• 044-26428162
  • dbdeepagam@gmail.com
Logo

Sermons

அனைவரும் உயிருள்ளவர்களே. இன்றைய இறைமொழி. சனி, 23 நவம்பர் ’24.

Saturday, November 23, 2024   Fr. Yesu Karunanidhi   Archdiocese of Madurai

Daily Catholic Lectio இன்றைய இறைமொழி Ordinary Time

இன்றைய இறைமொழி
சனி, 23 நவம்பர் ’24
பொதுக்காலம் 33-ஆம் வாரம், சனி
திருவெளிப்பாடு 11:4-12. திருப்பாடல் 144. லூக்கா 20:27-40

 

அனைவரும் உயிருள்ளவர்களே

 

‘வாழும் கடவுளின் மக்களாக இருக்கும் நாம் வாழ்வுக்குரிய காரணிகளை என்றும் தழுவிக்கொள்ள முன்வர வேண்டும்.’

 

உயிர்த்தெழுதலை மறுக்கும் சதுசேயர்கள் இயேசுவிடம் கேள்வி ஒன்றைக் கேட்கின்றனர். இறந்தோரின் உயிர்ப்பைக் கேலிசெய்வது போல இருக்கிறது அவர்களுடைய கேள்வி: ‘… அப்படியானால், உயிர்த்தெழும்போது அவர் எழுவருள் யாருக்கு மனைவி ஆவார்?’

 

சதுசேயர்கள் இயேசுவின் சமகாலத்தில் விளங்கிய நான்கு குழுக்களில் முதன்மையானவர்கள். இவர்கள் ஆலயத்தைத் தங்கள் பொறுப்பில் வைத்திருந்தனர். தலைமைக்குருக்கள் அனைவரும் சதுசேயர்களாகவே இருந்தனர். அரசியல் மற்றும் பொருளாதாரத் தளங்களிலும் இவர்களுடைய கை ஓங்கியிருந்தது. இவர்கள் எபிரேய விவிலியத்தின் முதல் ஐந்து நூல்களை மட்டுமே இறைநூல்களாக ஏற்றுக்கொண்டனர். ஆகையால்தான், இயேசு அவர்களுக்கு விளக்கம் சொல்லும்போது விடுதலைப் பயண நூலிலிருந்து மேற்கோள் காட்டுகின்றார். வானதூதர்கள், ஆவிகள் போன்றவற்றின் மேல் இவர்களுக்கு நம்பிக்கை இல்லை. இறந்தோர் உயிர்த்தெழுதல் மற்றும் இறப்புக்குப் பின்னர் வாழ்வு ஆகியவற்றை இவர்கள் மறுத்தனர்.

 

இவர்கள் எழுப்பும் கேள்வி, ‘லேவிரேட் திருமணம்’ என்னும் பின்புலத்தில் உள்ளது. லேவிரேட் திருமண முறைப்படி, கணவர் தன் மனைவிக்கு மகப்பேறு அளிக்காமல் இறந்துவிடுவார் எனில், அவருடைய தம்பி அப்பெண்ணை மணந்து மகப்பேறு அளிக்கலாம். அப்படி அளிக்கும் மகப்பேறு இறந்த கணவருக்குரிய மகப்பேறு என்று கருதப்படும். ஆண்கள் விதையிடுபவர்கள், பெண்கள் விதையேற்பவர்கள் என்றும், ஆண்களின் வாரிசு காப்பாற்றப்பட வேண்டும் என்றும், குழந்தைப் பேறு என்பது இறைவனின் ஆசி என்பதால் எப்படியாவது இறையாசியைத் தக்க வைத்துக்கொள்ள வேண்டும் என்றும் நிலவிய அன்றைய சிந்தனைச் சூழலை இத்திருமணம் குறித்துக்காட்டுகிறது.

 

இயேசு எப்படி விடையளிக்கின்றார்?

 

(அ) திருமணம் செய்துகொள்வதில்லை

 

திருமணம் செய்துகொள்தல் என்பது வாரிசு உருவாக்கத்திற்கே. யாரும் இறப்பதில்லை என்ற நிலை வந்தவுடன் வாரிசு எதற்கு? குழந்தை எதற்கு? எனக் கேட்கின்றார் இயேசு. ஆக, இறப்புக்குப் பின்னர் உள்ள வாழ்வு நீடித்த வாழ்வு. மறுபடியும் இறப்பு என்பது அங்கே இல்லை.

 

(ஆ) வானதூதரைப் போல இருப்பார்கள்

 

வானதூதருடைய எந்தப் பண்பு இங்கே முன்மொழியப்படுகிறது என்பது நமக்குத் தெரியவில்லை. ஆனால், பாலினத்தையும் உடலையும் தாண்டியிருப்பவர்கள் வானதூதர்கள் என்னும் பொருளில் எடுத்துக்கொள்ளலாம்.

 

(இ) கடவுளின் மக்களே

 

அவர்கள் கடவுளின் வாரிசுகளாக இருப்பார்கள். நிரந்தரத்தில் இருப்பார்கள். என்றும் வாழ்வார்கள். ஏனெனில், ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு போன்ற குலமுதுவர்கள் இறந்தாலும், அவர்கள் கடவுளில் வாழ்கின்றனர். அவர் வாழ்வோரின் கடவுள்.

 

மேற்காணும் கேள்வி-பதில் நமக்குச் சொல்லும் செய்தி என்ன?

 

இறப்பு என்ற எதார்த்தம்தான் நம் வாழ்வுக்குப் பொருள் தருகிறது. இறப்பு என்ற ஒன்று இருப்பதால்தான் நாம் வாழ்க்கையை பொருளுடனும், வேகமாகவும், நன்றாகவும் வாழ முயற்சி செய்கின்றோம். இறப்புக்குப் பின் உள்ள வாழ்வு நமக்கு எதிர்நோக்கைத் தருகிறது. எல்லாம் மண்ணோடு மண்ணாகப் போகிறது என்றால், யாரும் எதற்கும் முயற்சி செய்ய மாட்டார்கள். கல்லறையையும் தாண்டிய வாழ்வு ஒன்று உள்ளது என்பதே நம்மைப் புதிய முயற்சிகளுக்கும், மதிப்பீடுநிறை வாழ்வுக்கும் உந்தித் தள்ளுகிறது.

 

நிற்க.

 

‘எதிர்நோக்கின் திருப்பயணிகள்’ வாழ்வுக்குரிய காரணிகளைத் தழுவிக்கொள்கிறார்கள் (யூபிலி கி.பி. 2025, துணுக்கு 256).

 

அருள்திரு யேசு கருணாநிதி
மதுரை உயர்மறைமாவட்டம்
இரக்கத்தின் தூதுவர்

 


 

Share: