இன்றைய இறைமொழி
சனி, 25 ஜனவரி ’25
பவுலின் மனமாற்றம், விழா
திருத்தூதர் பணிகள் 22:3-16. திருப்பாடல் 117. மாற்கு 16:15-18
அடித்தள அனுபவமும் மாற்றமும்
இன்றைய நாளில் பவுலின் மனமாற்றப் பெருவிழாவைக் கொண்டாடுகிறோம். பவுலின் அழைத்தல் அல்லது மனமாற்ற நிகழ்வு மூன்று விதங்களில் கொடுக்கப்பட்டுள்ளது: (அ) கலாத்திய நகரத் திருஅவைக்கு எழுதுகின்ற பவுல், தாயின் கருவில் இருக்கும்போதே கடவுள் தன்னை அழைத்ததாகக் கூறுகின்றார் (காண். கலா 1:15). (ஆ) தமஸ்கு நகருக்குச் செல்லும் வழியில் கடவுள் பவுலைத் தடுத்தாட்கொண்டதாகப் பதிவு செய்கின்றார் லூக்கா (காண். திப 9, 22, 26). (இ) பர்னபா வழியாக பவுல் கிறிஸ்தவத்தைத் தழுவுகின்றார். திருத்தூதர்களுக்குப் பவுலை அறிமுகப்படுத்துகின்ற பர்னபா அவருடைய வாழ்க்கை மாற்றத்திற்கு உதவி செய்கின்றார்.
பவுலின் மனமாற்றத்தை மூன்று வகை மாற்றங்கள் எனப் புரிந்துகொள்ளலாம்: (அ) பெயர் மாற்றம், (ஆ) பாதை மாற்றம், (இ) பணி மாற்றம்.
(அ) பெயர் மாற்றம்
‘சவுல்’ (‘கேட்கப்பட்டவர்’) என்னும் பெயர் ‘பவுல்’ (‘சிறியவர்’) என்று மாறுகிறது. தன் படிப்பு, பரிசேய அடையாளம், குடும்பப் பின்புலம், சமயப் பெரியோர்களுடன் நெருக்கும் என்று ‘பெரியவராக’ இருந்தார் சவுல். தலைமைக்குருவாலும் கேட்கப்பட்டவராக இருந்தார். மனமாற்ற நிகழ்வில் ‘கேட்கப்பட்டவர்’ (சவுல்) என்று இருந்தவர், ‘கேட்பவராக’ மாறுகிறார். பெரியவர் என்னும் தன் நிலையை ‘சிறியவர்’ என மாற்றிக்கொள்கிறார். கிறிஸ்துவுக்காக அனைத்தையும் குப்பை எனக் கருதிய அவர் கடவுளே பெரியவர் என்று நாம் கற்றுக்கொள்ள அழைக்கிறார்.
(ஆ) பாதை மாற்றம்
தமஸ்கு நகர் நோக்கிச் செல்கிற பவுல், தமஸ்குவுக்குள் அழைத்துச் செல்லப்படுகிறார். பாதை தொடர்ந்தாலும் பயணம் மாறுகிறது. கிறிஸ்தவர்களைக் கட்டுக்குள் வைக்கச் சென்ற பவுல், கிறிஸ்துவால் கட்டப்படுகிறார். தலைமைக்குருவையும் ஆட்சியாளர்களையும் நோக்கிப் பயணம் செய்த பவுல் கிறிஸ்துவை நோக்கிப் பயணிக்கத் தொடங்குகிறார். தானே மேற்கொண்ட பயணங்களை விடுத்து, தகைசால் பெரியவர்களின் – அனனியா போன்றோர் – துணையோடும் உடனுழைப்பாளர்களின் துணையோடும் பயணம் செய்கிறார்.
(இ) பணி மாற்றம்
‘எப்படியும் கிறிஸ்து அறிவிக்கப்படுகிறார்’ (பிலி 1:18) என்று சொல்கிற பவுல், தன்னுடைய பணியால் மட்டுமல்ல, மற்றவர்களுடைய பணியாலும் மகிழ்கிறார். பணியின் மையமாகக் கிறிஸ்து இருக்கிறார். கிறிஸ்துவின் பணியை நீட்சியடையச் செய்கிறார் பவுல். நாம் செய்கிற பணியே நம் பெரும்பான்மை அடையாளமாக இருக்கிறது. ‘திருத்தூதர்’ என்னும் பெயரை அடையாளமாகவும் பணியாகவும் கொண்டார் பவுல்.
தமஸ்கு நிகழ்வில் (முதல் வாசகம், திப 22) பவுல் எழுப்பும் இரண்டு கேள்விகள் நமக்குச் சவால்களாக அமைகின்றன:
(அ) ‘ஆண்டவரே, நீர் யார்?’
‘ஆண்டவரே’ என்பதற்கு ‘கிரியே’ என்னும் கிரேக்கச் சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது. ‘கிரியே’ என்பதை ‘ஐயா’ அல்லது ‘ஆண்டவர்’ என்று மொழிபெயர்க்கலாம். ‘சவுலே, சவுலே, ஏன் என்னைத் துன்புறுத்துகிறாய்?’ என்னும் கேள்வி பவுலுக்கு ஆச்சர்யம் தந்திருக்கலாம். தன் பெயரை அறிந்த இவர் யார்? என்னும் கேள்வியே, ‘நீர் யார்?’ என்று கேட்கத் தூண்டுகிறது. ‘கேட்கப்பட்டவர்’ என்று அறியப்பட்ட நீ, நான் சொல்வதைக் கேள் என்னும் நிலையில் இருக்கிறது ஆண்டவரின் உரையாடல். ‘நீ துன்புறுத்தும் இயேசு நானே’ என்று தன்னை வெளிப்படுத்துகின்றார் ஆண்டவர். நாம் ஆண்டவரைப் பற்றி நிறையக் கேள்விப்பட்டுள்ளோம். நம் பெற்றோர், ஞானப் பெற்றோர், மறையுரைகள், மறைக்கல்வி வகுப்புகள் போன்றவை, ‘ஆண்டவர் யார்?’ என்பதை நமக்குக் கற்றுக் கொடுத்துள்ளன. ஆனால், இதைக் கடந்து, ‘ஆண்டவரே, நீர் யார்?’ என்று நாம் அவரைப் பார்த்து எழுப்பும் கேள்விதான் நம் மனமாற்றம் அல்லது வாழ்வு மாற்றத்தின் முதற்படியாக இருக்க முடியும். விவிலியம் வாசிக்கும்போது, இறைவேண்டல் செய்யும்போது, நம் தனிமையில், மௌனத்தில், ‘ஆண்டவரே, நீர் யார்?’ என்று நாம் கேட்கும் ஒற்றைக் கேள்வி, நம் குதிரைகளிலிருந்து நம்மைத் தள்ளிவிடும்.
‘ஆண்டவரே, நீர் யார்?’ என்னும் கேள்வியில், ‘ஆண்டவரே, நான் யார்?’ என்னும் கேள்வியும் ஒளிந்திருக்கிறது. ஏனெனில், ‘ஆண்டவரை’ வரையறுக்கத் தொடங்குகிற நொடியில் நாம் நம்மையே வரையறுக்கத் தொடங்குகிறோம்.
‘நான் யார்?’ என்னும் கேள்வி, ‘நான் யாருக்காக?’ என்று நீள்கிறது. இவ்விரண்டு கேள்விகளும் ஒன்றையொன்று நிரப்புபவை.
(ஆ) ‘ஆண்டவரே, நான் என்ன செய்ய வேண்டும்?’
இந்தக் கேள்வி திப 22-இல் மட்டுமே உள்ளது. பவுலுடைய தயார்நிலை நம்மை இங்கே வியக்கவைக்கிறது. அவர் பெற்ற அனுபவம் எந்த அளவுக்கு தாக்கத்தை ஏற்படுத்தியது என்றால், அவர் உடனடியாக, ‘நான் என்ன செய்ய வேண்டும்?’ என்று சரணடைகின்றார். பவுல் என்ன செய்ய வேண்டும் என்பது அனனியா வழியாக அவருக்குச் சொல்லப்படுகின்றது: ‘பிற இனத்தவருக்கும் அரசருக்கும் இஸ்ரயேல் மக்களுக்கும் முன்பாக எனது பெயரை எடுத்துச் லெ;ல நான் தேர்ந்தெடுத்துக் கொண்ட கருவியாய் இருக்கிறார்’ (திப 9:15). தன் திட்டத்தை ஒதுக்கி வைத்து விட்டு இறைத்திட்டத்தைத் தழுவிக்கொள்கின்றார் பவுல். தன் பயணத்தின் இலக்கை மாற்றுகின்றார்.
தங்கள் படகையும் வேலையாள்களையும் உடனே விட்டுவிட்டு இயேசுவின் பின்னால் சென்ற முதற்சீடர்கள்போல, சுங்கச் சாவடியிலிருந்து உடனே எழுந்து சென்ற மத்தேயு போல, ‘உடனடியாக இயேசுவின் சீடராக மாறுகிறார்’ பவுல். நம் திட்டம் ஒதுக்கி இறைத்திட்டம் பற்ற நமக்குக் கற்றுக்கொடுக்கிறார். தலைமைச் சங்கத்தின் படைவீரராக இருந்தவர் கிறிஸ்துவின் படைவீரராக மாறுகிறார்.
‘படைவீரர் எவரும் பிழைப்புக்காகப் பிற அலுவல்களில் ஈடுபட மாட்டார். தம்மைப் படையில் சேர்த்துக்கொண்டவருக்கு அவர் உகந்தவராயிருக்க வேண்டும் அன்றோ!’ (2 திமொ 2:4). கிறிஸ்துவுக்கு உகந்தவராக இருத்தலைப் பற்றிக்கொள்கிறார் பவுல்.
பவுலின் மனமாற்ற நிகழ்வு அவருடைய வாழ்க்கையைப் புரட்டிப் போட்ட அடித்தள அனுபவம். மோசேக்கு எரியும் முட்புதரில் கிடைத்த அனுபவம், மரியாவுக்கு வானதூதர் கபிரியேல் அறிவித்தபோது கிடைத்த அனுபவம், இயேசுவுக்கு யோர்தான் அனுபவம், அன்னை தெரசாவுக்கு சேரி அனுபவம், மகாத்மா காந்திக்கு இரயில் நிலைய அனுபவம், அண்ணல் அம்பேத்கருக்கு வகுப்பறை அனுபவம் என அனுபவங்கள் நம் வாழ்வைப் புரட்டிப் போடுகின்றன.
அடித்தள அனுபவம் பெற்ற ஒருவர் மீண்டும் தன் பழைய வாழ்க்கைக்குத் திரும்புவதில்லை.
நம் குதிரைகளிலிருந்து நாம் விழத் தொடங்கும்போது கிறிஸ்துவில் நாம் எழுகிறோம்.
அருள்திரு யேசு கருணாநிதி
மதுரை உயர்மறைமாவட்டம்
இரக்கத்தின் தூதுவர்
Share: