• 044-26428162
  • dbdeepagam@gmail.com
Logo

Sermons

இன்றைய இறைமொழி. வியாழன், 18 ஜூலை 2024. இயேசு தரும் இளைப்பாறுதல்!

Thursday, July 18, 2024   Fr. Yesu Karunanidhi   Archdiocese of Madurai

Daily Catholic Lectio இன்றைய இறைமொழி Ordinary Time

இன்றைய இறைமொழி
வியாழன், 18 ஜூலை 2024
பொதுக்காலம் 15-ஆம் வாரம் – வியாழன்
எசாயா 26:7-9, 12, 16-19. மத்தேயு 11:28-30

 

இயேசு தரும் இளைப்பாறுதல்!

 

‘நான் தூங்கி ரொம்ப நாளாச்சு ஃபாதர்!’

 

‘என் பிள்ளை தூங்குறதே இல்லை!’

 

‘எனக்குத் தூக்கம் வருவதே இல்லை!’

 

‘அவர் ஓய்வில்லாமல் உழைக்கிறார்!’

 

‘நான் ஓய்வெடுப்பதே இல்லை!’

 

நம்மைச் சுற்றி நிறைய புலம்பல்கள், ஏக்கங்கள், வருத்தங்கள், கவலைகள் நிற்கின்றன.

 

ஆண்டவராகிய கடவுள் படைப்பின் தொடக்தத்தில் ஆறு நாள்கள் உலகைப் படைத்தபின்னர், ஏழாம் நாளில் ஓய்ந்திருக்கிறார். ஓய்வு என்பது உழைப்புக்கான தயாரிப்பு தளமாக இருக்க வேண்டும் என்ற நிலையில், கடவுள் ஓய்வெடுக்கும் அந்த நாள் தொடங்கி பிந்தைய நாள்கள் மனிதர்கள் உழைப்பைக் கைக்கொள்கிறார்கள். ஓய்வுக்காக உழைப்பா, அல்லது உழைப்புக்காக ஓய்வா? என்னும் கேள்வி இன்னொரு பக்கம் எழுகிறது.

 

விவிலியத்தில், ஓய்வு என்பது கடவுள் தருகிற ஆசியாக இருக்கிறது. நாடோடிகளாகச் சுற்றித் திரிகிற இஸ்ரயேல் மக்கள் வாக்களிக்கப்பட்ட நாட்டை அடைந்தவுடன் தங்கள் ஓய்வைக் கண்டடைகிறார்கள். நீதித் தலைவர்கள் நூலில் போர்கள் இல்லாத சூழலில் நாடு ஓய்வு காண்கிறது. தாவீதின் எதிரிகளை அழிக்கிற கடவுள் அவருக்கு ஓய்வை வழங்குகிறார். ‘ஆண்டவர் தருகிற ஓய்வைக் கண்டடைய மாட்டீர்கள்’ என்பது ஒரு வகையான சாபம் அல்லது எச்சரிக்கையாக இருக்கிறது.

 

இன்றைய நற்செய்தி வாசகத்தில், ‘சுமை சுமைசுமந்து சோர்ந்திருப்பவர்களே, என்னிடம் வாருங்கள்!’ எனத் தம் சமகாலத்து மக்களை அழைக்கிற இயேசு, ‘நான் உங்களுக்கு இளைப்பாறுதல் (ஓய்வு) தருவேன்’ என்கிறார். அவருடைய நுகத்தை ஏற்றுக்கொண்டு அவரிடம் கற்றுக்கொள்வதே இளைப்பாறுதல் எனப் புரிந்துகொள்ளலாம்.

 

முதல் வாசகத்தில், தங்கள் செயல்பாடுகள், சிலைவழிபாடு, பிறழ்வுகள் போன்றவை பயனற்றவை என உணர்கிற இஸ்ரயேல் மக்கள், ‘நாங்கள் கருவுற்று வேதனையில் துடித்தோம். ஆனால், காற்றைப் பெற்றெடுத்தவர் போலானோ!ம்’ எனக் கடவுளை நோக்கிப் புலம்புகிறார்கள். இரவிலும் பகலிலும் ஆண்டவரை நாடுகிறார்கள்.

 

நாம் செய்கிற பல செயல்பாடுகளும் இப்படித்தான் இருக்கின்றன. கருவுற்று வேதனையில் துடிப்பது போல நம்மையே வருத்தி, துன்பம் ஏற்று செயல்பாடுகளைத் திட்டமிட்டுச் செய்கிறோம். ஆனால், விளைவு என்னவோ காற்றைப் பெற்றெடுப்பதுபோல இருக்கிறது.

 

இந்த நேரத்தில் இயேசுவை நோக்கிச் செல்தல் அவசியமாகிறது.

 

ஒரு நாளில் நாம் எத்தனை முறை வெளியே நோக்கி நகர்கிறோம் அல்லது ஓடுகிறோம்? இயேசுவை நோக்கிய நகர்தல் மட்டுமே நமக்கு இளைப்பாறுதல் தர முடியம்.

 

இன்றைய நாளில் ஓய்வை நாம் செய்ய வேண்டிய பணியாக அல்லது கடமையாக முன்னெடுப்போம்.

 

நாம் செய்கிற வேலைகளுக்காக ஓய்வைக் குறைத்துக்கொள்ள வேண்டாம். கனிவும் மனத்தாழ்ச்சியும் நிறைந்த உள்ளம், ‘என்னால் எல்லாவற்றையும் செய்து முடிக்கும் திறன் இல்லை’ என ஏற்றுக்கொண்டு, கடவுளிடம் சரணடைகிறது.

 

சரியான நேரத்திற்குச் தூங்கச் செல்வதே இன்றைய பெரிய முதன்மை.

 

நன்றாகத் தூங்கி எழுதலே நாம் செய்யும் முதல் உடற்பயிற்சி.

 

நிற்க.

 

எதிர்நோக்கின் திருப்பயணிகள் இளைப்பாறுதலையும் கிறிஸ்துவின் நுகத்தையும் கண்டுகொள்வர் (யூபிலி கி.பி. 2025, துணுக்கு 151).

 

அருள்திரு யேசு கருணாநிதி
மதுரை உயர்மறைமாவட்டம்
இரக்கத்தின் தூதுவர்

 


 

Share: