• 044-26428162
  • dbdeepagam@gmail.com
Logo

Sermons

இன்றைய இறைமொழி. ஞாயிறு, 18 ஆகஸ்ட் ’24. இணைந்திருத்தல்

Sunday, August 18, 2024   Fr. Yesu Karunanidhi   Archdiocese of Madurai

Daily Catholic Lectio இன்றைய இறைமொழி Ordinary Time

இன்றைய இறைமொழி
ஞாயிறு, 18 ஆகஸ்ட் 2024
பொதுக்காலம் 20-ஆம் ஞாயிறு
நீதிமொழிகள் 9:1-6. எபேசியர் 5:15-20. யோவான் 6:51-58

 

இணைந்திருத்தல்

 

‘நானே விண்ணகத்திலிருந்து இறங்கி வந்த உணவு’ என்னும் இயேசுவின் பேருரை இன்றைய நற்செய்தி வாசகத்தில் தொடர்கிறது. ‘இணைந்திருத்தல்’ என்னும் புதிய கருத்துரு இங்கே அறிமுகம் செய்யப்படுகிறது. ‘இணைந்திருத்தல்’ என்பதை ‘தங்கியிருத்தல்’, ‘பற்றிக்கொள்தல்,’ ‘நிலைத்திருத்தல்’ என்றும் புரிந்துகொள்ளலாம். இணைந்திருத்தல் என்பது வெறுமனே இயேசுவின் திருமுன்னிலையில் நிற்றல் அல்ல, மாறாக, ஆழமான, நெருங்கிய உறவுகொண்டிருத்தல். இயேசுவோடு கொண்டுள்ள உறவு நமக்கு வளமும் நலமும் தருகிறது.

 

நீதிமொழிகள் நூலிலிருந்து எடுக்கப்பட்டுள்ள முதல் வாசகப் பகுதியில், ‘ஞானம்’ ‘பெண்ணாக’ உருவகம் செய்யப்படுகிறது. இந்தப் பெண் வீடு கட்டுகிறார், விருந்து சமைத்துப் பரிமாறுகிறார். ஞானத்தையும் மதிகேட்டையும் ஒருவர் தெளிந்து தேர்ந்து மதிகேட்டை ஒதுக்கிவிட்டு ஞானத்தைப் பற்றிக்கொள்ள வேண்டும். கிறிஸ்தியல் வாசிப்பில் இயேசுவே ஞானமாக இருக்கிறார். இயேசு வழங்கும் உணவு நற்கருணை. இயேசு என்னும் ஞானத்தை ஒருவர் தெரிந்துகொள்ள வேண்டும்.

 

இரண்டாம் வாசகத்தில், எபேசு நகரத் திருச்சபைக்கு அறிவுறுத்துகிற பவுல், ஆவியால் நிரப்பப்படுகிற நபர்கள் கொண்டிருக்க வேண்டிய மதிப்பீடுகளை முன்மொழிகிறார். இயேசுவில் இணைந்திருப்பது என்பது ஆவியில் இணைந்திருப்பது ஆகும்.

 

நற்செய்தி வாசகத்தில், தம் உடலையும் இரத்தத்தையும் உண்மையான உணவு என மொழிகிற இயேசு, தம்மோடு இணைந்திருக்குமாறு அழைக்கிறார்.

 

(அ) தொடர் செயல்முறை

 

‘என்னை உண்கிறவர்’ என மொழிகிறார் இயேசு. ‘உண்ணுதல்’ என்னும் செயல் தொடர்ந்து நடக்க வேண்டும். ஒவ்வொரு நாளும் நடக்கிற நிகழ்வாக நற்கருணை நிகழ்வு இருத்தல் வேண்டும்.

 

(ஆ) இறைவனோடு, பிறரோடு இணைதல்

 

கடவுளை நோக்கிய நம் இணைதல் ஒருவர் மற்றவரோடு இணைவதற்குத் தூண்ட வேண்டும்.

 

(இ) வலிமையும் மாற்றமும்

 

நற்கருணை ஆன்மிக வலிமை தருகிறது. நாம் இவ்வுலக வாழ்வில் செய்யக்கூடிய செயல்களை மேன்மைப்படுத்துவதற்கான ஆற்றலை நற்கருணை தருகிறது.

 

(ஈ) நற்கருணை வாழ்க்கை

 

நற்கருணை என்பது வெறும் கொண்டாட்டமாக அல்லாமல் வாழ்க்கையாக மாற வேண்டும். ‘நற்கருணை’ என்னும் சொல் ‘நன்றியறிதலையும்’ குறிக்கிறது. நன்றியறிதல்நிறை வாழ்க்கை அனைத்தையும் நேர்முகமாகப் பார்க்கிறது.

 

அருள்திரு யேசு கருணாநிதி
மதுரை உயர்மறைமாவட்டம்
இரக்கத்தின் தூதுவர்

 


 

Share: