• 044-26428162
  • dbdeepagam@gmail.com
Logo

Sermons

அருளின் கனியே புனிதம். இன்றைய இறைமொழி. வெள்ளி, 1 நவம்பர் ’24.

Friday, November 1, 2024   Fr. Yesu Karunanidhi   Archdiocese of Madurai

Daily Catholic Lectio இன்றைய இறைமொழி Ordinary Time

இன்றைய இறைமொழி
வெள்ளி, 1 நவம்பர் 2024
ஆண்டின் பொதுக்காலம் 30-ஆம் வாரத்தின் வெள்ளி
திருவெளிப்பாடு 7:2-4, 9-14. 1 யோவான் 3:1-3. மத்தேயு 5:1-12அ.
புனிதர் அனைவர் பெருவிழா

 

அருளின் கனியே புனிதம்

 

‘புனிதம் அல்லது தூய்மை என்பது கடவுளின் அருளுக்கு நாம் செய்யும் தொடர் பதிலிறுப்பு எனவும், அவரின் அருளைப் பெற்ற நாம் அவருக்குக் கொடுக்கும் கனிகள்.’

 

இன்று புனிதர் அனைவர் பெருவிழாவைக் கொண்டாடி மகிழ்கிறோம். பயணம் செய்யும் திருஅவை, துன்புறும் திருஅவை, மகிமை பெற்ற திருஅவை, என்னும் நம் திருஅவையின் மூன்று நிலைகளில் மூன்றாம் நிலையின் திருநாள் இது. இவர்கள் தூய்மை அல்லது புனித நிலையை அடைந்தவர்கள். திருஅவையின் அட்டவணையில் வராதவர்கள், ஆனால், புனித வாழ்வை வாழ்ந்தவர்களின் திருநாள் இன்று!

 

இன்றைய முதல் வாசகத்தில் (காண். திவெ 7:2-4,9-14), திருவெளிப்பாடு நூல், கடவுளின் புனித மக்கள் பற்றிய வியத்தகு காட்சியை நம்முன் கொண்டுவருகிறது. கடவுளின் புனித மக்கள் இரு குழுவினர்களாக இருக்கின்றனர். முதல் காட்சியில், அல்லது முதல் குழுவில் உள்ளவர்கள் ‘முத்திரையிடப்பட்டவர்கள்.’ முத்திரை என்பது ஒருவருக்கு அது உடைமை என்பதையும், ஒருவர் அதன்மேல் உரிமை கொண்டாடுகிறார் என்பதையும் குறிக்கிறது. 144 ஆயிரம் மக்கள் அவ்வாறு முத்திரையிடப்பட்டுள்ளதாக யோவான் காண்கிறார். முத்திரையிடப்பட்ட இவர்கள் அனைவரும் கடவுளின் மக்கள். இங்கே, ‘144’ என்பது ஓர் உருவக அல்லது அடையாள எண். இஸ்ரயேலின் 12 குலங்களும், அவற்றின் வழி மரபுகளாக 12 ஆயிரம் மக்களின் பெருக்கல் தொகையே 144 ஆயிரம் (காண். திவெ 7:5-8). இந்த முதல் குழு இஸ்ரயேல் மக்களைக் குறிக்கின்றது. இந்த மக்களையே கடவுள் தன் சொந்த மக்களினமாகத் தெரிந்துகொண்டு தமக்குப் பணி செய்யவும், தம் செய்தியை அனைத்துலக்குக்கும் அறிவிக்கவும் பணித்தார் (காண். விப 19:5-6).

 

இரண்டாம் குழுவினர் ‘வெண்மையான தொங்கலாடை அணிந்தவர்கள்.’ இவர்கள், ‘கொடிய வேதனையில் இருந்து மீண்டவர்கள். தங்களின் தொங்கலாடைகளை ஆட்டுக் குட்டியின் இரத்தத்தில் துவைத்து வெண்மையாக்கிக் கொண்டவர்கள்.’ இவர்கள் கிறிஸ்துவைப் பின்பற்றியவர்கள், கிறிஸ்துவுக்காகத் துன்பம் ஏற்றவர்கள். அவர்களின் வெண்ணிற ஆடை தூய்மை மற்றும் வெற்றியைக் குறிக்கிறது. கிறிஸ்துவைப் போல அவர்கள் இருந்ததால் அவர்கள் செம்மறியின் விருந்தில் பங்கேற்கின்றனர். அவர்கள் இப்போது அனுபவிக்கும் புனிதம் அல்லது தூய்மை என்பது கடவுள் அவர்களுக்கு அளித்த கொடை. இஸ்ரயேல் மக்கள் கடவுளால் முத்திரையிடப்படுகிறார்கள். கிறிஸ்தவர்கள் அனைவரும் பாஸ்காச் செம்மறியின் இறப்பால் புனிதப்படுத்தப்படுகிறார்கள்.

 

புனித யோவான் எழுதிய முதல் திருமுகத்திலிருந்து எடுக்கப்பட்டுள்ள இரண்டாம் வாசகம் (காண். 1 யோவா 3:1-3), கடவுளின் அன்பு மற்றும் அன்பின் விளைவுகள் பற்றிச் சிந்திக்கும் அழைப்போடு தொடங்குகிறது. யோவானின் குழுமத்தினர் கிறிஸ்தவ நம்பிக்கையை ஏற்றதால் துன்புறுகின்றனர். ஆனால், அத்துன்பம் தற்காலிகமானது என்றும், நம்பிக்கையாளர்களின் நோக்கம் தூய்மையை அடைவது என்றும் அறிவுறுத்துகின்றார் யோவான்.

 

நற்செய்தி வாசகத்தில் (காண். மத் 5:1-12), மத்தேயு நற்செய்தியில் காணும் மலைப்பொழிவின் தொடக்கப் பகுதியை வாசிக்கின்றோம். எட்டு பேறுபெற்ற நிலைகள் இங்கே முன்வைக்கப்படுகின்றன. இவற்றின் நோக்கம் கடவுளின் ஆசீரை நமக்கு வழங்குவதும், அதன் வழியாக நம்மைப் புனிதத்துக்கு இட்டுச் செல்வதுமே.

 

முதல் நான்கு பேறுபெற்ற நிலைகள் நம்பிக்கையாளரைக் கடவுளோடும், இரண்டாவது நான்கு பேறுபெற்ற நிலைகள் நம்பிக்கையாளர்களை ஒருவர் மற்றவரோடும் இணைக்கின்றன. முதலில், ‘ஆன்மீக ஏழ்மை அல்லது எளிமை’ முன்வைக்கப்படுகிறது. இது ஒருவர் கடவுள்மேல் கொண்டுள்ள சார்புநிலையைக் குறிக்கிறது. இரண்டாவது, துயருறுவோர் பற்றியது. துயரம் கடவுள் தரும் மீட்பை முன்குறிக்கிறது. மூன்றாவது பேறுபெற்ற நிலை திபா 37:11-இலிருந்து எடுக்கப்பட்டுள்ளது. கனிவுடையோர் நாட்டை உரிமையாக்கிக்கொள்கின்றனர். நாடு என்பது கடவுள் அளிக்கும் கொடை. நான்காவது, நீதிக்கான ஏக்கம் கொள்வோர் பெறும் நிறைவை எடுத்துச் சொல்கிறது. நீதி என்பது கடவுளோடும், ஒருவர் மற்றவரோடும் ஒருவர் ஏற்படுத்திக்கொள்ளும் சரியான உறவுநிலையைக் குறிக்கிறது.

 

ஐந்தாவது, இரக்கம் காட்டுபவர் இரக்கம் பெறுவார். இரக்கம் என்பது ஒருவர் மற்றவர்மேல் காட்டும் உடல் மற்றும் உள்ளம்சார் அன்பைக் குறிக்கிறது. நீதியையும் தாண்டிச் செல்கிறது இரக்கம். ஆறாவதாக, தூய்மையான உள்ளம் என்பது ஒருவரின் நாணயத்தையும், நம்பகத்தன்மையையும் காட்டுகிறது. உறவுகளில் தூய்மையாக இருக்கும் இவர்கள் கடவுளின் திருமுன்னிலை நோக்கி ஈர்க்கப்படுவார்கள், ஏனெனில், கடவுள் தூயவராக இருக்கிறார். ஏழாவது, அமைதியை ஏற்படுத்துவது. அமைதி என்பது ஒருங்கிணைந்த இசைவு நிலை. அந்த இசைவு நிலையில் ஒருவர் இந்த உலகத்தோடு தான் கொண்டுள்ள இணைப்பைக் கண்டுணர்கிறார். எட்டாவது பேறுபெற்ற நிலை, நீதியின் பொருட்டுத் துன்புறுத்தப்படுபவர் பற்றிப் பேசுகிறது. இவர்கள் கடவுளுக்குப் பிரமாணிக்கமாய் இருப்பதால், கடவுளின் அரசில் பங்கேற்கின்றனர்.

 

நற்செய்தி வாசகப் பகுதி, ‘மகிழ்ந்து அக்களியுங்கள்’ என்ற வாழ்த்தோடு நிறைவுறுகிறது. இந்த வார்த்தைகளைக் கொண்டே திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், புனிதம் பற்றிய திருத்தூது ஊக்கவுரையை (2018) எழுதுகின்றார்.

 

ஆக, முதல் வாசகத்தில், கடவுளின் அருளை அனுபவித்தவர்கள் அவருக்காக மறைசாட்சியம் ஏற்றதால் கனி தருகின்றனர்.

 

இரண்டாம் வாசகத்தில், புனிதம் என்பது நாம் அடைய வேண்டிய இலக்காக வரையறுக்கப்படுகின்றது.

 

நற்செய்தி வாசகம், பேறுபெற்ற நிலைகளை முன்வைப்பதுடன், மகிழ்ச்சிக்கான இயேசுவின் அழைப்பே புனிதத்தின் தொடக்கம் என முன்வைக்கிறது.

 

பதிலுரைப் பாடல் ஆசிரியரும், இதையொட்டி, ‘ஆண்டவரை நாடுவோரின் தலைமுறையினர் இவர்களே’ (காண். திபா 24) எனத் துள்ளிக் குதிக்கின்றார்.

 

புனிதர் அனைவர் பெருவிழா நமக்கு விடுக்கும் சவால்கள் எவை?

 

(அ) புனிதநிலைக்கான அழைப்பு அனைவருக்கும் உரியது

 

‘அவருக்கும் இவருக்கும் புனிதநிலை சாத்தியம் என்றால், எனக்கு ஏன் சாத்தியமில்லை?’ எனக் கேட்டார் புனித லெயோலா இஞ்ஞாசியார். புனிதர்கள் வானிலிருந்து கீழே இறங்கி வந்தவர்கள் அல்லர். மாறாக, நம்மைப் போல இவ்வுலகில் வாழ்ந்து, நமக்கு முன்னர் கடந்துசென்றவர்கள். இவர்கள் தாங்கள் பெற்ற அருளுக்கு ஏற்ற கனிகளைத் தந்தார்கள். புனித ஜான் மரிய வியான்னி சொல்வதுபோல, ‘இவர்கள் சரியாகத் தொடங்கவில்லை என்றாலும் மிகச் சரியாக முடித்தார்கள்.’ நாம் இன்று இருக்கிற வாழ்க்கை நிலை (குழந்தை, இளவல், வயது முதிர்ந்தவர்) எப்படிப்பட்டதாக இருந்தாலும், அழைப்புநிலை (அருள்பணியாளர், துறவியர், பொதுநிலையினர்) எப்படிப்பட்டதாக இருந்தாலும் நம்மால் புனிதநிலையை அடைய முடியும். புனிதர்கள் நம் விண்ணப்பங்களைப் பெற்றுத் தரக் கூடியவர்கள் என்று அவர்களை அந்நியப்படுத்திவிடாமல், அவர்களைப் போல மதிப்பீடுகளை நமதாக்கக் கற்றுக்கொள்வோம்! புனிதம் பற்றிய விழிப்புணர்வுடன் வாழும் அனைவரும் புனிதர்களே. நம் குடும்பத்தில் இறந்த நம் முன்னோர், நம் நடுவில் வாழ்வோர் என புனிதத்துக்கான நிறைய எடுத்துக்காட்டுகள் உள்ளன.

 

(ஆ) இன்னும் கொஞ்சம்! எக்ஸ்ட்ரா! என வாழ்வது

 

புனித நிலைக்கான பயணம் என்பது ‘இன்னும் கொஞ்சம் செய்வது! எக்ஸ்ட்ரா செய்வது!’ ‘இது போதும்!’ என நிறுத்திக்கொள்ளாமல் ‘இன்னும் கொஞ்சம்’ என இன்னோர் அடி எடுத்து வைப்பது. பயத்தால் பீடிக்கப்பட்ட மக்கள் நடுவே கொஞ்சம் எக்ஸ்ட்ரா துணிச்சல் கொண்டார் செபஸ்தியார். தான் ஒதுக்கப்பட்ட நேரத்தில் பொறுமை காத்தார் பதுவை நகர் அந்தோணியார். நிறைய வைத்துக்கொள்ள வேண்டும் என நினைத்தவர்கள் முன்பாக அனைத்தையும் இழக்கத் துணிந்தார்கள் வனத்து அந்தோணியாரும் அசிசி நகர் பிரான்சிஸூம். சேரி மக்களுக்கு என்ன செய்ய முடியும் எனக் கேட்டவர்கள் நடுவில் கொஞ்சம் எக்ஸ்ட்ரா செய்தார் அன்னை தெரசா. கொஞ்சம் எக்ஸ்ட்ரா இறைவேண்டல், ஆன்மிகம், தன்மறுப்பு, தியாகம், மனத்திடம், இறையன்பு, பிறரன்பு எனக் கொஞ்சம் கொஞ்சமாக வாழ்ந்தார்கள்! இறுதிவரை புனிதராக வாழ முடியுமா? என்று நாம் கேட்பதை விடுத்து, இன்று நான் புனிதராக வாழ முடியுமா? எனக் கேட்டால் போதும்.

 

(இ) நாம் எப்படி இருக்கிறோம் என்பதல்ல, எப்படி மாறுகிறோம் என்பதே முக்கியம்!

 

நம் இறந்தகாலமோ அல்லது நிகழ்காலமோ அல்ல, மாறாக, நம் எதிர்காலமே புனிதத்துவப் பயணத்தின் தளம். நாம் எப்படி இருந்தோம், இருக்கிறோம் அல்ல, மாறாக, எப்படி மாறுகிறோம் என்பதைப் பொருத்தே நம் மதிப்பு உயர்கிறது. மாற்றம் கூடக்கூட மதிப்பு கூடுகிறது. பால் மதிப்பு மிக்கதுதான். ஆனால், அது தயிராக மாறினால் அதன் மதிப்பு கூடுகிறது. வெண்ணெய் அல்லது பாலாடைக் கட்டியானால் இன்னும் கூடுகிறது. பால்கோவா, பால் அல்வா எனத் திண்பண்டப் பொருளானால் மதிப்பு இன்னும் கூடுகிறது. நெய்யாக மாறும் போது உச்சகட்ட மதிப்பு பெறுகிறது. ஆனால், இந்த ஒவ்வொரு நிலையிலும் பால் தன்னையே மாற்றத்துக்கு உட்படுத்துகிறது. மிக மதிப்புக்குரியதாக மாறவேண்டுமெனில் மிகவும் மாற வேண்டும் என்பதே பாடம். நம் வாழ்வு மாற்றத்துக்கான ஓர் இலக்கே புனிதம்.

 

‘புனிதம் அல்லது தூய்மை என்பது கடவுளின் அருளுக்கு நாம் செய்யும் தொடர் பதிலிறுப்பு எனவும், அவரின் அருளைப் பெற்ற நாம் அவருக்குக் கொடுக்கும் கனிகள்.’

 

நிற்க.

 

‘புனிதர்களின் சமூக உறவை நம்புகிறேன்’ என்னும் நம்பிக்கை அறிக்கை வாக்கியத்திற்கு விளக்கம் தருகிற ‘கத்தோலிக்கத் திருஅவையின் மறைக்கல்வி’, ‘புனிதர்களின் சமூக உறவு கிறிஸ்துவில் இறந்த அனைத்துப் புனிதர்களையும் குறிக்கிறது. கிறிஸ்துவில் அனைத்து நம்பிக்கையாளர்களும் இணைந்திருக்கிறார்கள். இந்த உலகில் பயணம் செய்யும் நாம், தூய்மைபெற வேண்டிய நிலையில் உள்ளவர்கள், மற்றும் விண்ணுலகில் வாழும் பேறுபெற்றவர்கள் என அனைவரும் இணைந்ததே திருஅவை. இந்த ஒன்றிப்பின் வழியாகவே புனிதர்கள் நமக்காகப் பரிந்துபேசுகிறார்கள்’ (எண்கள். 961-962).

 

அருள்திரு யேசு கருணாநிதி
மதுரை உயர்மறைமாவட்டம்
இரக்கத்தின் தூதுவர்

 


 

Share: