• 044-26428162
  • dbdeepagam@gmail.com
Logo

Sermons

இன்றைய இறைமொழி. சனி, 3 ஆகஸ்ட் ’24. ஏரோதுவின் அறிக்கை

Saturday, August 3, 2024   Fr. Yesu Karunanidhi   Archdiocese of Madurai

Daily Catholic Lectio இன்றைய இறைமொழி Ordinary Time

இன்றைய இறைமொழி
சனி, 3 ஆகஸ்ட் 2024
பொதுக்காலம் 17-ஆம் வாரம் – சனி
எரேமியா 26:11-16, 24. மத்தேயு 14:1-12

 

ஏரோதுவின் அறிக்கை

 

இயேசுவைப் பற்றிய ஏரோதுவின் ‘நம்பிக்கை அறிக்கையை’ இன்றைய நற்செய்தி வாசகத்தில் காண்கிறோம்: ‘இவர் திருமுழுக்கு யோவான்தான். இறந்த யோவானைக் கடவுள் உயிர்பெற்றெழச் செய்தார். இதனால்தான் இந்த வல்ல செயல்களை இவர் செய்கிறார்.’

 

இயேசுவைத் திருமுழுக்கு யோவானின் மறுபிறப்பு என ஏற்றுக்கொள்கிற ஏரோது, இயேசு ஆற்றும் வல்ல செயல்களுக்குக் காரணம் கடவுளின் துணை என அறிக்கையிடுகிறார்.

 

இந்த அறிக்கையைத் தொடர்ந்து யோவான் கொலைசெய்யப்படும் நிகழ்வைப் பதிவுசெய்கிறார் மத்தேயு. இந்நிகழ்வு மூன்று நிலைகளில் முக்கியத்துவம் பெறுகிறது:

 

(அ) கடவுளின் மனிதர்கள் சந்திக்க வேண்டிய எதிர்ப்பு. கடவுளின் பணி அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்படுகிற பணி அல்ல. மாறாக, நிறைய எதிர்ப்புகள் எழக் கூடிய பணி.

 

(ஆ) திருமுழுக்கு யோவானுக்கு நேரிட்டதே, இயேசுவுக்கும், தொடர்ந்து திருத்தூதர்களுக்கும் நேரிடும். திருமுழுக்கு யோவானின் கொலை இயேசுவின் கொலைக்கு முன்னோட்டமாக நடந்தேறுகிறது.

 

(இ) தீமை நன்மையை வெல்வதுபோலத் தெரிந்தாலும், நன்மை அடுத்தடுத்து தொடர்ந்துகொண்டே இருக்கும். ஏனெனில், திருமுழுக்கு யோவான் இறந்தவுடன் இயேசுவின் பணி தொடர்கிறது.

 

ஏரோதுவின் நம்பிக்கை அறிக்கை ஒரு பக்கம் இயேசுவின் மேன்மையை ஏற்றுக்கொள்வதுபோலத் தோன்றினாலும், இன்னொரு பக்கம், திருமுழுக்கு யோவானுக்குத் தான் நிகழ்த்தியதை, இயேசுவுக்கும் நிகழ்த்த முடியும் என்று அவர் மறைமுகமாகச் சொல்வதுபோல இருக்கிறது.

 

நம்பிக்கை அறிக்கையின் வெளிப்பாடு இங்கே சரணாகதி அல்ல, மாறாக, எதிர்ப்பு.

 

இன்றைய முதல் வாசகத்தில், இறைவாக்கினர் எரேமியாவின் சொற்கள் தங்களுக்கு ஏற்புடையதாக இல்லை என்பதால் அவற்றை ஏற்க மறுக்கிற எருசலேம் மக்கள் அவரைக் கொல்ல முயற்சி செய்கிறார்கள். சரியானதை அல்ல, மாறாக, தங்களுக்கு விருப்பமானதையே மக்கள் எப்போதும் கேட்க விரும்புகிறார்கள். எரேமியாவை மீட்குமாறு சாப்பானின் மகன் அகிக்காம் அவருக்குத் துணையாக நிற்கிறார்.

 

நிற்க.

 

ஆண்டவராகிய கடவுளைப் பற்றிய நம்பிக்கை அறிக்கை அவரை நோக்கியதாக இருக்க வேண்டுமே தவிர, நம்மை மையப்படுத்தியதாக இருக்கக் கூடாது என்று அறிவார் ‘எதிர்நோக்கின் திருப்பயணி.’ (யூபிலி கி.பி. 2025, துணுக்கு 164).

 

அருள்திரு யேசு கருணாநிதி
மதுரை உயர்மறைமாவட்டம்
இரக்கத்தின் தூதுவர்

 


 

Share: