இன்றைய இறைமொழி
சனி, 22 மார்ச் ’25
தவக்காலம் இரண்டாம் வாரம் – சனி
மீக்கா 7:14-15, 18-20. திருப்பாடல் 103. லூக்கா 15:1-3, 11-32
அறிவு தெளிந்தவராய்!
‘தனித்திரு, விழித்திரு, பசித்திரு!’ – ஆன்மிக விடுதலைக்கான வழியை இம்மூன்று சொற்களால் முன்மொழிகிறார் வள்ளலார்.
தவக்காலத்தில் நாம் மேற்கொள்ளும் ‘நோன்பு, இறைவேண்டல், பிறரன்புச் செயல்கள்’ வள்ளலாரின் சொற்களோடு இணைந்து செல்கின்றன. ‘நோன்பு’ மேற்கொள்ளும்போது நாம் பசித்திருக்கிறோம். ‘இறைவேண்டலில்’ விழித்திருக்கிறோம். ‘பிறரன்புச் செயல்களில்’ தனித்திருந்து ஒருவர் மற்றவரோடு நெருக்கத்தை ஏற்படுத்திக்கொள்கிறோம்.
இன்றைய நற்செய்தி வாசகத்தில், ‘ஒரு தந்தையும் இரண்டு மகன்களும்’ எடுத்துக்காட்டை வாசிக்கிறோம். தொலைதூரம் சென்ற இளைய மகன் தந்தையிடம் திரும்பி வருகிறார். தந்தையோடு நெருக்கமாக இருந்த மூத்த மகன் தொலைதூரம் செல்கிறார்.
‘பசி, அறிவுத் தெளிதல், புறப்படுதல்’ – இந்த மூன்று பாடங்களை இன்று நமக்கு இளைய மகன் கற்றுத் தருகிறார்.
‘பன்றிகள் தின்றும் நெற்றுகளால் பசியாற்றினார்’ – இளைய மகனுக்கு இல்லத்தின் நினைவு அவருடைய பசியின்போது வருகிறது.
‘அறிவுத் தெளிதல்’ – இளைய மகன் இல்லத்தைவிட்டுப் புறப்பட்டது என்னவோ உணர்ச்சியவயத்தால்தான். ஆனால், தொலைதூரத்தில் அறிவுத் தெளிகிறார். தந்தையிடம் திரும்புவதற்கு முன்பாக தன்னை நோக்கியே திரும்புகிறார் இளைய மகன். மனமாற்றம் என்பது நாம் ஆய்ந்தறிந்து முடிவெடுப்பதே அன்றி, பதற்றத்தால் செயலாற்றுவது அல்ல!
‘புறப்படுதல்’ – பசித்தாலும், அறிவு தெளிந்தாலும் அதே இடத்தில் அமரவில்லை இளைய மகன். புறப்படுகிறார். அவருடைய அந்தச் செயல்பாடுதான் தந்தையோடு மீண்டும் அவரை இணைக்கிறது.
பசித்திருந்தார் இளைய மகன். அறிவுபெற்று விழித்தார். தனித்துப் புறப்பட்டார்.
இதற்கு எதிர்மாறாக, மூத்தமகன் வயிறு நிறைந்திருந்தார். வெறும் உணர்வுகளால் உந்தப்பட்டார். தந்தையோடு இணைந்தே இருந்தார்.
இல்லத்தில் தந்தையும் தனித்திருக்கிறார். இளைய மகனின் வருகையை எதிர்நோக்கி இருக்கிறார். ஓடுகிறார், பரிவு கொள்கிறார், மகனை அணைத்துக்கொள்கிறார். எந்தவொரு தீர்ப்பிடுதலும் இன்றி வெறுங்கையனாய் வந்த மகனை அப்படியே அள்ளிக்கொள்கிறார்.
தவமுயற்சிகள் வழியாக நம்மையே நெறிப்படுத்திக்கொண்டிருக்கும் நாம் மீண்டும் மீண்டும் நோன்பு, இறைவேண்டல், பிறரன்புச் செயல்கள் நோக்கித் திரும்புவோம்.
இன்றைய முதல் வாசகத்தில், ஆண்டவராகிய கடவுள் இஸ்ரயேல் மக்கள்மேல் காட்டுகிற இரக்கத்தை எடுத்துரைக்கிறார் இறைவாக்கினர் மீக்கா.
அருள்திரு யேசு கருணாநிதி
மதுரை உயர்மறைமாவட்டம்
இரக்கத்தின் தூதுவர்
Share: