• 044-26428162
  • dbdeepagam@gmail.com
Logo

Sermons

இன்றைய இறைமொழி. ஞாயிறு, 28 ஏப்ரல் 2024. தந்தைக்கு மாட்சி

Sunday, April 28, 2024   Rev. Fr. Yesu Karunanidhi   Archdiocese of Madurai

Daily Gospel இன்றைய இறைமொழி Easter Season Eastertide

இன்றைய இறைமொழி
ஞாயிறு, 28 ஏப்ரல் 2024
பாஸ்கா காலம் 5-ஆம் ஞாயிறு
திப 9:26-31. 1 யோவா 3:18-24. யோவா 15:1-8.

 

தந்தைக்கு மாட்சி

 

புது நன்மை பெறுவதற்கு முன்னர், ‘சின்ன குறிப்பிடம்’ அல்லது ‘புதிய குறிப்பிடம்’ வழியாக நாம் கற்ற மறைக்கல்வியில் முதலில் கேட்கப்படுகிற சில கேள்விகளில் ஒன்று, ‘கடவுள் நம்மை எதற்காகப் படைத்தார்?‘ ‘நாம் கடவுளை அன்பு செய்யவும், நம் செயல்கள் வழியாக கடவுளை மாட்சிப்படுத்தவும் அவர் நம்மைப் படைத்தார்’ என்று நாம் இக்கேள்விக்குப் பதில் சொன்னோம். நம் வாழ்வின் இலக்கு ‘கடவுளின் மாட்சி’ அல்லது ‘கடவுளை மாட்சிப்படுத்துவது’ என்று இருக்கிறது. புனித இரேனியு, ‘மனிதர்களின் மேலான வாழ்வே கடவுளின் மாட்சி’ என எழுதுகிறார். மலைப்பொழிவில் தம் சீடர்களை ‘உப்பு’, ‘ஒளி’ என அழைக்கிற இயேசு, ‘உங்கள் நற்செயல்களைக் கண்டு மனிதர்கள் உங்கள் விண்ணகத் தந்தையை மாட்சிப்படுத்துவார்கள்’ (காண். மத் 5:16) என எழுதுகிறார்.

 

இன்றைய நற்செய்தி வாசகத்தின் இறுதியில், ‘நீங்கள் மிகுந்த கனி தந்து என் சீடராய் இருப்பதே என் தந்தைக்கு மாட்சி அளிக்கிறது’ என இயேசு மொழியும் சொற்களை நம் சிந்தனைக்கு எடுத்துக்கொள்வோம். இந்த வாக்கியத்தில் மூன்று சொல்லாடல்கள் உள்ளன: (அ) மிகுந்த கனி தருதல், (ஆ) சீடராய் இருத்தல், (இ) தந்தைக்கு மாட்சி அளித்தல். இந்த மூன்றும் சாத்தியமாக வேண்டும் என்றால், அதற்குத் தேவை ஒற்றைச்சொல்தான்: ‘இணைந்திருத்தல்.’

 

(அ) மிகுந்த கனி தருதல்

படைப்பின் தொடக்கத்தில் ஆண்டவராகிய கடவுள் நம் முதற்பெற்றோருக்குக் கொடுக்கக்கூடிய முதல் கட்டளை (முதல் கதையாடலின்படி), ‘பலுகிப் பெருகி மண்ணுலகை நிரப்புங்கள்’ (தொநூ 1:28) என்பதே. மனிதர்கள் ஓய்ந்திருக்க வேண்டும் என்பதல்ல, மாறாக, தொடர்ந்து கனிதர வேண்டும் என்பதே கடவுளின் விருப்பமாக இருக்கிறது.

 

பழைய ஏற்பாட்டில், ‘கனி தருவதற்கு’ மூன்று வழிகள் தரப்பட்டுள்ளன: ஒன்று, மனிதர்கள் தங்களுடைய உழைப்பின் வழியாக. இதையே படைப்பின் இரண்டாம் கதையாடலில் வாசிக்கிறோம். படைப்பின் இரண்டாம் கதையாடலின்படி, ஆதாம் தோட்டத்தைப் பண்படுத்துபவராக இருக்கிறார் (காண். தொநூ 2:15). இரண்டு, திருச்சட்டத்தைக் கடைப்பிடிப்பதன் வழியாக. ‘திருச்சட்டத்தில் மகிழ்ச்சியுறுபவர், அதைப் பற்றி இரவும் பகலும் சிந்திப்பவர் நீரோடையோரம் நடப்பட்ட மரம் போல இருக்கிறார். பருவகாலத்தில் கனிதந்து என்றும் பசுமையாக இருக்கிறார்’ (காண். திபா 1:2-3). மூன்று, ஆண்டவருக்கு அஞ்சுவதன் வழியாக. ‘ஆண்டவருக்கு அஞ்சி அவர் வழிகளில் நடப்பவர் பேறுபெற்றோர்! … இல்லத்தில் உம் துணைவியார் கனிதரும் திராட்சைக் கொடிபோல் இருப்பார்’ (காண். திபா 128:1-3). ஆண்டவருக்கு அஞ்சி வாழ்தல் என்றால் ஞானத்தோடு வாழ்தல், நன்னடத்தையுடன் வாழ்தல்.

 

ஆக, உழைப்பு, திருச்சட்டம் கடைப்பிடித்தல், நன்னடத்தை வாழ்வு வழியாக ஒருவர் கனிதர இயலும் என்பது பழைய ஏற்பாட்டுப் புரிதலாக இருக்கிறது.

 

ஆனால், இன்றைய நற்செய்தி வாசகத்தில், புதிய வழி ஒன்றைக் கற்பிக்கிறார்: ‘இணைந்திருத்தல்.’ ‘ஒருவர் என்னுடனும் நான் அவருடனும் இணைந்திருந்தால் அவர் மிகுந்த கனி தருவார்’ என்கிறார் இயேசு (காண். யோவா 15:5). ஆக, இயேசுவைப் பொருத்தவரையில் கனிதருதல் என்பது அவசியம். இயேசுவோடு இணைந்திருத்தல் வழியாக நாம் கனிதர இயலும்.

 

(ஆ) சீடராக இருத்தல் (மாறுதல்)

யோவான் நற்செய்தியைப் பொருத்தவரையில் இயேசுவைப் பின்பற்றுதல் அல்லது அவருடைய சீடராதல் என்பது தனிப்பட்ட நபர் தன்னுடைய விருப்பத்துடன் எடுக்கிற ஒரு தெரிவு. அத்தெரிவு ஒருநாள் மட்டும் எடுத்தல் அல்ல, மாறாக, தொடர்ந்து நிலைத்திருத்தல். சீடராக ஒருவர் தினமும் உருவாகிக்கொண்டே இருக்க வேண்டும். நம் மனித வாழ்வு போல. நம்முடைய பிறப்பின் வழியாக அல்ல, அன்றாட உருவாக்கத்தின் வழியாகவே நாம் மனிதராக மாறுகிறோம்.

 

(இ) தந்தைக்கு மாட்சி அளித்தல்

இறுதி இராவுணவுப் பேருரையின் இறுதியில் இறைவேண்டல் செய்கிற இயேசு, ‘தந்தையே நேரம் வந்துவிட்டது. உம் மகன் உம்மை மாட்சிப்படுத்துமாறு நீர் மகனை மாட்சிப்படுத்தும்’ எனத் தொடங்குகிறார் (காண். யோவா 17:1). மேலும், ‘நான் செய்யுமாறு நீர் என்னிடம் ஒப்படைத்திருந்த வேலையைச் செய்து முடித்து நான் உம்மை உலகில் மாட்சிப்படுத்தினேன்’ என்கிறார் (காண். யோவா 17:4). வேலைகளை நிறைவேற்றியதன் வழியாக, அவற்றைத் தந்தையோடு இணைந்து நிறைவேற்றியதன் வழியாக தந்தைக்கு மாட்சி அளிக்கிறார் இயேசு.

 

மேற்காணும் மூன்று கூறுகளும் – ‘கனி தருதல்,’ ‘சீடராக இருத்தல்,’ ‘தந்தைக்கு மாட்சி அளித்தல்’ – நம் வாழ்வின் முப்பரிமாண இலக்கு என எடுத்துக்கொள்ளலாம். அல்லது ‘தந்தைக்கு மாட்சி அளித்தல்’ என்னும் ஒற்றை இலக்கு, ‘கனி தருதல்,’ ‘சீடராக இருத்தல்’ என்னும் நம் செயல்கள் வழியாக வெளிப்படுகிறது என்று பொருள் கொள்ளலாம்.

 

இணைந்திருத்தல் – உருவகமும் அழைப்பும்

‘நானே திராட்சைச் செடி’ எனத் தன்னை வெளிப்படுத்துகிற இயேசு, ‘நான் உங்களோடு இணைந்திருப்பதுபோல நீங்களும் என்னோடு இணைந்திருங்கள்’ எனத் தம் சீடர்களை அழைக்கிறார். யோவான் நற்செய்தியில், ‘இணைந்திருத்தல்’ (கிரேக்கத்தில், ‘மெனேய்ன்’) என்பது முதன்மையான கருத்துரு. நற்செய்தியின் தொடக்கத்தில், இயேசுவைப் பின்பற்றுகிற முதற்சீடர்கள் அவரோடு தங்கியிருக்கிறார்கள் (‘இணைந்திருக்கிறார்கள்’).

 

‘திராட்சைச் செடி’ என்பது இஸ்ரயேல் மக்களுக்கு மிகவும் அறிமுகமான ஓர் உருவகம் (காண். எசா 5:1-7, எரே 2:21அ). திராட்சைச் செடி இருத்தலின் நோக்கம் கனிதருவதற்கே. திராட்சைச் செடி கனிதர வேண்டுமெனில் கொடி திராட்சைச் செடியோடு இணைந்திருக்க வேண்டும்.

 

இயேசுவோடு இணைந்திருத்தல் என்றால் என்ன?

(அ) ஊட்டம் பெறுதல் – கொடி செடியிடமிருந்து தனக்கான ஊட்டத்தைப் பெற்றுக்கொள்வதுபோல, இயேசுவிடமிருந்து நாம் ஊட்டம் பெறுகிறோம்.

(ஆ) இயல்பு பெறுதல் – கொடியும் செடியும் வேறு வேறு என்றாலும் அவை இணைந்திருக்கும்போது இரண்டும் ஒன்று என ஆகிவிடுகின்றன. அதுபோலவே, இயேசுவோடு இணைந்திருக்கும்போது அவருடைய இயல்பை நாம் பெற்றுக்கொள்கிறோம்.

(இ) பொறுப்புணர்வு பெறுதல் – செடி தன் ஆற்றலையும் வளத்தையும் தனக்கென வைத்துக்கொள்வதில்லை. மாறாக, செடியின் நுனி வரை அது அவற்றைக் கடத்திக்கொண்டே இருக்கிறது. இயேசுவோடு இணைந்திருக்கும் நானும் அவரிடமிருந்து பெறுகிற ஆற்றலையும் வளத்தையும் தொடர்ந்து மற்றவர்களுக்கு வழங்கிக்கொண்டே இருத்தல் வேண்டும்.

 

இயேசுவோடு இணைந்திராவிட்டால் என்ன நிகழும்?

(அ) நாம் கனிதர இயலாது.

(ஆ) நாம் உலர்ந்து விடுவோம்.

(இ) உலர்ந்த பகுதிகள் செடிக்குப் பாரமாக இருப்பதால் அவை வெட்டி எறியப்படுகின்றன. அதுபோல நாமும் இயேசுவிடமிருந்து அகற்றப்படுவோம்.

 

இயேசுவோடு எப்படி இணைந்திருத்தல்?

(அ) இயேசுவின் சொற்களைக் கடைப்பிடித்தல் அல்லது அவற்றுக்குச் செவிசாய்த்தல். இன்றைய முதல் வாசகத்தில், பவுல் (சவுல்) மக்களிடமிருந்து எதிர்ப்புகளைச் சந்திக்கிறார். மக்கள் அவரைக் கண்டு அஞ்சியபோது, பவுலுக்காக நற்சான்று பகர்கிறார் பர்னபா. இவ்வாறாக, பவுல் தன் அழைப்பை மீண்டும் புதுப்பித்துக்கொள்ள உதவி செய்கிறார். இவர்கள் வழியாக திருச்சபை வளர்ந்து அமைதியில் திளைக்கிறது.

(ஆ) இயேசுவின் புதிய கட்டளையான அன்புக் கட்டளையைக் கடைப்பிடித்தல். இதையே இன்றைய இரண்டாம் வாசகத்தில், ‘கடவுளுடைய கட்டளைகளைக் கடைப்பிடிப்பவர் அவரோடு இணைந்திருக்கிறார். கடவுளும் அவரோடு இணைந்திருக்கிறார்’ என எழுதுகிறார் யோவான்.

 

வாழ்வியல் பாடங்கள்:

(அ) மிகுந்த கனி தருதல்

ஒரு மரம் கனி தரும்போது அது தன்னிடம் உள்ளதை தனக்கு வெளியே நீட்டுகிறது. தனக்கு வெளியே நகர்வதே கனி தருதல். நாம் பல நேரங்களில் நம் எண்ணங்களுக்குள் அல்லது தொடர் செயல்பாடுகளுக்குள் சிக்கி நிற்கிறோம். எண்ணங்கள் வழியாக, நம் செயல்கள் வழியாகவே நாம் கனிதர இயலும். நாம் எந்த வாழ்வியல் நிலையில், சூழலில் இருந்தாலும் நம் வாழ்விடத்தில் நாம் கனிதர இயலும். பிறர்நலன் நாடுதல், பிறருக்காகத் நம்மையே வழங்குதல் போன்றவற்றின் வழியாக நாம் கனிதர வேண்டும். கனிதருவதற்குப் பவுல் தயாராக இருந்தாலும், அவரைக் கண்டு மற்றவர்கள் அஞ்சுகிறார்கள், அவர்மேல் பொறாமை கொள்கிறார்கள், அவரை எதிர்க்கிறார்கள். ஆனால், துன்பத்திற்கான எதிர்த்தகைவு கொண்டிருக்கிறார்கள் சீடர்கள். எதிர்வரும் தடைகளையும் சவால்களையும் நாம் துணிந்து கடக்க வேண்டும். நாம் படைக்கப்பட்டதன் நோக்கம் கனிதருவதற்கே.

பெரிய பெரிய திட்டங்கள் வழியாக நாம் கனிதர வேண்டும் என்று காத்திருக்கத் தேவையில்லை. சின்னஞ்சிறிய செயல்கள் வழியாக – பூனைக்குட்டிக்கு பால் வைப்பதன் வழியாக, நம் மேசையை ஒழுங்குபடுத்துவதன் வழியாக, நம் அறையைச் சுத்தம் செய்வதன் வழியாக, தெருவில் நம்மைக் கடக்கும் ஒருவரைப் புன்னகையுடன் வாழ்த்துவதன் வழியாக, நமக்கு எதிராகச் செயல்பட்ட ஒருவரை மன்னிப்பதன் வழியாக என – நாம் கனிதர இயலும்.

கொஞ்சம் அல்ல, நிறைய, குலுங்கக் குலுங்கக் கனிதர வேண்டும் நாம்!

 

(ஆ) சீடராதல்

மாற்கு நற்செய்தியில் பன்னிருவரைத் தேர்ந்தெடுக்கிற இயேசு, அவர்கள் ‘தம்மோடு இருக்க வேண்டும்’ (காண். மாற் 3:14) என விரும்புகிறார். இயேசுவோடு இணைந்திருத்தலே முதன்மையான சீடத்துவம். மார்த்தா-மரியா நிகழ்விலும், இத்தகைய சீடத்துவத்தை முன்மொழிகிறார் இNயுசு (காண். லூக் 10). நாம் இயேசுவின் பக்தர்களாக அல்ல, மாறாக, அவருடைய சீடர்களாக மாறுதலே நாம் தேர்ந்துகொள்ள வேண்டியது. சீடர்களாக மாறுதல் என்பது தொடர்ந்து நற்செய்தியை அறிவித்தல் – முதல் வாசகத்தில் நாம் காணும் பவுல், பர்னபா போல.

 

(இ) தந்தைக்கு மாட்சி அளித்தல்

தன்னுடைய மகன் அல்லது மகள் நல்ல நிலைக்கு உயர்வதைக் காண்கிற தந்தை அவர்களைக் குறித்து மகிழ்ச்சி அடைகிறார். அவர்களுடைய நற்செயல்களும் மேன்மையான இருத்தலும் தந்தையின் மதிப்பை உயர்த்துகின்றன. தந்தைக்கு மாட்சி அளித்தல் என்பது புதல்வர், புதல்வியரின் பொறுப்பாக மாறுகிறது. நாம் எச்செயலை முன்னெடுத்தாலும், அதன் வழியாக கடவுள் மாட்சி பெறுகிறார் என்னும் எண்ணத்தில் அதை மேன்மையாகச் செய்ய வேண்டும். முப்பது மடங்கு, அறுபது மடங்கு அல்ல, மாறாக, நூறு மடங்கு கனி தருவதற்கு முயற்சி செய்ய வேண்டும். இதையே பவுல், ‘நீங்கள் செய்கிற அனைத்து வேலைகளையும் மனிதருக்காக அல்ல, ஆண்டவருக்காகவே செய்கிறீர்கள் என உணர்ந்து உளமாரச் செய்யுங்கள்’ (கொலோ 3:23) என அழைக்கிறார்.

 

இணைந்திருத்தல் என்பது செடிக்குச் சுமையாக மாறிவிடாதபடி, நாம் கனிதருவோம், சீடராவோம், தந்தைக்கு மாட்சி அளிப்போம்!

 

‘ஆண்டவரை நாடுவோர் அவரைப் புகழ்கிறார்கள். அவர்கள் இதயம் என்றும் வாழ்கிறது’ (காண். திபா 22:26)

 

அருள்திரு யேசு கருணாநிதி
மதுரை உயர்மறைமாவட்டம்
இரக்கத்தின் தூதுவர்

 


 

Share: