இன்றைய இறைமொழி
புதன், 8 ஜனவரி ’25
திருக்காட்சிப் பெருவிழாவுக்குப் பின் புதன்
1 யோவான் 4:11-18. திபா 72. மாற்கு 6:45-52
அச்சம் அகற்றும் அன்பு
இன்றைய முதல் வாசகத்தில் அன்பின் தன்மை பற்றி தன் குழுமத்திற்கு எழுதுகிற யோவான், ‘அன்பில் அச்சத்திற்கு இடமில்லை. மாறாக, நிறை அன்பு அச்சத்தை அகற்றிவிடும். ஏனெனில், அச்சத்தில் தண்டனை உணர்வு அடங்கியுள்ளது. அச்சம் கொண்டுள்ளவரிடம் அன்பு முழு நிறைவு அடையாது’ என்கிறார்.
அன்பில் திசைகள் உண்டு. மேலிருந்து கீழ்நோக்கி வரும் அன்பில் அச்சம் இல்லை. அப்பா தன் மகள்மேல் காட்டும் அன்பில் மகள் பற்றிய அச்சம் அப்பாவுக்கு இல்லை. ஆசிரியர் ஒருவர் தன் மாணவர்மேல் காட்டும் அன்பில் மாணவர் பற்றிய அச்சம் ஆசிரியருக்கு இல்லை. ஆனால், கீழிருந்து மேல்நோக்கிச் செல்லும் அன்பில் அச்சம் உண்டு. வயதில், செல்வத்தில், அதிகாரத்தில், பலத்தில் என்னைவிட ஒருவர் மிகுதியாக இருக்க அவரை நான் அன்பு செய்யும்போது அங்கே அச்சம் வருகிறது. நான் மற்றவரை திருப்திப்படுத்த வேண்டும், மற்றவர் மனம் நோகாமல் பார்த்துக்கொள்ள வேண்டும், மற்றவரை எதிர்த்துப் பேசக்கூடாது என என்னை அறியாமலேயே பல எண்ணங்கள் கூடி நின்று என் அச்சத்துக்குத் தூபமிடுகின்றன. கடவுள் நம்மை அன்பு செய்கிறபடியால், கடவுளை நோக்கிய நம் அன்பில் அச்சம் இருக்கத் தேவையில்லை.
நற்செய்தி வாசகத்தில், இயேசு தம் சீடர்களின் அச்சம் களைகின்றார்.
கடலில் தனியாகத் தண்டு வலிக்கப் போராடிய சீடர்கள், இறைவேண்டல் முடித்துவிட்டுத் தனியே நடந்து வந்த இயேசுவைப் பார்த்து, ‘பேய்!’ என குரல் எழுப்புகின்றனர். இரவெல்லாம் இறைவனோடு இணைந்து உரையாடிய கடவுளின் மகன் தனியாக நடந்து வருவதைக் காண்கிற சீடர்கள் அவரை ‘பேய்’ என அழைக்கிறார்கள். மற்றவர்களை நாம் பார்க்கிற உணர்வில் நாம் எப்படிப்பட்டவர் என்பதே வெளிப்படுகிறது.
சீடர்களைக் கடந்துசெல்ல விரும்பிய இயேசு, படகில் ஏறுகிறார். படகைத் தாண்டிச் செல்ல விரும்புகிற இயேசு படகில் ஏறிக்கொள்கிறார்.
இருள், நடுக்கடலில் தனிமை, புயல், பேரலைகள் ஆகிய காரணிகளால் அச்சம் கொள்கிறார்கள் சீடர்கள். ஆனால், ‘துணிவோடிருங்கள். நான்தான், அஞ்சாதீர்கள்!’ என்னும் சொற்களும் இயேசுவின் உடனிருப்பும் சீடர்களின் அச்சத்தை அகற்றுகிறது.
கடவுளின் உடனிருப்பு நம் அச்சம் களைகிறது. ஆனால், கடவுளின் வார்த்தையை நாம் மக்களுக்கு விளக்கிச் சொல்வதும், கடவுளின் திருஅவையின் சட்டம் என்று நாம் உருவாக்கியவற்றைக் கொண்டு நம்பிக்கையாளர்களை வழிநடத்துவதும், கடவுளுக்குரிய இடத்திலிருந்து மக்களை வழிநடத்த வேண்டியவர்கள் பணிசெய்வதை விடுத்து, அதிகாரம் செலுத்துவதும் மக்களுக்கு அச்சம் தருகிறது.
அச்சம் அகற்றுகிற கடவுளையே அச்சுறுத்துகிறவராக நாம் மற்றவர்களுக்கு வழங்குகிறோம்.
இன்று நாம் வாழ்வில் நாம் கொண்டிருக்கிற அச்சங்கள் எவை? நேர்முக அச்சங்கள் பயனுள்ளவை. உயிர் போய்விடும் என்னும் அச்சம் உயிரைப் பேணிக்காக்கும் எச்சரிக்கையை வழங்குகிறது. நாளை கடனாளி ஆகிவிடுவோம் என்னும் அச்சம் இன்று சேமிக்கத் தூண்டுகிறது. எதிர்மறையான அச்சங்கள் பயனற்றவை. அடுத்தவர் நம்மைப் பற்றி என்ன நினைப்பார் என்னும் அச்சம், அடுத்தவர்களைத் திருப்திப்படுத்த வேண்டும் என்னும் அச்சம் போன்றவை, நம் பிரச்சினைகள் நம்மைத் தோற்கடித்துவிடும் என்னும் அச்சம், நாம் வெற்றி பெற முடியாது என்னும் அச்சம், தாழ்வு மனப்பான்மை, பாகுபாடு ஆகியவற்றால் எழும் அச்சம் ஆகியவை பயனற்றவை. இவற்றை நாம் களைய வேண்டும்.
ஏதோ ஒரு நிலையில் அச்சம் கொண்டிருக்கிற மற்றவரைப் பார்த்து, ‘துணிவோடிருங்கள்!’ என்று நாம் சொல்லும்போது அச்சம் அகற்றும் ஆண்டவராக மாறுகிறோம்.
அருள்திரு யேசு கருணாநிதி
மதுரை உயர்மறைமாவட்டம்
இரக்கத்தின் தூதுவர்
Share: