• 044-26428162
  • dbdeepagam@gmail.com
Logo

Sermons

அனைவரும் விருந்துக்கு! இன்றைய இறைமொழி. ஞாயிறு, 20 அக்டோபர் ’24

Sunday, October 20, 2024   Fr. Yesu Karunanidhi   Archdiocese of Madurai

Daily Catholic Lectio இன்றைய இறைமொழி Ordinary Time

இன்றைய இறைமொழி
ஞாயிறு, 20 அக்டோபர் ’24
ஆண்டின் பொதுக்காலம் 29-ஆம் ஞாயிறு
உலக மறைபரப்பு ஞாயிறு

எசாயா 53:10-11. எபிரேயர் 4:14-16. மாற்கு 10:35-45

 

அனைவரும் விருந்துக்கு!

 

இன்றைய ஞாயிற்றை உலக மறைபரப்பு ஞாயிறு எனக் கொண்டாடுகிறோம். இந்த ஆண்டுக் கொண்டாட்டத்துக்காக திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வழங்கியுள்ள தலைப்பு, ‘நீங்கள் சென்று, அனைவரையும் விருந்துக்கு அழைத்து வாருங்கள்!’ (மத் 22:9). இப்பொழுது நடந்துகொண்டிருக்கிற மாமன்றத்தின் இரண்டாம் அமர்வின் பின்புலத்தில் அனைவரையும் உள்ளடக்கிய திருஅவையை நாம் உருவாக்க வேண்டும் என்று இதன் பொருள் விரிகிறது.

 

இன்றைய நற்செய்தி வாசகத்தில், ‘மானிட மகன் தொண்டு ஏற்பதற்கு அல்ல, மாறாகத் தொண்டு ஆற்றுவதற்கும் பலருடைய மீட்புக்கு ஈடாகத் தம் உயிரைக் கொடுப்பதற்கும் வந்தார்’ என்று தம் பணியின் நோக்கம் பற்றிக் குறிப்பிடுகிறார் இயேசு. இயேசுவின் விருந்தோம்பல் அனைவருக்குமானதாக இருக்கிறது. இயேசு தம்மையே விருந்தாகப் படைக்கிறார்.

 

நற்செய்தி வாசகத்தில், இயேசுவும் அவருடைய சீடர்களும் ‘எருசலேமுக்குப் போகும் வழியில் சென்றுகொண்டிருக்கின்றார்கள்’ (காண். மாற் 10:32). எருசலேம் என்பது இயேசுவின் பணிவாழ்வின் இடம்சார் இலக்காகவும், அவருடைய பணி முடிந்து விண்ணேற்பு அடையும் நிகழ்வாகவும், திருத்தூதர்கள் தங்கள் பணியைத் தொடங்கும் தொடக்கப்புள்ளியாகவும் இருக்கின்றது. ஆக, எருசலேம் நோக்கிய பயணம் இயேசுவுக்கும் திருத்தூதர்களுக்கும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கிறது. தம் பயண இலக்கை நெருங்குகின்ற வேளையில் இயேசு தம் பாடுகள் மற்றும் இறப்பை மூன்றாம் முறையாக அறிவிக்கின்றார்.

 

முதல் இரண்டு முறை அவர் அறிவித்தபோது சீடர்கள் அதைத் தவறாகப் புரிந்துகொண்டது போல இம்முறையும் தவறாகவே புரிந்துகொள்கின்றனர். முதல் முறை அறிவித்தபோது, பேதுரு இயேசு துன்பம் ஏற்பதைத் தடுக்கின்றார். இரண்டாம் முறை அறிவித்தபோது, சீடர்கள் தங்களுக்குள்ளே, ‘யார் பெரியவர்?’ என்ற கேள்வியை எழுப்பி போட்டி போடுகின்றனர். மூன்றாம் முறை அறிவித்தபோது, திருத்தூதர்கள் யாக்கோபும் யோவானும் இயேசுவை அணுகிச் சென்று, ‘நீர் அரியணையில் இருக்கும்போது எங்களுள் ஒருவர் உமது வலப்புறமும் இன்னொருவர் உமது இடப்புறமும் அமர்ந்துகொள்ள எங்களுக்கு அருளும்’ என்று வேண்டுகின்றனர்.

 

இந்த இரண்டு சீடர்களும் பாராட்டுக்குரியவர்கள்: (அ) தங்கள் வாழ்க்கையில் தங்களுக்கு எதை தேவை என்பதை அறிந்தவர்களாக இருக்கிறார்கள். (ஆ) தங்களுக்குத் தேவையானதைப் பெற்றுக்கொள்ள என்ன செய்ய வேண்டும், அதை யாரிடம் கேட்க வேண்டும் என்பதை அறிந்திருக்கிறார்கள். (இ) இயேசுவுக்கு அருகில் எப்போதும் இருக்க வேண்டும் என விரும்புகிறார்கள்.

 

அதே வேளையில் இவர்களுடைய இந்தக் கேள்வி எழுவதற்குக் காரணம் மூன்று அடிப்படையான மனிதக் கூறுகள்: (அ) முதன்மை உணர்வு: நாம் இயல்பாகவே நம்மையும் நம் கருத்துகளையும் எண்ணங்களையும் முதன்மைப்படுத்துபவர்களாக இருக்கிறோம். இந்த உணர்வின் வழியாகவே நாம் நம் தான்மையை நிலைநிறுத்துகிறோம். மற்றவர்களைவிட நான் ஏதோ வகையில் மேன்மையானவர் – பொருளாதாரத்தில், உழைப்பில், ஆள்பலத்தில், உடல்நலத்தில், சமூகநிலையில் என்ற எண்ணத்தில் வாழ்கிறோம். (ஆ) அதிகாரம் அல்லது ஆற்றல்: நமக்கு நிகழும் நேர்வுகளும் நம் கட்டுக்குள் இருக்க வேண்டும் என்பது நம் எதிர்பார்ப்பு. ஆள்களும் நிகழ்வுகளும் நம் கட்டுக்குள் இல்லாதபோது நாம் செயலிழந்து போகிறோம். (இ) பெருந்திட்டம். நம் வாழ்க்கைக்கான ஒரு பாதையை அமைத்து அந்தப் பாதையில் போக வேண்டும் எனத் திட்டம் தீட்டுகிறோம். எல்லாமே நம் கட்டுக்குள் இருக்க வேண்டும் என்று நினைப்பதே திட்டமிடுதலின் அடிப்படையான நோக்கம்.

 

நிகழ்வின்படி, யாக்கோபும் யோவானும் முதன்மை உணர்வு கொண்டிருக்கிறார்கள், இயேசுவைப் போல அதிகாரம் பெற்றிருக்க வேண்டும் என விரும்புகிறார்கள், தங்கள் வாழ்வுக்கான நீண்ட திட்டத்தை வகுத்துக்கொள்கிறார்கள்.

 

இன்னொரு பக்கம், இதை இயேசுவின் சோதனை நிகழ்வு என்றும் எடுத்துக்கொள்ளலாம். தங்களுக்கு அரியணையின் வலப்பக்கம் இடப்பக்கம் இடம் வேண்டும் என்று கேட்பதன் வழியாக, இயேசு அரியணையில் அமருமாறு அவரை மறைமுகமாகச் சோதிக்கிறார்கள்.

 

யூதச்சிந்தனையில் அரசரின் அரியணை என்பது முக்கியமானது. அந்த அரியணையும், அரியணையின் வலமும் இடமும் அதிகார மையங்களாக இருந்தன (காண். 1 அர 2:19. திபா 110:1). இயேசுவின் எருசலேம் நோக்கிய பயணம் உரோமை அரசை வீழ்த்தக் கூடிய அரச பயணம் என்று திருத்தூதர்கள் தவறாகப் புரிந்துகொள்கின்றனர். இயேசுவைத் தவறாகப் புரிந்துகொள்வதோடு, அதிகாரத்தின்மேல் ஆவல் கொள்பவர்களாகவும் இருக்கின்றனர் திருத்தூதர்கள்.

 

அவர்களின் புரிதலைச் சரிசெய்ய முயல்கின்ற இயேசு, ‘துன்பக் கிண்ணம்,’ மற்றும் ‘திருமுழுக்கு’ என்னும் இரு முதல் ஏற்பாட்டு உருவகங்கள் வழியாக அவர்களுக்குக் கற்பிக்கின்றார். ‘துன்பக் கிண்ணத்தில் பருகுதல்’ என்பது ‘துன்பங்களில் பங்கேற்பதையும்,’ ‘திருமுழுக்கு’ என்பது ‘இரத்தத்தினால் இயேசு பெறவிருக்கின்ற திருமுழுக்கையும்’ குறிக்கின்றது. திருத்தூதர்கள் கிண்ணத்தில் பங்கேற்கவும், திருமுழுக்கு பெறவும் தயாராக இருப்பதாகச் சொல்கின்றனர். பின்நாள்களில் அவர்கள் துன்பம் ஏற்கின்றனர். இயேசு சற்றே சிந்தனையை உயர்த்தி, ‘இடம்’ என்பதை இறுதிக்கால நிகழ்வோடு பொருத்திப் பேசுகின்றார்.

 

தொடர்ந்து, ‘அதிகாரம் என்பது தொண்டு செய்வதில் இருக்கிறது என்றும்,’ அல்லது ‘தொண்டு செய்பவரே ஆற்றல் பெற்றவராக இருக்கின்றார்’ என்றும் அறிவுறுத்துகின்றார். மண்ணுலகம் அதிகாரம் என்பதை நிமிர்ந்து அரியணையில் அமர்வது எனப் புரிந்துகொள்கின்ற வேளையில், ‘அதிகாரம்’ என்பது குனிந்து பணியாற்றுவதில் அடங்கியுள்ளது என விளக்குகிறார் இயேசு. மேலும், மானிட மகனின் வருகையின் இலக்கும் பணி செய்வதும், இறுதியில் தம் உயிரைக் கொடுப்பதுமே எனத் தெளிவுபடுத்துகின்றார்.

 

இன்றைய முதல் வாசகம் (காண். எசா 53:10-11) துன்புறும் ஊழியன் பாடல்களில் நான்காவதாக உள்ள பாடலின் (எசா 52:13-53:12) ஒரு பகுதியாக அமைந்துள்ளது. ‘துன்புறும் ஊழியன் யார்?’ என்பதற்கான விடை இன்று வரை தெளிவாக இல்லை. கிறிஸ்தவப் புரிதலில், ‘துன்புறும் ஊழியன்’ என்பவர் வரவிருக்கின்ற மெசியாவையும் (இயேசு) அவர் அனுபவிக்கின்ற துன்பத்தையும் குறிப்பதாக நாம் எடுத்துக்கொள்கின்றோம். துன்புறும் ஊழியன் அநீதியாகத் தண்டிக்கப்படுகின்றார், துன்பம் அடைகின்றார், நிந்தையும் அவமானமும் அவர்மேல் சுமத்தப்படுகின்றது. இத்துன்பத்தை அவர் மற்றவர்களுக்காக அடைகின்றார். துன்பத்திலும் இறைவனின் துணையைக் கண்டுகொள்கின்றார். ஆக, துன்புறும் எவரும் தன் முகத்தை இத்துன்புறும் ஊழியனின் முகத்தோடு பொருத்திப் பார்க்க முடியும்.

 

இரண்டாம் வாசத்தில் (காண். எபி 4:14-16), எபிரேயருக்கு எழுதப்பட்ட மடலின் ஆசிரியர், இயேசுவைத் தனிப்பெரும் தலைமைக்குருவாக முன்வைத்து, இயேசுவின் இக்குருத்துவத்தின் இயல்பு அவருடைய இரக்கத்தில் இருக்கிறது என முன்மொழிகின்றார். முதல் ஏற்பாட்டில் தலைமைக்குரு என்பவர் மக்களிடமிருந்து தனியாக இருக்கக் கூடியவர். ஏனெனில், ஆலயத்தின் திருத்தூயகத்திற்குள் அவர் நுழைவதால் தூய்மையற்ற மக்களிடமிருந்தும், இடத்திலிருந்தும் அவர் எப்போதும் தன்னையே தனிமைப்படுத்திக்கொள்வார். மேலும், மற்றவர்களுடை பாவம் அல்லது வலுவின்மையை அவர் பொறுத்துக்கொள்ள மாட்டார். ஆனால், இயேசுவோ தன்னை மக்களோடு மக்களாக இணைத்துக்கொள்வதுடன், மக்களின் வலுவின்மை, நொறுங்குநிலை கண்டு அவர்கள்மேல் இரக்கம் காட்டுகின்றார். நம்மைப் போலவே சோதனைகளுக்கும் உட்படுகின்றார்.

 

தொண்டாற்றுதல், தற்கையளிப்பு, இரக்கம் காட்டுதல் என்னும் சொல்லாடல்கள் இன்றைய வாசகங்களின் சுருக்கமாக அமைகின்றன.

 

(அ) தொண்டாற்றுதல்

 

‘அதிகாரம் செலுத்துதல்’ என்னும் முதன்மை உணர்வை ‘தொண்டாற்றுதல்’ என்னும் முதன்மை உணர்வாக மாற்றச் சொல்கிறார் இயேசு. முதலாவது நிற்க விரும்பும் நான் கடைசியாக நிற்க வேண்டும் என்பது இயேசுவின் அறிவுரை. இப்படி நான் நிற்பதன் வழியாக, கடைநிலையைத் தெரிந்துகொள்வதன் வழியாக, மனப்பக்குவமும் முதிர்ச்சியும் பெறுகிறேன். மேலும், இது என்னுடைய தன்மதிப்பையும் கூட்டுகிறது. ஏனெனில், மதிப்பு என்பது வரிசையில் நான் எங்கே நிற்கிறேன் என்பதைப் பொருத்தோ, அல்லது மற்றவர்கள் என்னை எப்படிப் பார்க்கிறார்கள் என்பதைப் பொருத்தோ அல்ல, மாறாக, நான் என்னுடைய பார்வையிலும் கடவுளுடைய பார்வையிலும் எப்படி இருக்கிறேன் என்பதைப் பொருத்தே அமைகிறது என நான் கற்றுக்கொள்கிறேன்.

 

(ஆ) தற்கையளிப்பு

 

துன்புறும் ஊழியன் தனக்கென எதையும் பெற்றுக்கொள்வதில்லை, மாறாக, தன்னிடம் உள்ள அனைத்தையும், ஏன், தன்னையே முழுமையாகக் கொடுக்கிறார். இவருடைய தற்கையளிப்பு மற்றவர்களுக்கு நலம் தருவதோடு இவரையும் முழுமையாக மாற்றுகிறது. எடுத்துக்காட்டாக, என்னிடம் உள்ளதை நான் கொடுக்கத் தொடங்கும்போது என் உள்ளம் பேராசையிலிருந்து விடுதலை பெறுகிறது.

 

(இ) இரக்கம் காட்டுதல்

 

இயேசுவின் தலைமைக்குருத்துவம் அவருடைய இரக்கத்தால் வெளிப்படுகிறது. இயேசுவின் சிலுவை இறப்பினால் நாம் கடவுளின் இரக்கத்தையும் பெற்றுள்ளோம். நீதித்தீர்ப்பிடாத அவருடைய இரக்கம் அனைவரையும் கடவுளோடு ஒப்புரவாக்குகிறது.

 

‘அனைவரையும் விருந்துக்கு நாம் அழைக்க வேண்டுமெனில்’ மேற்காணும் மூன்று பாடங்களும் அவசியமாகின்றன. அதிகாரம் செலுத்துவதால் அல்ல, மாறாக, தொண்டாற்றுவதால்தான் நாம் மற்றவர்களை நம்மோடு இணைத்துக்கொள்கிறோம். விருந்தோம்பலில் தற்கையளிப்பு அவசியம். யாரையும் நீதித்தீர்ப்பிடாத இரக்கம் மற்றவர்களை நம்மை நோக்கித் தள்ளுகிறது.

 

இன்று நாம் கொண்டாடுகிற உலக மறைபரப்பு ஞாயிறு, நம் பாதுகாப்பு வளையத்திலிருந்து நம்மை வெளியேற்றட்டும். அனைவரையும் அரவணைத்துக்கொள்ளும் திறந்த உள்ளம் தரட்டும்!

 

அருள்திரு யேசு கருணாநிதி
மதுரை உயர்மறைமாவட்டம்
இரக்கத்தின் தூதுவர்

 

படம் நன்றி: பாப்பிறை மறைப்பணி நிறுவனங்கள் – இந்தியா

 


 

Share: