• 044-26428162
  • dbdeepagam@gmail.com
Logo

Sermons

இன்றைய இறைமொழி. திங்கள், 16 செப்டம்பர் ’24. நானும் நாமும்

Monday, September 16, 2024   Fr. Yesu Karunanidhi   Archdiocese of Madurai

இன்றைய இறைமொழி
திங்கள், 16 செப்டம்பர் 2024
பொதுக்காலம் 24-ஆம் வாரம், திங்கள்
1 கொரிந்தியர் 11:17-26. லூக்கா 7:1-10

 

நானும் நாமும்

 

‘உபுந்த்து’ என்னும் ஆப்பிரிக்க சொல்லாடல் பற்றிக் கேள்விப்பட்டிருப்போம். ‘நான் இருக்கிறேன், ஏனெனில், நாம் இருக்கிறோம்’ என்பதே இச்சொல்லாடலின் பொருள். குழுமம் நம்மை முழுமைக்கு இட்டுச் செல்வதுடன் நாம் நலம் பெறவும் உதவுகிறது என எடுத்துச் சொல்கின்றன இன்றைய வாசகங்கள்.

 

(அ) வழிபாட்டிலும் வாழ்விலும் ஒன்றிப்பு

 

இன்றைய முதல் வாசகத்தில், கொரிந்து நகரத் திருஅவை நற்கருணைக் கொண்டாட்டத்துக்காகக் கூடி வரும் நேரத்தில் கொண்டிருக்கிற பிளவு மற்றும் பிரிவினை பற்றி அறிவுறுத்துகிறார் பவுல். நற்கருணை என்னும் அப்பம் அவர்களை ஒன்றிக்கிறது என்பதை அவர்கள் மறந்துவிட்டு, தங்களிடையே விளங்கிய சமூக, பொருளாதார வேறுபாடுகளை முன்மொழிந்து பிரிவினை பாராட்டினர். கிறிஸ்துவும் அவருடைய பாடுகளும் நம் சிந்தனையில் இருக்க வேண்டுமே தவிர, நம்மிடையே நிலவும் பிரிவுகள் அல்ல என அவர்களுக்கு எடுத்துரைக்கிறார் பவுலு;. மேலும், நற்கருணையை ஆண்டவர் ஏற்படுத்திய நிகழ்வு ஒரு குழும நிகழ்வே அன்றி, அது தனிப்பட்ட நபருக்கு வழங்கப்பட்டது அல்லது என்று எடுத்துரைத்து, நற்கருணையைக் கொண்டாடுகிற குழுமம் ஒன்றிப்புடன் திகழ வேண்டும் என அறிவுறுத்துகிறார்.

 

(ஆ) இரக்கமும் பரிந்து பேசுதலும்

 

இன்றைய நற்செய்தி வாசகத்தில் நாம் காணும் அறிகுறி, ‘தூரத்தில் நிகழ்த்தும் வல்ல செயல்’ என்னும் பிரிவுக்குள் வருகிறது. மற்ற நற்செய்தி நூல்களில் நூற்றுவர்தலைவன் தானே இயேசுவிடம் வருகிறார். ஆனால், லூக்கா நற்செய்தியாளர் சற்றே மாறுபட்டு யூதர்களில் சிலர் நூற்றுவர் தலைவருக்காகப் பரிந்து பேசுவதாக எழுதுகிறார். நூற்றுவர் தலைவன், யூதர்கள், இயேசு என குழுமம் விரிவடைகிறது. தனிப்பட்ட ஒருவருடைய நம்பிக்கை குழுமத்தை ஒன்றிப்பதுடன், குழுமத்தின் வழியாக நலமற்ற ஒருவர் நலம் பெறுகிறார். இரக்கமும் பரிந்து பேசுதலும் குழுமத்தில் நிகழும்போது தனிநபர் நலம் பெறுகிறார்.

 

(இ) ஒன்றிணைக்கும் நம்பிக்கை

 

நூற்றுவர் தலைவரின் நம்பிக்கையை இயேசு பாராட்டிப் பேசுகிறார். இயேசுவுடைய சொற்களின் வல்லமையை உணர்ந்தவராக இருக்கிறார் நூற்றுவர் தலைவர். அவருடைய நம்பிக்கை வழியாக யூதர்களுக்கும் புறவினத்தாருக்கும் இடையே இருந்த சுவர் உடைகிறது. நம்பிக்கை வரையறைகளைக் கடக்கிறது. ஒன்றிப்பு நோக்கி நம்மை நகர்த்துகிறது. நற்செயல் புரியவும் ஒருவர் மற்றவருக்குப் பணியாற்றவும் நம்மைத் தூண்டுகிறது நம்பிக்கை.

 

நிற்க.

 

குழுமத்தின் வழியாகவே தனிநபர் நலமும் வளமும் பெறுகிறார் என்று அறிந்தவர்களாக இருக்கிறார்கள் ‘எதிர்நோக்கின் திருப்பயணிகள்’. (யூபிலி கி.பி. 2025, துணுக்கு 200)

 

அருள்திரு யேசு கருணாநிதி
மதுரை உயர்மறைமாவட்டம்
இரக்கத்தின் தூதுவர்

 


 

Share: