இன்றைய இறைமொழி
திங்கள், 17 பிப்ரவரி ’25
பொதுக்காலம் 6-ஆம் வாரம் – திங்கள்
தொடக்கநூல் 4:1-15, 25. திருப்பாடல் 50. மாற்கு 8:11-13
அடையாளம் கேட்பதேன்?
இன்றைய நற்செய்தி வாசகத்தில் இயேசுவின் சமகாலத்துப் பரிசேயர்கள் வந்து அவரோடு வாதாடுகிறார்கள். அடையாளம் ஒன்று கேட்கிறார்கள். இயேசு அடையாளம் தர மறுக்கிறார். முதல் வாசகத்தில், காயின் கொல்லப்படாமல் இருக்குமாறு ஆண்டவராகிய கடவுள் அவர்மேல் அடையாளம் இடுகிறார்.
அடையாளம் என்றால் முதலில் ஒரு குறியீடு. காணக்கூடிய அந்தக் குறி காண இயலாத ஒன்றை நோக்கி நம் எண்ணத்தைத் திருப்புகிறது. எடுத்துக்காட்டாக, ஒரு நாட்டின் கொடி என்பது ஓர் அடையாளம். அந்தக் கொடியைப் பார்க்கிற ஒருவர் ‘காண இயலாத’ நாட்டை அல்லது நாட்டின் எல்கையைக் காண்கிறார். எளிதாகப் புரிந்துகொள்வதற்கு அடையாளங்கள் பயன்பட்டாலும், அடையாளங்கள் தங்களிலேயே வலுவற்றவை. ஏனெனில், இந்தியக் கொடியின் நிறங்கள் மற்றும் அமைப்பு பற்றி அறியாத வெளிநாட்டவர் ஒருவருக்கு அந்தக் கொடி எதையும் குறிப்பதில்லை. அவரைப் பொருத்தவரையில் அவர் காண்பது வண்ணங்கள் பூசப்பட்ட சிறு துணி அது! அவ்வளவுதான்.
இயேசுவே ஓர் அடையாளம் என்பதை மறந்துவிடுகிறார்கள் அவருடைய எதிரிகள். இயேசுவின் போதனை, வல்ல செயல்கள், அவருடைய தனிப்பட்ட வாழ்க்கை முறை அனைத்துமே அவர் யார் என்பதை அடையாளப்படுத்தவே செய்கின்றன. அவற்றை அடையாளங்களாகப் பார்ப்பதை விடுத்து, இயேசுவை நம்புவதற்hக வானிலிருந்து இன்னோர் அடையாளம் – ஒரு குரல் அல்லது வெளிச்சம் – கேட்கிறார்கள். இயேசு அவர்களுக்கு அடையாளம் வழங்க மறுக்கிறார். இப்படித்தான் இயேசு சோதனகளை எதிர்கொள்கிறார். இயேசு ஒரு வேளை அடையாளம் ஏதாவது கொடுத்திருந்தால், அவர்கள் இயேசுவைக் கேலி செய்து வழிநடந்திருப்பார்கள்.
நம்மால் அனைத்தையும் செய்ய இயலும் என்றாலும், நாம் சில நேரங்களில் செயலாற்றாமல் இருக்க வேண்டும் எனக் கற்பிக்கிறது இந்த நிகழ்வு. சோதனையை வெல்வதற்கான வழி அதற்கு ‘இல்லை!’ எனச் சொல்வதுதான். மேலும், உள்ளார்ந்த கட்டின்மை அல்லது உள்மனச் சுதந்திரம் பெற்றிருக்கிற ஒருவரே, ‘இல்லை!’ எனச் சொல்ல முடியும். அடையாளம் காட்டி நம்பிக்கையாளர்களை ஈர்க்க இயேசு முயற்சி செய்திருந்தால் அவரை ஒரு மாய வித்தைக்காரர் என்று சொல்லியிருப்பார்கள் அவருடைய சமகாலத்தவர்.
முதல் வாசகத்தில், காயின் சோதனையில் விழுகிறார். தன் சகோதரர் ஆபேலின் காணிக்கை ஏற்றுக்கொள்ளப்பட்டுத் தன்னுடையது நிராகரிக்கப்பட்டவுடன் அவர்மேல் கோபம் கொள்கிறார் காயின். கோபம் பொறாமைக்கும், பொறாமை கொலைக்கும் இட்டுச் செல்கிறது. தன் சகோதரனுக்கு தான் நிகழ்த்திய கொலை தனக்கு நேருமோ என நினைக்கும்போது அவர் அச்சம் கொள்கிறார். தான் இரத்தம் சிந்திய நிலத்திலிருந்து தப்பி ஓடும் நாடோடியாக இருக்கிறார். ஆண்டவர் காயின்மேல் இடும் ஓர் அடையாளம் அவரைக் காப்பாற்றுகிறது.
உள்மனச் சுதந்திரம் அல்லது கட்டின்மை நாம் இன்று கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்.
அருள்திரு யேசு கருணாநிதி
மதுரை உயர்மறைமாவட்டம்
இரக்கத்தின் தூதுவர்
Share: