இன்றைய இறைமொழி
சனி, 1 பிப்ரவரி ’25
பொதுக்காலம் 3-ஆம் வாரம் – சனி
எபிரேயர் 11:1-2, 8-19. லூக்கா 1:69-70. மாற்கு 4:35-41
அக்கரைக்குச் செல்வோம்!
இறையாட்சி பற்றிய உவமைகள் முடிந்து இறையாட்சியில் நிகழ்த்தப்படுகிற வல்ல செயல்கள் பற்றிய பதிவைத் தொடங்குகிறார் மாற்கு. காற்றையும் கடலையும் கடிந்துகொள்கிறவராக இயேசுவைத் தன் குழுமத்துக்கு முன்மொழிகிற மாற்கு, ‘இவர் யாரோ?’ என்னும் கேள்வியை தன் வாசகரும், நாமும் கேட்குமாறு நம்மைத் தூண்டுகிறார்.
‘அக்கரைக்குச் செல்வோம்!’ என்னும் இயேசுவின் சொற்களோடு நிகழ்வு தொடங்குகிறது. ‘அக்கரைக்குச் செல்வதற்கான’ அழைப்பு விடுக்கிற இயேசு அக்கரை வரை தங்களோடு வருகிறார் என்பதை மறந்துவிடுகிறார்கள் சீடர்கள். கடலில் எழுகிற அலைகளும் இயேசுவின் தூக்கமும் அவர்களை அச்சத்துக்கு உள்ளாக்குகின்றன. தங்களை வாழ வைக்க வந்தவரிடம், ‘போதகரே, நாங்கள் சாகப் போகிறோமே!’ என அச்சத்துடன் அலறுகிறார்கள்.
கடலைக் கடிந்துகொள்கிற இயேசு, அதே தொனியில் தம் சீடர்களையும் கடிந்துகொள்கிறார்: ‘ஏன் அஞ்சுகிறீர்கள்? உங்களுக்கு இன்னும் நம்பிக்கை இல்லையா?’
நிகழ்வின் முரண் என்னவெனில், கடலின் பேரலைகள் கண்டு அச்சம் கொண்டவர்கள், இயேசு கொணர்ந்த அமைதியைக் கண்டு ‘பேரச்சம்’ கொள்கிறார்கள். இயேசு கொண்டுவந்த அமைதி அவர்களுக்கு பேரச்சம் தருகிறது. ஏனெனில், இந்த அமைதியில்தான், ‘இயேசு யார்?’ என்னும் கேள்விக்கு அவர்கள் ஒவ்வொருவரும் விடை தர வேண்டும்.
இந்த நிகழ்வு நமக்குத் தரும் ஆன்மிகப் பாடங்கள் எவை?
(அ) ‘அக்கரைக்குச் செல்வோம், வாருங்கள்!’
ஒரே இடத்தில் நின்று உவமைகளால் பேசிக்கொண்டிருந்த இயேசு, தனிமையில் அவர்களுக்கு அவற்றை விளக்கிக்கொண்டிருந்த இயேசு, தாமாக முன்வந்து, ‘அக்கரைக்குச் செல்வோம், வாருங்கள்!’ அழைக்கிறார். இக்கரையின் பாதுகாப்பு மற்றும் சௌகரியத்தை உடைக்கிறார் இயேசு. தாம் ஒரு போதகர் மட்டுமல்ல என்பதை அவர்களுக்கு உணர்த்த விரும்புகிறார் இயேசு. நம் வாழ்வு தேக்கநிலையை அடைவதுபோல இருந்தால், நம் உறவுநிலைகளில் நாம் சுவர்களை மோதுவது போன்று உணர்ந்தால், நம் உள்ளத்தில் ஒலிக்கிற அவருடைய குரலைக் கேட்டுப் புறப்படுவது நலம்.
(ஆ) ‘போதகரே, சாகப் போகிறோமே!’
இறப்பை விடக் கொடியது இறப்பு பற்றிய அச்சம். நாளையைவிடக் கொடியது நாளையைப் பற்றிய அச்சம். படகுக்கு உள்ளே இருந்த இயேசுவைச் சீடர்கள் மறந்துவிட்டு, படகுக்கு வெளியேயிருந்து வந்த அலைகளைப் பார்க்கிறார்கள் சீடர்கள். தூங்குகிற தங்கள் போதகர், எழுந்து வீசுகிற அலைகளைவிடப் பெரியவர் என்பதை மறந்து விடுகிறார்கள். ‘அக்கரைக்குச் செல்வோம்!’ என்று அழைத்தவர் அக்கரை வரை தங்களை வழிநடத்துவார்கள் என்பதை மறந்துவிடுகிறார்கள். பல நேரங்களில் நாம் கடந்து வந்த பாதையில் நாம் அனுபவித்த கடவுளின் உடனிருப்பை மறந்துவிட்டு, எதிர்காலம் பற்றி அஞ்சுகிறோம்.
(இ) ‘இவர் யாரோ?’
இரைச்சல்நிறைந்த உலகில் நாம் வாழ்கிறோம். சற்று நேரம் அமைதியும் நமக்கு அச்சம் தருகிறது. அலைகள் தந்த அச்சத்தைவிட அமைதி தந்தை அச்சம் சீடர்களுக்கு நெருடலாக இருக்கிறது. ‘இவர் யாரோ?’ என்னும் கேள்விக்கு அவர்கள் விடை தேடத் தொடங்குகிறார்கள். இறையனுபவம் என்பது நம் ஒவ்வொருவருடைய தனிப்பட்ட அனுபவம். இந்த அனுபவத்தில் நாம் ஒவ்வொருவரும், ‘இவர் யார்?’ என்னும் கேள்விக்கு விடை தர வேண்டும். நாம் தருகிற அந்த விடையில் நம் வாழ்வின், இருத்தலின் வரையறையும் இருக்கிறது.
இன்றைய முதல் வாசகத்தில், ‘நம்பிக்கை என்பது நாம் எதிர்நோக்கி இருப்பவை கிடைக்கும் என்னும் உறுதி. கண்ணுக்குப் புலப்படாதவை பற்றிய ஐயமற்ற நிலை’ என்று எழுதுகிறார் ஆசிரியர். கண்ணுக்குப் புலப்படாத கரையை நம் கையருகே கொண்டுவருகிறவர் கடவுள். அவருடைய கை பற்றுதலே நம்பிக்கை.
சக்கரியாவின் பாடலை (லூக் 1) இன்றைய பதிலுரைப் பாடலாக வாசிக்கிறோம். தம் மக்களைத் தேடி வந்து விடுவித்த ஆண்டவரைப் போற்றுகிறார் சக்கரியா. நம் வாழ்வின் அலைகள் நடுவே வந்து நம்மை விடுவிக்கிறார் இயேசு.
இன்று பிறக்கிற புதிய மாதத்தில் – பிப்ரவரி – புறப்படுவோம் அவரோடு அக்கரைக்கு!
அருள்திரு யேசு கருணாநிதி
மதுரை உயர்மறைமாவட்டம்
இரக்கத்தின் தூதுவர்
Share: