இன்றைய இறைமொழி
திங்கள், 13 ஜனவரி ’25
பொதுக்காலம் முதல் வாரம் – திங்கள்
எபிரேயர் 1:1-6. திருப்பாடல் 97. மாற்கு 1:14-20
அறிவிப்பும் அழைப்பும்
திருவருகைக்காலம், கிறிஸ்து பிறப்புக் காலம் முடிந்து பொதுக்காலத்துக்குள் நாம் நுழைகிறோம். எதிர்நோக்கு, அமைதி, மகிழ்ச்சி, அன்பு என்னும் மதிப்பீடுகளையும், கிறிஸ்து பிறப்பு நிகழ்வில் கடவுளின் உடனிருப்பையும் உணர்ந்த நாம், அருளுக்கு மேல் அருள் பெற்ற நாம் அந்த அருளை அசை போட்டவர்களாக பொதுக்காலத்தில் நுழைவோம்.
நற்செய்தி வாசகம், ‘அறிவிப்பு’, ‘அழைப்பு’ என்னும் இரு பகுதிகளாக அமைந்துள்ளது. முதல் பகுதியில், ‘இறையாட்சி நெருங்கிவந்துவிட்டது’ என அறிவிக்கிறார் இயேசு. இரண்டாவது பகுதியில் தம் பணிக்காக முதற்சீடர்களை அழைக்கிறார். அழைக்கப்பட்டவர்கள் உடனடியாகப் பதிலிறுப்பு செய்கிறார்கள்.
(அ) நற்செய்தியை நம்புங்கள்
‘மனம் மாறுங்கள்’ என்னும் யோவானின் செய்தியை, ‘மனம் மாறி நற்செய்தியை நம்புங்கள்’ என நீட்சி செய்கிறார் இயேசு. இங்கே ‘நற்செய்தி’ என்பது இயேசுவின் சொற்களையும், இயேசுவையும் குறிக்கிறது. இயேசுவில் நிறைவேறிய இறைவெளிப்பாட்டை எடுத்துரைக்கிறார் எபிரேயருக்கு எழுதப்பட்ட திருமடலின் ஆசிரியர் (முதல் வாசகம்). ஒவ்வொரு முறை நற்செய்தியை வாசிக்கும்போதும் அறிவிக்கும்போதும் நம் பதிலிறுப்பு என்ன?
(ஆ) எதிர்பாராத வருகை
இயேசு சீடர்களுக்கு அளிக்கிற அழைப்பு எதிர்பாராத நிலையில், நேரத்தில் அவர்கள் தங்கள் வேலையில் ஈடுபட்டிருந்தபோது வருகிறது. கடவுளின் குறுக்கீடு நம் வாழ்வுக்கு தொந்தரவாக அல்ல, வாழ்வுக்கான மாற்றமாக வருகிறது. எதிர்பாராத வருகையை நாம் கண்டுகொள்கிறோமா?
(இ) விட்டுவிடுதலும் பின்பற்றுதலும்
சீடர்கள் தங்கள் உறவுகளையும் பணியையும் பணியாள்களையும் விட்டுவிட்டு இயேசுவைப் பின்பற்றுகிறார்கள். மீன்பிடித்துக் கொண்டிருந்தவர்களின் பார்வையை விரிவுபடுத்துகிற இயேசு, அவர்களுடைய வாழ்க்கையின் நோக்கம் மேன்மையானது என்பதை உணர்த்துகிறார். ‘மனிதர்களைப் பிடித்தல்’ என்பதை இயேசு இப்போது செய்கிறார். இதே போல மனிதர்களை இறையாட்சிக்குள் கொண்டுவருவது சீடர்களின் பணி ஆகும்.
அருள்திரு யேசு கருணாநிதி
மதுரை உயர்மறைமாவட்டம்
இரக்கத்தின் தூதுவர்
Share: