமை செய்தலை விட்டுவிடுங்கள். நன்மை செய்யக் கற்றுக்கொள்ளுங்கள்!’ என்கிறார் ஆண்டவராகிய கடவுள். ‘ஒடுக்கப்பட்டோருக்கான, திக்கற்றவர்களுக்கான, கைம்பெண்களுக்கான நீதியைத் தேடுங்கள்’ என அறிவுறுத்துகிறார்.

 

கடவுளுக்குரியதைச் செய்துவிட்டு மானிட குழுமத்துக்குரியதைச் செய்ய மறுப்பது தவறு!

 

நிற்க.

 

எதிர்நோக்கின் திருப்பயணிகள் நன்மை செய்யக் கற்றுக்கொள்வதிலும், நன்மை செய்வதிலும் மனம் தளருவதில்லை (யூபிலி கி.பி. 2025, துணுக்கு 148).

 

அருள்திரு யேசு கருணாநிதி
மதுரை உயர்மறைமாவட்டம்
இரக்கத்தின் தூதுவர்

 


 

Share: