• 044-26428162
  • dbdeepagam@gmail.com
Logo

Sermons

இன்றைய இறைமொழி. வியாழன், 2 மே 2024. என் மகிழ்ச்சி

Thursday, May 2, 2024   Fr. Yesu Karunanidhi   Archdiocese of Madurai

Daily Gospel இன்றைய இறைமொழி Easter Season Eastertide

இன்றைய இறைமொழி
வியாழன், 2 மே 2024
பாஸ்கா காலம் 5-ஆம் வாரம் – வியாழன்
திருத்தூதர் பணிகள் 15:7-21. யோவான் 15:9-11

 

என் மகிழ்ச்சி

கிறிஸ்தவத்தையும் இயேசுவையும் நாம் பல நேரங்களில் தவறாகப் புரிந்துகொள்கிறோம். துன்பம், சிலுவை, முள், தவம், நோன்பு, தன்மறுப்பு, தற்கையளிப்பு என நமக்கு நாமே வருத்தம் வருவித்துக்கொள்கிறோம். குற்றவுணர்வு, பயம் நம்மை எப்போதுமே பீடித்துக்கொண்டிருக்கின்றன. ஆனால், கிறிஸ்தவத்தின், சீடத்துவத்தின், இயேசுவின் நோக்கம் இன்றைய நற்செய்தி வாசகத்தில் மிகத் தெளிவாக முன்மொழியப்படுகிறது:

 

‘என் மகிழ்ச்சி உங்களுள் இருக்கவும், உங்கள் மகிழ்ச்சி நிறைவு பெறவுமே இவற்றை உங்களிடம் சொன்னேன்!’

 

மேற்காணும் அருள்வாக்கியத்தை, ‘உங்கள் மகிழ்ச்சியை நிறைவு செய்யுமாறு என் மகிழ்ச்சி உங்களுள் இருக்கும்!’ எனப் புரிந்துகொள்வோம்.

 

உலகம் தர இயலாத அமைதியைத் தருகிற இயேசு, கலக்கத்தையும் அச்சத்தையும் நம்மிடமிருந்து போக்குகிற இயேசு, ‘நிறைவற்ற நம் மகிழ்ச்சியை நிறைவு செய்கிறார்.’

 

‘இன்பம், நிறைவற்ற மகிழ்ச்சி, நிறைவான மகிழ்ச்சி’ என்று ‘மகிழ்ச்சி’ மூன்று பரிமாணங்களைக் கொண்டிருக்கிறது. இன்பம் உடல் சார்ந்தது, நிலையற்றது. நிறைவற்ற மகிழ்ச்சியோ கலக்கத்தையும் அச்சத்தையும் தன்னகத்தே கொண்டிருக்கிறது. நிறைவான மகிழ்ச்சி கடவுள்மையமாக இருக்கிறது.

 

நிறைவான மகிழ்ச்சிக்கான வழியை இயேசுவே காட்டுகிறார்: ‘என் கட்டளைகளைக் கடைப்பிடித்து என் அன்பில் நிலைத்திருங்கள்’. இயேசுவின் சொற்களுக்குச் செவிமடுப்பதும், அவருடைய அன்பில் நிலைத்திருப்பதும் மகிழ்ச்சிக்கான வழிகள். ‘நிலைத்திருப்பது’ என்றால் ‘தங்குவது.’

 

இயேசுவின் இச்சொற்கள் சீடர்களுக்கும் நமக்கும் எதிர்நோக்கு தருவதாகவும், இயேசுவோடு இணைந்திருப்பதால் பயன் உண்டு என்ற நிறைவைத் தருவதாகவும், இயேசுவின் சொற்களை வாழ்ந்து பார்ப்பதற்கான அழைப்பாகவும் இருக்கிறது. அன்பு, பிரமாணிக்கம், அர்ப்பணம் நிறைந்த வாழ்வு நமக்கு மகிழ்ச்சி தருகிறது.

 

இன்றைய முதல் வாசகத்தில், சீடர்களின் மகிழ்ச்சியை அவர்கள் பிரச்சினையைக் கையாளுகிற விதத்தில் பார்க்கிறோம். புறவினத்தார்கள் கிறிஸ்தவ நம்பிக்கையைத் தழுவும்போது விருத்தசேதனம் செய்துகொள்ள வேண்டுமா என்ற கேள்வியை பவுலும் பர்னபாவும் யாக்கோபிடம் கொண்டு வருகிறார்கள். திருத்தூதர்களை ஒருங்கிணைக்கிற யாக்கோபு எருசலேம் சங்கத்தில் மற்றவர்களோடு கலந்துரையாடுகிறார். ‘புறவினத்தாருக்கத் தொல்லை கொடுத்தல் ஆகாது!’ என்று முடிவு எடுக்கப்படுகிறது. தங்களை மையப்படுத்தாமல், மற்றவர்களை மையப்படுத்தி எடுக்கிற முடிவாக இது இருப்பதோடு, மற்றவர்களின் மகிழ்ச்சியையும் கருத்தில் கொள்கிறார்கள் திருத்தூதர்கள்.

 

இதுவே இயேசு தருகிற நிறைவான மகிழ்ச்சி. இந்த மகிழ்ச்சியைப் பெற்றிருக்கிற ஒருவர் மற்றவரின் மகிழ்ச்சியையும் நலனையும் நிறைவையும் நாடுகிறார்.

 

நாம் மகிழ்ச்சியாக இருப்பதே கடவுளின் திருவுளம். ஆக, மகிழ்ந்திருப்பதில் சிக்கனம் வேண்டாம், நான் மகிழ்ச்சியாக இருந்தால் எனக்கு ஏதாவது நடந்துவிடுமோ என்ற அச்சமும் வேண்டாம், குற்றவுணர்வும் வேண்டாம்.

 

நிற்க.

 

‘நம் எதிர்நோக்கே நமக்கு மீட்பு தருகிறது,’ என்கிறார் புனித அகுஸ்தினார். (யூபிலி கி.பி. 2025, துணுக்கு 87)

 

அருள்திரு யேசு கருணாநிதி
மதுரை உயர்மறைமாவட்டம்
இரக்கத்தின் தூதுவர்

 


 

Share: