• 044-26428162
  • dbdeepagam@gmail.com
Logo

Sermons

இன்றைய இறைமொழி. செவ்வாய், 16 ஜூலை 2024. செயலுக்கேற்ற பலன்

Tuesday, July 16, 2024   Fr. Yesu Karunanidhi   Archdiocese of Madurai

Daily Catholic Lectio இன்றைய இறைமொழி Ordinary Time

இன்றைய இறைமொழி
செவ்வாய், 16 ஜூலை 2024
பொதுக்காலம் 15-ஆம் வாரம் – செவ்வாய்
எசாயா 7:1-9. மத்தேயு 11:20-24

 

செயலுக்கேற்ற பலன்

 

கடந்த மாதம் ஆக்டன் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற உரை ஒன்றில் ‘சம்திங் ஃபார் சம்திங்’ (‘something for something’) என்ற ஒரு கருத்துரு பேசப்பட்டது. இந்த உரையின்படி, இந்தக் கருத்துரு மட்டுமே உலகின் வறுமையைப் போக்க முடியும். அதாவது, உணவகம் ஒன்றில் நான் சாப்பிடுகிறேன். நான் சாப்பிட்ட உணவுக்காக உணவக உரிமையாளருக்கு 100 ரூபாய் கொடுக்கிறேன். உணவகத்தைவிட்டு வெளியே வருகிறேன். வறியவர் ஒருவர் நின்றுகொண்டிருக்கிறார். அவருக்கு நான் 100 ரூபாய் கொடுக்கிறேன். உணவக உரிமையாளருக்கு நான் கொடுத்த நிலையில், ‘சம்திங் ஃபார் சம்திங்’ நிகழ்கிறது. அதாவது, அவர் எனக்கு உணவு கொடுத்தார், நான் அவருக்கு பணம் கொடுத்தேன். இரண்டாம் நிலையில் – வறியவருக்கு உதவிய நிலையில் – அவர் எனக்கு எதுவும் தராமலேயே நான் அவருக்கு பணம் கொடுக்கிறேன். அங்கே ‘சம்திங் ஃபார் நத்திங்’ (‘something for nothing’) நடக்கிறது.

 

‘சம்திங் ஃபார் நத்திங்’ நான்கு நிலைகளில் நடக்கிறது: ஒன்று, இரக்கச் செயலில். இரண்டு, வன்முறையில், மூன்றாவது, ஊழலில், நான்காவது, திருட்டில். அதாவது, ஒன்றும் செய்யாமலேயே மற்றவருடைய ஒன்றை இன்னொருவர் தனக்கு உரிமையாக்கிக்கொள்கிறார்.

 

இன்றைய நற்செய்தி வாசகத்தில் ‘செயலுக்கேற்ற பலன்’ தராத நகரங்களை இயேசு கடிந்துகொள்கிறார். நற்செய்தி அறிவித்தல் என்னும் செயல் நடக்கிறது. ஆனால், மனமாற்றம் என்னும் பலன் இல்லை. விளைவு, ‘நத்திங் ஃபார் சம்திங்’ (‘nothing for something’)

 

மூன்று நகரங்களை – கொராசின், பெத்சாய்தா, கப்பர்நாகும் – கடிந்துகொள்கிறார் இயேசு. ‘கொராசின், பெத்சாய்தா’ என்னும் நகரங்கள் செய்த தவறு, ‘கண்டுகொள்ளாமை.’ ‘கப்பர்நாகும்’ செய்த தவறு ‘தவறான முதன்மை.’

 

தீர், சீதோன், சோதோம் நகரங்களோடு மேற்காணும் நகரங்களை ஒப்பிடுகிறார் இயேசு. இந்நகரங்கள் ‘கடவுளால் சபிக்கப்பட்ட நகரங்கள்’ எனக் கருதப்பட்டன. அவற்றைவிட சாபத்துக்கு உள்ளாகின்றன இயேசு குறிப்பிடுகிற மேற்காணும் நகரங்கள்.

 

மூன்று பாடங்கள்:

 

(அ) ‘செயலுக்கேற்ற பலன்’ – ‘சம்திங் ஃபார் சம்திங்’ – ஏற்புடையது. ‘செயலுக்கேற்ற பலன் இல்லாத நிலை’ – ‘நத்திங் ஃபார் சம்திங்’ ஏற்புடையதல்ல.

 

(ஆ) ஆன்மிக வாழ்வு பற்றிய கண்டுகொள்ளாமை, அலட்சியப் போக்கு ஆபத்தானது.

 

(இ) இயேசுவின் செய்தியைக் கேட்பதை விடுத்து, வானளாவ உயர்வதில் மும்முரமாக இருந்தது. தவறான முதன்மைகள் தவறான விளைவுகளுக்கு இட்டுச்செல்கின்றன.

 

இன்றைய முதல் வாசகத்தில், ‘சிரியா-எப்ராயிம்’ போர் என்னும் சூழலில், யூதா நாட்டு அரசர் ஆகாசு அச்சம் கொள்கிறார். அச்சத்தினால் அமைதி இழக்கிறார். அமைதி இழந்த நிலையில் அவசரப்பட்டு தவறான கூட்டணிக்கு முயற்சி செய்கிறார். உறுதியான உள்ளம் கொண்டிருக்குமாறு ஆகாசை அறிவுறுத்துகிற கடவுள், ‘உங்கள் நம்பிக்கையில் நிலைத்திராவிடில் நீங்களும் நிலைத்து நிற்க மாட்டீர்கள்!’ என அனைவரையும் எச்சரிக்கிறார்.

 

ஆண்டவரின் உடனிருப்பை மக்கள் உணர்கிறார்கள் என்றால், அதற்கேற்ற பதிலிறுப்பு அவர்களிடம் இருக்க வேண்டும்.

 

நிற்க.

 

எதிர்நோக்கின் திருப்பயணிகள் செயலுக்கேற்ற பலன் ஆற்றுகிறார்கள் (யூபிலி கி.பி. 2025, துணுக்கு 149).

 

அருள்திரு யேசு கருணாநிதி
மதுரை உயர்மறைமாவட்டம்
இரக்கத்தின் தூதுவர்

 


 

Share: