• 044-26428162
  • dbdeepagam@gmail.com
Logo

Sermons

அடிமைத்தளை என்னும் நுகம். இன்றைய இறைமொழி. திங்கள், 14 அக்டோபர் ’24

Monday, October 14, 2024   Fr. Yesu Karunanidhi   Archdiocese of Madurai

Daily Catholic Lectio இன்றைய இறைமொழி Ordinary Time

இன்றைய இறைமொழி
திங்கள், 14 அக்டோபர் ’24
பொதுக்காலம் 28-ஆம் வாரம், திங்கள்
கலாத்தியர் 4:22-24, 26-27, 31-5:1. லூக்கா 11:29-32

 

அடிமைத்தளை என்னும் நுகம்

 

கலாத்திய நகரத் திருஅவைக்கு நற்செய்தி அறிவிக்கிறார் பவுல். ஆனால், அவர்கள் சிறிது காலத்தில் இன்னொரு நற்செய்தியைப் பற்றிக்கொள்கின்றனர். அதாவது, போலிப் போதகர்களின் போதனைகளால் கவரப்பட்டு அதன் பின் செல்கின்றனர். மேலும், சட்டம் சார்ந்த செயல்களுக்கு, குறிப்பாக, விருத்தசேதனம் செய்வதற்கு முக்கியத்துவம் கொடுக்கின்றனர். இதைக் கடிந்துகொள்கின்ற பவுல், ‘கிறிஸ்து அடிமை நிலையிலிருந்து நம்மை விடுவித்து நமக்கு உரிமை வாழ்வை அளித்துள்ளார். அதில் நிலைத்திருங்கள். மீண்டும் அடிமைத்தளை என்னும் நுகத்தை உங்கள்மேல் ஏற்றுக்கொள்ளாதீர்கள்’ என அறிவுறுத்துகின்றார்.

 

நம் வாழ்க்கையை நாம் பல நேரங்களில் அடிமை என்ற நிலையில்தான் வாழ்கிறோம்.

 

அடிமை போல 24 மணி நேரங்கள் வேலை செய்கிறோம். ஆனால், அந்த வேலையில் எஞ்சியது சோர்வும் விரக்தியுமே.

 

அடிமை போல உறவு நிலைகளில் ஒருவர் மற்றவரை மகிழ்ச்சிப்படுத்தவும், திருப்திப்படுத்தவும் நினைக்கிறோம். ஆனால், அதில் எஞ்சுவது எதிர்பார்ப்பும் ஏமாற்றமுமே.

 

ஆன்மீக வாழ்விலும், நாம் கடவுளின் பிள்ளைகள் என்பதை மறந்து, பிள்ளைகளுக்குரிய உரிமையை மறந்து, அடிமைகள் அல்லது பணியாளர்கள் போல நிறைய பக்தி முயற்சிகள் மேற்கொண்டு அவரைத் திருப்திப்படுத்த நினைக்கிறோம்.

 

தனிநபர் உறவு வாழ்விலும், நம் பணிகளிலும், ஆன்மீக உறவிலும் கட்டின்மையோடு (சுதந்திரத்தோடு) வாழ்வது எப்படி?

 

புனித பவுல் இரண்டு உருவகங்கள் வழியாக இதை நமக்கு உணர்த்துகிறார்.

 

முதல் உருவகம், ஆகார். அடிமைப் பெண்ணாகிய ஆகாரின் வழியாக ஆபிரகாம் பெற்றெடுத்த மகன் மனித இயல்பின்படி பிறந்தவன். இங்கே, ‘என்னால் முடியும்’ என்ற நிலையில் ஆகார் ஆபிரகாமுடன் இணைகிறாள்.

 

இரண்டாம் உருவகம், சாரா. சாராவின் வழியாக ஆபிரகாம் பெற்றெடுத்த மகன் வாக்குறுதியின் பயனாய்ப் பிறந்தவன். இங்கே, ‘அவரால் எல்லாம் முடியும்’ என்ற நிலையில் சாரா ஆபிரகாமுடன் இணைகிறார்.

 

‘என்னால் முடியும்,’ ‘என்னால்தான் எல்லாம்’ என்ற நிலையில் நாம் அடிமைத்தனத்தில் இருக்கிறோம்.

 

‘எல்லாம் அவரால்,’ ‘அவரால்தான் எல்லாம்’ என்ற சரணாகதியில் நாம் விடுதலை பெறுகிறோம்.

 

இன்று, நான் என்னைக் கட்டி வைத்துள்ள, அல்லது நானே என்னைக் கட்டிக்கொண்ட அடிமைத்தளைகளை எண்ணிப் பார்த்து அவற்றிலிருந்து விடுபடுதல் நலம்.

 

இன்றைய நற்செய்தி வாசகத்தில் (காண். லூக் 11:29-32), இயேசு, ‘யோனா’ மற்றும் ‘சாலமோன்’ உருவகங்கள் வழியாகத் தன்னை மேன்மையானவர் என முன்வைக்கிறார். இறைவனின் திருவுளத்துக்கு முதல் முறை கீழ்ப்படியாமல், இரண்டாம் முறையே கட்டாயத்துடன் கீழ்ப்படிந்தார் யோனா. இயேசுவோ தொடக்கமுதல் தந்தையின் திருவுளத்தின்படி வழிநடந்தார். சாலமோன் ஆண்டவராகிய கடவுளிடம் ஞானத்தை வேண்டிப் பெற்றார். இயேசுவோ கடவுளின் ஞானமாகவே தொடக்கமுதல் விளங்கினார். ஆக, யோனா, சாலமோன் ஈர்த்தவர்களைவிட இயேசு ஈர்ப்பவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும். ஆனால், இயேசுவின் சமகாலத்து மக்கள் யோனாவை விடப் பெரியவரான, சாலமோனைவிடப் பெரியவராகத் திகழ்கிற அவரை ஏற்றுக்கொள்ள மறுக்கிறார்கள்.

 

நிற்க.

 

‘எதிர்நோக்கின் திருப்பயணிகள்’ வாழ்வியல் அடிமைத்தளைகளைக் களைய முயற்சி செய்கிறார்கள். (யூபிலி கி.பி. 2025, துணுக்கு 224)

 

அருள்திரு யேசு கருணாநிதி
மதுரை உயர்மறைமாவட்டம்
இரக்கத்தின் தூதுவர்

 


 

Share: