இன்றைய இறைமொழி
சனி, 2 நவம்பர் 2024
சாலமோனின் ஞானம் 3:1-9. உரோமையர் 6:3-9. யோவான் 6:37-40
இறந்த நம்பிக்கையாளர் அனைவர் நினைவு
அனைவரும் என்னிடம் வருவர்!
‘இப்போது நடந்துகொண்டிருப்பவர்களே, உங்கள் காலடிகளை நினைவில்கொள்ளுங்கள். உங்கள் காலடிகளில் உங்கள் கடைசிக் காலடியை நினைவில்கொள்ளுங்கள்!’
தாம் கல்லறைத் தோட்டம் ஒன்றில் கண்ட இந்த வாசகத்தை மேற்கோள் காட்டி, 2021-ஆம் ஆண்டு இறந்தோர் நினைவுத் திருப்பலியில் மறையுரை ஆற்றினார் திருத்தந்தை பிரான்சிஸ். இப்போது நடந்துகொண்டிருக்கும் நம் அனைவருக்கும் இறுதிக் காலடி ஒன்று உண்டு. அந்த இறுதிக் காலடியை எடுத்து வைத்தவர்களை இன்று நினைவுகூர்ந்து இறைவேண்டல் செய்கிறோம். இந்த நாளில் நம் இறுதிக் காலடியை நினைத்து நம் வாழ்வைத் தகவமைத்துக்கொள்ள விழைகிறோம்.
இறந்த நம்பிக்கையாளர் அனைவரையும் நினைவுகூர்ந்து அவர்களுக்காக இறைவேண்டல் செய்யவும், துன்புறும் நிலை (உத்தரிக்கிற நிலை) ஆன்மாக்கள் நம் இறைவேண்டலாலும் திருப்பலியாலும் இறைவனின் இளைப்பாற்றியைக் காணும்படி அவர்களை நோக்கி நம் எண்ணங்களையும் கண்களையும் திருப்ப நம்மை அழைக்கிறது நம் தாய்த் திருஅவை. விவிலியத்தில், இறந்தவர்களுக்காக இறைவேண்டல் செய்வதற்குப் பணம் திரட்டுகிறார் யூதா (காண். 2 மக்கபேயர் 12). வாழ்கிற ஒருவர் இறந்த ஒருவருக்காகத் திருமுழுக்குப் பெறும் வழக்கமும் இருந்தது (காண். 1 கொரி 15).
(அ) ‘சாவின் இருள்சூழ் பள்ளத்தாக்கு’ (திபா 23:4). ஆண்டவரை ஆயர் என அழைக்கிற தாவீது, தன் வாழ்வில் தான் உணர்ந்த துன்பங்கள் எல்லாம் பள்ளத்தாக்குப் பயணம்போல இருந்தது என்றும், அந்தப் பள்ளத்தாக்கின் இருள் சாவின் இருள்போல இருந்தது எனவும் மொழிகிறார். ஒளி புகமுடியாத அந்த இருள் அனைத்தையும் நம் கண்களிலிருந்து மறைத்துவிடுகிறது.
(ஆ) ‘மேய்ப்பனின் கூடாரம் நெசவாளனின் பாவும்’ (எசா 38:12). எசேக்கியா அரசரின் புரிதல் இது. மேய்ச்சல் நிலங்களில் கூடாரம் அமைக்கிற மேய்ப்பர்கள் தங்கள் பணி முடிந்ததும், அக்கூடாரத்தைப் பெயர்த்துச் செல்வர். நெசவு நெய்பவர்கள் பாவில் உள்ள ஒரு நூல்சுற்று முடிந்ததும் பாவை அகற்றுவர். பணி முடிந்தவுடன் பயணம் உறுதி.
(இ) ‘தறி’ (காண். எசா 38:13. யோபு 7:6). ‘தறியிலிருந்து அவர் என்னை அறுத்தெறிகிறார்’ என்கிறார் எசேக்கியா. ‘என் நாள்கள் தறியின் ஓடுகட்டையிலும் விரைந்தோடுகின்றன’ எனப் புலம்புகிறார் யோபு. மனித வாழ்க்கையின் வேகமும் நிலையாமையும் இங்கே அடிக்கோடிடப்படுகின்றன.
(ஈ) ‘போர்’ (காண். சஉ 8:8). ‘தன் சாவு நாளைத் தள்ளிப் போடவும் எவனால் இயலாது. சாவெனும் போரினின்று நம்மால் விலக முடியாது. பணம் கொடுத்தும் தப்ப முடியாது’ என்கிறார் சபை உரையாளர். பேச்சு வார்த்தையால் நிறுத்த முடியாத போரைப் போன்றது இறப்பு. இலஞ்சம் கொடுத்தும் இதிலிருந்து தப்ப இயலாது.
(உ) ‘மலரும் நிழலும்’ (காண். யோபு 14:2). ‘உண்மையில் மானிடர் புல்லே ஆவர். புல் உலர்ந்து போகும். பூ வதங்கி விழும்!’ (காண். எசா 40:7-8). மனிதரின் நிலையாமை, குறுகிய வாழ்வு நிலை இங்கே எடுத்துரைக்கப்படுகிறது.
(ஊ) ‘தூக்கம்’ (காண். யோவா 11:11-14. மாற் 5:39). இலாசரின் இறப்பு பற்றித் தம் சீடர்களிடம் சொல்கிற இயேசு, ‘இலாசர் தூங்குகிறான்’ என்கிறார். யாயிரின் மகள் உயிர்பெறும் நிகழ்விலும், ‘சிறுமி உறங்குகிறாள்’ என்கிறார் இயேசு.
புனித அகுஸ்தினார், தன் ‘ஒப்புகைகள்’ நூலில், தன் தாய் மோனிகாவின் இறப்பைப் பதிவு செய்யும் இடத்தில் குறிப்பிடும் விடயம் நமக்கு விடை தருகின்றது.
‘என் தாய் இறந்த பின்னர் அவரை நாங்கள் அவருடைய கணவருக்கு அருகில் அடக்கம் செய்ய வேண்டும் என நினைப்பார் என்று எண்ணினோம். ஆனால், அவரோ, ‘என்னை எங்கு வேண்டுமானாலும் அடக்கம் செய். ஆனால், பீடத்தில் என்னை நினைக்க மறவாதே. என் ஆண்டவர் என்னை எங்கிருந்தும் உயிர்ப்பிக்க வல்லவர்’ என்றார்.’
அகுஸ்தினாரின் இந்தப் பதிவு நமக்கு மூன்று விடயங்களைச் சொல்கின்றது:
(அ) நம் இறப்புக்குப் பின்னர் உடல் ஒரு பொருட்டு அல்ல. அல்லது, உடல் இறந்துவிடுகிறது. ஆன்மா வாழ்கிறது.
(ஆ) இறந்தவர்களை நாம் இறைவேண்டலில் நினைவுகூர வேண்டும்.
(இ) இறந்த நாம் அனைவரும் உயிர்ப்போம். நம்மை உயிர்ப்பிக்க ஆண்டவரால் மட்டுமே இயலும்.
ஏறக்குறைய இந்த விடயங்களைத்தான் இன்றைய நாளில் நாம் நினைவுகூருகின்றோம். ‘மனித ஆன்மா அழிவுறுவதில்லை’ என்ற நம்பிக்கை சமயங்களைக் கடந்த ஒன்றாகவும், பல மெய்யிலாளர்களின் கூற்றாகவும் உள்ளது. ஆன்மா அணிந்துகொள்ளும் ஆடைதான் உடல். அல்லது, ஆன்மா குடியிருக்கும் வாடகை வீடுதான் உடல். பொய்யுடல் அழியத்தான் வேண்டும். கண்ணுக்குத் தெரியாத அந்த ஆன்மா நம் கண்களுக்குப் புலப்படாத ஓர் இடத்தில் அல்லது ஒரு நிலையில் வாழ்கின்றது. அந்த நிலையில் அது இறைவனில் இளைப்பாறுகிறது.
இன்றைய முதல் வாசகத்தில், ‘நீதிமான்களின் ஆன்மாக்கள் கடவுளின் கையில் உள்ளன. கடுந்தொல்லை எதுவும் அவர்களைத் தீண்டாது’ என்கிறார் சாலமோனின் ஞானநூல் ஆசிரியர். நம் கையில் இருந்த நாம் ஆன்மா, நம் இறப்பின்போது கடவுளின் கைகளுக்குள் செல்கிறது. அவருடைய கைகளில் இருக்கும் ஆன்மா பாதுகாப்பு பெறுகிறது. இதையொட்டியே இயேசுவும், ‘அனைவரும் என்னிடம் வருவர்!’ என மொழிகிறார். இறுதிநாளில் அனைவருடைய ஆன்மாக்களும் இயேசுவிடம் செல்லும் என்றும், அனைவரும் இயேசுவில் நிiலாழ்வு பெறுவர் என்னும் நம்பிக்கையையும் தருகிறது நற்செய்தி வாசகம். இறப்பு வழியாகவே நாம் மறுவாழ்வுக்குப் பிறக்கிறோம் என்பதை இன்றைய இரண்டாம் வாசகத்தில் கற்பிக்கிற பவுல், ‘கிறிஸ்துவோடு நாம் இறந்தோமாயின் அவரோடு வாழ்வோம் என்பதே நாம் கொண்டுள்ள நம்பிக்கை’ என்கிறார்.
(அ) வாழ்வின் நிலையாமை
இங்கு வந்தவர் எல்லாம் அங்கு செல்ல வேண்டும் என்பது வாழ்வின் எதார்த்தம். அவர்கள் சென்றுவிட்டார்கள், நாம் செல்வோம் என்பதும் எதார்த்தம். நாம் இன்று கல்லறைகளில் ஏற்றும் மெழுகுதிரி உருகி மறைவது போல, நம் வாழ்க்கை ஒவ்வொரு நாளும் உருகி மறைகின்றது. நாம் ஏற்றும் அகர்பத்திகள் புகையாய் காற்றில் மறைவது போல, நாமும் மறைகின்றோம். ஆனால், அதுவரை நாம் எரிகின்றோம். அதுவரை மணம் வீசுகின்றோம். ஒவ்வொரு நாளையும் இனிமையாக நிறைவாக வாழக் கற்றுக்கொள்தல் வேண்டும்.
(ஆ) இறப்புக்குப் பின் உள்ள வாழ்வை நிர்ணயிப்பது இறப்புக்கு முன் உள்ள வாழ்வே
இறப்புக்குப் பின் உள்ள வாழ்வைப் பற்றிப் பல நேரங்களில் சிந்திக்கும் நாம் இறப்புக்கு முன் உள்ள வாழ்வை மறந்துவிடுகின்றோம். இந்த வாழ்வே அந்த வாழ்வைத் தீர்மானிக்கிறது எனில், குறுகிய இந்த வாழ்வை நன்முறையில் வாழ்தல் நலம்.
(இ) இறப்பில் நாம் தனியர்கள் இல்லை
இறப்பு ஒரு கொடிய அனுபவமாக இருக்கக் காரணம் அதை நாம் தனியாக அனுபவிக்க வேண்டிய நிர்பந்தம்தான். ஆனால், இறப்பில் நாம் தனியாக இல்லை. நம்மை நினைவுகூர உறவினர்கள் மற்றும் நண்பர்கள் இருக்கிறார்கள் என்பதை இன்றைய நாள் நமக்குக் கற்றுக்கொடுக்கிறது. இறந்த நம் முன்னோர்களுடன் நாம் இறைவேண்டலில் துணைநிற்பது போல, நம்மோடும் நமக்குப் பின் வரும் தலைமுறையினர் துணைநிற்பர். ஆக, இறப்பு நம்மை ஒருபோதும் பிரித்துவிடவோ, தனித்துவிடவோ இயலாது. இன்றைய நாளில் நாம் முடிந்தவரை பல இறந்தோரை நினைத்துப் பார்ப்போம்.
இறுதியாக,
‘நீ மண்ணாய் இருக்கிறாய். மண்ணுக்கே திரும்புவாய்’ (தொநூ 3:19) என்று ஆண்டவராகிய கடவுள் ஆதாமுக்கு மொழிந்த சொற்களுடன் தொடங்குகிற விவிலியம், ‘அவர்களுடைய கண்ணீர் அனைத்தையும் அவர் துடைத்துவிடுவார். இனிமேல் சாவு இராது. துயரம் இராது. அழுகை இராது. துன்பம் இராது’ (திவெ 21:4) என்னும் சொற்களுடன் நிறைவு பெறுகிறது. இறப்புக்கும் இறவாமைக்கும் இடையே உள்ள பயணத்தில் இடைநிற்பவர்களோடு இணைந்து நிற்கிற நாம் அவர்களுக்காக இறைவேண்டல் செய்வோம். அவர்கள் விட்டுச் சென்ற விழுமியங்களை நம் வாழ்வில் ஏற்றுமகிழ்வோம்.
‘அனைவரும் என்னிடம் வருவர்!’ – இவை இயேசுவின் சொற்கள் மட்டுமல்ல, கல்லறையின் சொற்களும் கூட. கல்லறைக்குச் செல்தல் பயமில்லை. ஏனெனில், கல்லறையிலிருந்து நம்மை உயிர்ப்பிக்க வல்லவர் கடவுள். நம்மைக் காண்கிற கடவுளை நாம் அங்கேதான் காண்கிறோம் (காண். தொநூ 16).
நிலையான அமைதியை இவர்களுக்கு அளித்தருளும் ஆண்டவரே! முடிவில்லாத ஒளி இவர்கள்மேல் ஒளிர்வதாக! இறந்த நம்பிக்கையாளர்களின் ஆன்மாக்கள் இறைவனின் அருளால் நிலையான அமைதியைக் கண்டடைவார்களாக! ஆமென்.
அருள்திரு யேசு கருணாநிதி
மதுரை உயர்மறைமாவட்டம்
இரக்கத்தின் தூதுவர்
Share: