• 044-26428162
  • dbdeepagam@gmail.com
Logo

Sermons

இன்றைய இறைமொழி. ஞாயிறு, 28 ஜூலை 2024. உமது கையைத் திறந்து!

Sunday, July 28, 2024   Fr. Yesu Karunanidhi   Archdiocese of Madurai

Daily Catholic Lectio இன்றைய இறைமொழி Ordinary Time

இன்றைய இறைமொழி
ஞாயிறு, 28 ஜூலை 2024
பொதுக்காலம் 17-ஆம் ஞாயிறு
தாத்தா-பாட்டியர் மற்றும் வயதுநிறைந்தோர்க்கான 4-வது உலக நாள்
2 அரசர்கள் 4:42-44. எபேசியர் 4:1-6. யோவான் 6:1-15.

 

உமது கையைத் திறந்து!

 

இன்றைய ஞாயிற்றை தாத்தா-பாட்டியர் மற்றும் வயதுநிறைந்தோர் நாள் எனச் சிறப்பிக்கிறோம். அன்னை கன்னி மரியாவின் பெற்றோரும் இயேசுவின் தாத்தா-பாட்டியுமான புனிதர்கள் சுவக்கீம்-அன்னா திருநாளுக்கு நெருக்கமாக வருகிற ஞாயிற்றுக் கிழமையை தாத்தா-பாட்டியர் மற்றும் வயதுநிறைந்தோர் ஞாயிறு எனக் கொண்டாடுமாறு 2021-இல் அழைப்பு விடுத்தார். ‘முதிர் வயதில் என்னைத் தள்ளிவிடாதேயும்!’ (காண். திபா 71:9) என்னும் திருப்பாடலின் சொற்களை மையமாக வைத்து இந்த நாளுக்கான (2024) செய்தியை வழங்கியுள்ள திருத்தந்தை, முதுமையின் தனிமை, வெறுமை, விரக்தி, சோர்வு பற்றிச் சிந்திக்க அழைக்கிறார்.

 

திருத்தந்தையின் கருத்தின் பின்புலத்திலும், தாத்தா-பாட்டியர்-வயதுநிறைந்தோர் நாளின் பின்புலத்திலும் இன்றைய ஞாயிறு வாசகங்களைச் சிந்திப்போம்.

 

ஆண்டவருடைய பராமரிப்பைப் பற்றிப் பேசுகிற திருப்பாடல் (145) ஆசிரியர் – இன்றைய பதிலுரைப்பாடல் – ‘எல்லா உயிரினங்களின் கண்களும் உம்மையே நோக்குகின்றன. தக்க வேளையில் நீரே அவற்றுக்கு உணவளிக்கிறீர். நீர் உமது கையைத் திறந்து எல்லா உயிரினங்களின் விருப்பத்தையும் நிறைவேற்றுகிறீர்!’ எனப் பாடுகிறார்.

 

உமது கையைத் திறந்து‘ என்னும் சொல்லாடலை மையக்கருத்தாக எடுத்துக்கொள்வோம். ‘கையைத் திறத்தல்’ என்பது தாராள உள்ளம், தயார்நிலை, மற்றும் கொடுத்தல் ஆகியவற்றின் அடையாளமாக இருக்கிறது.

 

நற்செய்தி வாசகத்தில், இயேசு ஐந்து அப்பங்களையும் இரண்டு மீன்களையும் ஐயாயிரம் பேருக்கு வழங்கும் நிகழ்வை நாம் வாசிக்கிறோம். மாற்கு நற்செய்திப் பகுதியை (இரண்டாம் ஆண்டு வாசகம்) வாசித்துக்கொண்டே வந்தோம். இன்று தொடங்கி நான்கு வாரங்களுக்கு யோவான் நற்செய்தி 6-ஆம் அலகை வாசிக்கிறோம். இயேசு ஐயாயிரம் பேருக்கு உணவளிக்கும் நிகழ்வை நான்கு நற்செய்தியாளர்களும் பதிவுசெய்கிறார்கள்.

 

திபேரியக் கடல் என்னும் இடமும், பாஸ்கா விழா நெருங்கி வருகிறது என்னும் காலமும் நிகழ்வின் சூழலைக் காட்டுகின்றன. கலிலேயக் கடலுக்கு அருகில் உரோமைப் பேரரசர் திபேரியுவுக்கு என உருவாக்கப்பட்ட நகரம் ஒன்று இருந்ததால், கலிலேயக் கடலின் பெயர் திபேரியக் கடல் எனவும் வழங்கப்பட்டது. பாஸ்கா விழா இஸ்ரயேல் மக்கள் பெற்ற விடுதலை வாழ்வையும் ஆண்டவராகிய கடவுளின் வியத்தகு உடனிருப்பையும் யூதர்களுக்கு உணர்த்தியது. பேரரசரின் நகரத்துக்கு அருகில் மக்களுக்கு உணவு கொடுத்த இயேசு ஒரு பேரரசர் என்றும், புதிய இஸ்ரயேல் மக்களுக்கான விடுதலை வாழ்வைத் தருகிறவரும் இவரே என உணர்த்துவதற்காக, இடத்தையும் காலத்தையும் குறிப்பிட்டு எழுதுகிறார் யோவான்.

 

பிலிப்புவுக்கும் இயேசுவுக்குமான உரையாடலாகத் தொடங்குகிறது வல்ல செயல். ‘இவர்கள் உண்பதற்கு நாம் எங்கிருந்த அப்பம் வாங்காலம்?’ என்று பிலிப்பிடம் கேட்கிறார் இயேசு. அவரைச் சோதிப்பதற்காகவே இயேசு அவ்வாறு கேட்கிறார். ஏனெனில், கானாவூர் நிகழ்வில் இயேசு தண்ணீரைத் திராட்சை இரசமாக மாற்றி நிகழ்வு அவர்கள்மேல் நேர்முகமான தாக்கத்தை ஏற்படுத்துகிறது. இருந்தாலும் சீடர்கள் அதை மறந்துவிட்டார்கள். ஆகையால்தான், ‘இருநூறு தெனாரியத்துக்கு அப்பம் வாங்கினாலும் ஆளுக்கு ஒரு சிறு துண்டும் கிடைக்காதே’ என்கிறார் பிலிப்பு.

 

அந்திரேயா இன்னொரு நிலையில் தீர்வுகாண முயற்சி செய்கிறார்: ‘சிறுவன் ஒருவனிடம் ஐந்து அப்பங்களும் இரண்டு மீன்களும் உள்ளன.’ இருந்தாலும் ஐயம் கொள்கிறார்: ‘இத்தனை பேருக்கு இவை எப்படிப் போதும்?’

 

‘மக்களை அமரச் செய்யுங்கள்’ எனக் கட்டளையிடுகிறார் இயேசு. ‘அப்பகுதி முழுவதும் புல்தரையாய் இருந்தது’ என்று ஒரு குறிப்பைத் தருகிறார் யோவான். இதுவரை கடலையும் கரையையும் மலையையும் பார்த்துக்கொண்டிருந்தவர்கள் திடீரென தங்கள் முன்னால் இருந்த புல்தரையைக் காணத் தொடங்குகிறார்கள். இதுவே வல்ல செயலின் தொடக்கம்.

 

‘அப்பங்களை எடுத்து கடவுளுக்கு நன்றி செலுத்தி மக்களுக்குக் கொடுக்கிறார்’ இயேசு. நற்கருணையை ஏற்படுத்துகிற நிகழ்வில் பயன்படுத்தப்படுகிற சொற்களே இங்கும் பயன்படுத்தப்படுகின்றன. ‘அவர்களுக்கு வேண்டியமட்டும் கிடைத்தது … மிச்சமும் இருந்தது!’ – இவ்வாறாக, வல்ல செயல் நடந்தேறுகிறது. நிறைந்த வயிறுகளும் நிறைந்த கூடைகளுமே வல்ல செயல் நிகழ்ந்ததற்கான சான்றுகளாக அமைகின்றன.

 

வல்ல செயல் மூன்று நிலைகளில் நடக்கிறது:

 

ஒன்று, ‘நம்மால் இயலாது!’ – பிலிப்புவின் செயல்.

 

இரண்டு, ‘கொஞ்சம் சாத்தியம். ஆனால், எல்லாம் முடியாது!’ – அந்திரேயாவின் செயல்.

 

மூன்று, ‘எல்லாம் சாத்தியம்!’ – இயேசுவின் செயல்.

 

அதாவது, நம் கரங்களைத் திறப்பதால் அல்ல, மாறாக, கடவுள் தம் கரங்களைத் திறப்பதால்தான் – எடுத்து, நன்றி செலுத்தி, கொடுத்து – வல்லசெயல் நடந்தேறுகிறது!

 

இன்றைய முதல் வாசகத்திலும், ‘அப்பம் பலுகுதல் நிகழ்வு’ நடந்தேறுகிறது. வல்ல செயல்களின் இறைவாக்கினர் என அழைக்கப்படுகிற எலிசா, இருபது அப்பங்களைக் கொண்டு நூறு பேருக்கு உண்ணக் கொடுக்கிறார். ‘உண்டபின்னும் மீதி இருக்கும்’ என ஆண்டவர் சொன்னவாறே மீதி இருக்கிறது. தமக்கென வந்த அப்பங்களை மக்களுக்கென தம் கைகளை விரித்துக்கொடுக்கிறார் எலிசா.

 

எலிசா நிகழ்வின் பின்புலத்தில்தான், நற்செய்தி வாசகத்தின் இறுதியில், வயிறுகள் நிறையப்பெற்ற மக்கள், ‘உலகிற்கு வரவிருந்த இறைவாக்கினர் உண்மையில் இவரே!’ என அறிக்கையிடுகிறார்கள். இயேசுவை அரசராக்க முயற்சி செய்கிறார்கள். மக்களுக்கு உணவு தர வேண்டிய திபேரியுப் பேரரசரின் நகருக்கு அருகில், மக்களுக்கு உணவு தந்த பேரரசராக இருக்கிறார் இயேசு. இந்த நிகழ்வு பற்றி எழுதுகிற புனித அகுஸ்தினார், ‘என்னே மானிடத்தின் பரிதாபம்! தங்கள் ஆன்மாவுக்கு உணவு தர வந்த கடவுளை இயேசுவில் காண்பதை விடுத்து, தங்கள் வயிற்றுக்கு உணவு தரும் அரசரை அவரில் கண்டார்கள் மக்கள்!’ என எழுதுகிறார்.

 

‘ஆண்டவர் பொருட்டுக் கைதியாக இருக்கும் நான் உங்களைக் கெஞ்சிக் கேட்கிறேன்’ என்று எபேசு நகரத் திருஅவைக்கு எழுதுகிறார் பவுல் (இரண்டாம் வாசகம்). கைகள் கட்டப்பட்டுக் கிடக்கிற பவுல், கைகளைத் திறந்து ஒருவர் மற்றவரைப் பற்றிக்கொண்டு ஒருமைப்பாட்டுடன் வாழ அழைப்பு விடுக்கிறார். ‘கடவுள் எல்லாருக்கும் மேலானவர். எல்லார் வழியாகவும் செயலாற்றுபவர். எல்லாருக்குள்ளும் இருப்பவர்’ என்று கடவுளின் உள்ளிருத்தலை தம் திருஅவைக்கு எடுத்துக்காட்டி, கடவுளால்தான் அனைத்தும் இயங்குகின்றன என்னும் நம்பிக்கைப் பார்வையைத் தந்து, எதிர்நோக்கு என்னும் ஒளியை ஏற்றுகிறார்.

 

ஆண்டவராகிய கடவுள் நமக்குள் இருப்பதோடு, நம்மைச் சுற்றியிருக்கிற எல்லார் வழியாகவும் செயல்படுகிறார். ஆண்டவர் இவ்வாறாக தம் கரங்களைத் திறந்துகொண்டே இருக்கிறார்.

 

இன்றைய நாளின் பாடங்கள் எவை?

 

(அ) ஆண்டவரின் கரங்களிலிருந்து!

 

ஒரு சிறு குழந்தை தன் கைகளால் மிட்டாய்களை அள்ளினால் கொஞ்சமே அதன் கைகளுக்குள் சிக்குகிறது. ஆனால், கடைக்காரர் அள்ளிக்கொடுத்தால் அதன் கைகள் நிறைந்துவிடுகின்றன. நம் தெனாரியமும், நம் முயற்சியும் போதும் என நாம் நினைக்கும்போது நமக்குக் குறைவாகவே கிடைக்கிறது. ஆனால், அவரின் கைகள் போதும் என்று சரணடையும்போது நம் கைகளும் கூடைகளும் நிரம்பி வழிகின்றன. ஆண்டவர் தம் கைகளைத் திறந்து நம்மை வழிநடத்துகிறார் என்னும் நம்பிக்கைப் பார்வை பெற்றுக்கொள்வோம்.

 

(ஆ) நம் கரங்களை நீட்டி!

 

கடவுளின் கரங்களிலிருந்து பெற்றுக்கொள்கிற நாம், நம் கைகளையும் சற்றே திறப்போம். ‘உன் சகோதரன் ஒருவன் வறியவனாய் இருந்தால் … உன் கையை மூடிக்கொள்ளாதே! அவனுக்கு உன் கரங்களைத் தாராளமாகத் திறந்து, அவன் தேவைக்கேற்ப … கொடு!’ என அறிவுறுத்துகிறார் கடவுள் (காண். இச 15:7). நம் கரங்கள் வெறுமையாக இருந்தாலும், வெற்றுக் கரங்களையாவது நீட்டி மற்றவரைத் தூக்கி விட முயற்சி செய்வோம்.

 

(இ) முதியோரின் கரங்கள்!

 

‘உனக்கு முதிர்ந்த வயது ஆகும்போது நீ கைகளை விரித்துக் கொடுப்பாய்’ என்று பேதுருவிடம் கூறுகிறார் இயேசு (காண். யோவா 21:18). நம் தாத்தா-பாட்டியரும் வயதுநிறைந்தோரும் கைகளை விரித்துக்கொடுக்கிறார்கள். தங்கள் வாழ்க்கை முழுவதும் தங்களையே நமக்கு வழங்கிய அவர்கள் தங்களுடைய கையறுநிலையில் இருக்கும்போது நாம் அவர்களைத் தள்ளிவிட வேண்டாம். அவர்களின் தனிமை, சோர்வு, நோய், துன்பம் போன்றவற்றில் அவர்களுக்கு நாம் துணைநிற்போம். தங்களுடைய இயலாமையைத் தாங்கிக்கொள்ள முடியாத அவர்கள் நம் உடனிருப்பால் அனைத்தும் இயலும் என்னும் நம்பிக்கையைப் பெற்றுக்கொள்ளட்டும்!

 

‘ஆண்டவர்தாமே எல்லா உயிரினங்களின் விருப்பத்தையும் நிறைவேற்றுவாராக!’ (திபா 145).

 

அருள்திரு யேசு கருணாநிதி
மதுரை உயர்மறைமாவட்டம்
இரக்கத்தின் தூதுவர்

 


 

Share: